Saturday, January 15, 2005

 

உளவியல்சீரமைப்புப் பணி குறித்து...

ட்சுனாமி வலைப்பதிவில் இடும்படி கோரி மதி அனுப்பியிருந்ததை இங்கு வலைபதிவர்களுக்காக உள்ளிடுகிறேன் - கார்த்திக்

நன்றி: மரத்தடி யாகூ குழுமம்
_______________________________________________________________________
இரு வாரங்களுக்கு முன்பு இக்குழுமத்திலும் திண்ணை இணையத்திலும் பேரழிவுச்சீரமைப்பில் உளவியல் கண்ணோட்டம் குறித்து எழுதியிருந்தேன். இது குறித்துதகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள்மின்மடல் மூலம் தொடர்பு கொண்டு சீரமைப்புப் பணிகளில் உளவியல் பங்குகுறித்து தகவல் தெரிவித்திருந்தனர். அனைவருக்கும் எனது நன்றிகள்.
மும்பையில் மகரிஷி தயானந்த் கல்லூரியில் உளவியல் துறைப் பேராசிரியைதிருமதி. சுந்தரி அவர்களுக்கு வந்த அழைப்பின் பேரில், பதினெட்டுமாணவர்கள், இரு பேராசிரியைகள் கொண்ட குழு குளச்சல் நோக்கி உளவியல்சீரமைப்பிற்காகப் புறப்பட்டிருக்கிறது. இப் பதினெட்டு மாணவர்களில்பதின்மர் உளவியல் துறை மாணவர்கள்.மற்ற ஆறு மாணவர்கள் மற்றத் துறைகளைச்சார்ந்தவர்கள். கல்லூரி இயக்குனர் திருமதி.வர்மா அவர்கள் முயற்சியால்,கல்லூரி நிர்வாகம் ,இக்குழுவின் போய்வரும் செலவை ஏற்றுக்கொண்டிருக்க,தனியார் நிறுவனங்கள் மற்ற செலவுகளை ஏற்க முன்வந்திருக்கின்றன.
பேராசிரியை திருமதி சுந்தரி அவர்கள் , இக்குழுவின் உளவியல்சீரமைப்புப் பணி குறித்துத் தந்த தகவல்கள் இவை.உளவியல் சீரமைப்பை இக்குழு இரு வழிகளில் கையாளுகிறது.

1. உளவியல் ஆலோசனை (counselling). பள்ளி மாணவ மாணவியர்மத்தியில் , ஊக்கம் அளிக்கவும், தெளிவாக வாழ்க்கையை எதிர்நோக்கவும் ,தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாணவன்/மாணவியையும் இக்குழுவின் அங்கத்தினர்அருகி, ஆலோசனை வழங்குவர். முக்கியமாக, 10 வது, 12-வது வகுப்புமாணவ/மாணவியரை கூர்ந்து கவனித்து ஆலோசனை வழங்குவது என்பதுதிட்டமிடப்பட்டிருக்கிறது.

2. உளவியல் மருத்துவம் (therapy). மிகப்பாதிக்கப்பட்ட மக்கள் ( சிறுகுழந்தைகள், பெண்கள்) அடையாளம் காணப்பட்டு, உளவியல் ரீதியான மருத்துவம்அளிக்க இக்குழு தயாராக இருக்கிறது. இதற்கு தேவையான உளவியல் மருந்துகள்சேகரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற நாடுகளில் நிகழ்ந்தபேரழிவில் தேவைப்பட்ட மருந்துகள், மருத்துவ முறை, ஆலோசனைமுறை முதலியனகவனமாக ஆராயப்பட்டு, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இடத்தின் கலாச்சார,சமூக,பொருளாதார அடிப்படையில் மாற்றப்பட்டு இச் சீரமைப்புவடிவமைக்கப்பட்டுள்ளது.அனுபவம் வாய்ந்த டாக்டர்.திருமதி. சுந்தரி அவர்களும், மும்பையின்Instititute of Psycho therapy"-ஐச் சார்ந்த முதுவியல் மாணவர்கள்ஆறு பேரும் , தனித்தனியான ( one to one) ஆலோசனையும்,சிகிச்சைக்கான ஆயத்தங்களும் மேற்கொள்வர். ஒரு நாளைக்கு நூறு பேர்சீரமைப்புப்பணியில் சிகிக்சை அளிக்கப்பட வேண்டும் என திட்டம்வகுக்கப்பட்டுள்ளது.
இச்சீரமைப்புப்பணியில் எடுத்துக்கொள்ளப்படும் முறைகள்:

1. இசை மூலம் அமைதிப்படுத்துதல்.
2. மன அமைதிப்படுத்தும் பிற முறைகள் ( இது குறித்து விளக்கம்கிடைக்கவில்லை.சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது)3.EMDR ( Eye Movement Desensitisation and Reprocessing ) என்ற உளவியல் முறை சிகிக்சையாக PTSR ( PostTrauma Stress Disorder ) என்னும் மனச் சோர்விற்காகஅளிக்கப்படும். பெரும்பாலான சீரழிவுகளின் சீரமைப்பில் இவ்வணுகுமுறைகையாளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நேரக்குறைவால், இவ்வணுகுமுறை குறித்துபேராசிரியை. சுந்தரி அவர்களிடம் கேட்டுப் பின் விரிவாகஎழுதலாமென்றிருக்கிறேன்.
இது தவிர சிறுகுழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள், உணவு,மாணவ/மாணவியருக்கான எழுது கருவிகள் முதலியன நன்கொடையாகவசூலிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
இக்குழுவின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.தகவல் திரட்டித் தந்ததற்கு நன்றிகள் - பேராசிரியை. திருமதி.ஸ்ரீவரமங்கை, கணனித்துறை,மகரிஷி தயானந்த் கல்லூரி, லோவர் பரேல்,மும்பை
இக்குழுவின் அனுபவங்களை , விரிவாகப் பின் பகிர்ந்துகொள்வோம்

அன்புடன்
ஸ்ரீமங்கை ( க.சுதாகர்)_______________________________________________________________________________________

 

இலங்கையில் சிறுவர் இல்லங்கள்

சுனாமி தாக்கிய பிரதேசங்களில் இப்போது இரண்டாம்,மூன்றாம் கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.இவ்வேளையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள்,unicef போன்றவை பேரலைத் தாக்குதலில் தாய் தந்தையரை இழந்த பல்லாயிரக்க்ணக்கான சிறுவர்கள் பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளன.அத்துடன் நின்றுவிடாமல் சிறுவர்களின் பாதுகாப்பு,கடத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல்,அவர்களது உரிமைகளைப் பேணல் ஆகியவற்றில் பொது அமைப்புகள் ஈடுபடுகின்றன.

மீட்புப்பணிகளுடன் கூடவே நாம் இழந்துவிட்ட ஒரு தலைமுறைச் சிறுவர்கள் பற்றியும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பற்றியும் வலைப்பதிவாளர்களும் பிரதிபலித்திருக்கிறார்கள்.
பெயரிலி மற்றும் ரோசாவசந்த் குறிப்பிட்டதைப் போன்று சிறுவர்களைத் தத்தெடுத்தலானது அவசர அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய பணியல்ல என்பதே எனது கருத்தும்.

சடுதியாக நடைபெற்ற சம்பவத்தின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறாத பிஞ்சுகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு வழிவகையாக தத்தெடுத்தல் அமையுமாயினும் அது அவர்களிடம் பெருமளவிலான உளத்தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.
முக்கியமாக வெளிநாட்டிலுள்ளவர்களின் தத்தெடுக்கும் குழந்தைகள் போய்ச்சேரும் போது வேரறுத்து மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட சிறு செடியின் நிலையிலேயே அவர்களும் இருப்பார்கள்.முற்றிலும் புது இடம் வேற்று மனிதர்கள் இவ்வாறான பல சூழ்நிலைகளால் தத்தெடுப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மனவேற்றுமைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உண்டு.

பெரியவர்களைப் போன்று இந்தா இதுதான் நான் உனக்குச் செய்யக்கூடிய உதவி என்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடமுடியாது அதே நேரம் விட்டுவிடவும் முடியாது.இதையே சாக்காக வைத்து தத்தெடுத்தல் என்ற பெயரில் சிறுவர்களை பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு விற்பதில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.மத அமைப்புகள் சிலவும் அனாதை இல்லங்கள் என்ற பெயரில் நாலைந்து பிள்ளைகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக தடுத்து வைத்து வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு கணக்குக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன.இவ்வாறு செய்த மதகுரு ஒருவர் கிழக்கிலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.பிள்ளைகள் ஏற்கனவே இயங்கி வந்த இல்லமொன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

இது நிலைமையின் தீவிரத்தையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.சிறுவர்களைப் பாதுக்காப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொருநாளும் சில பத்துச் சிறுவர்கள் கடத்தப்படவோ பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாகிக்கொண்டிருக்கக்கூடும்.

தத்தெடுத்தல் என்பது நீண்டகால அடிப்படையில்(ஆறுமாதமாக இருந்தால் கூட)திட்டமிடப்படவேண்டிய விடயம்.உள,பொருளாதார நிலைகளை வைத்தே தீர்மானிக்கப்படவேண்டிய விடயம்.ஆனால் உடனடியாகச் செய்யவேண்டிய உதவிகள் பல இருக்கின்றன.

நண்பர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிவிட்டதால் நான் இலங்கையைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.
கிழக்கிலங்கையில் ஏற்கனவே சில சிறுவர் இல்லங்கள் நம்பிக்கை தரும் விதத்தில் இயங்கி வந்துள்ளன.
விபுலானந்தா,கதிரொளி ஆகிய இல்லங்கள் மட்டக்களப்பிலும் அன்பு இல்லம் திருகோணமலையிலும் இயங்கி வருகின்றன.இவை தவிர சிறு சிறு இல்லங்கள் மத மைப்புகள் சார்ந்தும் ஊர்மக்களால் நடத்தப்படும் அமைப்புகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை காலமும் போரினால் தாய்தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் கடற்பேரலையானது ஆயிரக்கணக்கான சிறுவர்களை ஒரேயடியாக அனாதையாக்கிவிட்டுள்ளது.மட்டக்களப்பு அம்பாறையில் மட்டும் 500 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாய்தந்தையரை இழந்துள்ளார்கள் அதே போன்று முல்லைத்தீவிலும் 300 இற்கும் மேற்பட்டோர் தாய்தந்தையரை இழந்துள்ளனர்.

இந்த திடீர் எண்ணிக்கை அதிகரிப்பைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஏற்கனவே இருந்த இல்லங்களில் வலு இருப்பதாகத் தெரியவில்லை அதிகப்படியாக ஒவ்வொரு இல்லமும் பத்து அல்லது இருபது பேரையே புதிதாகச் சேர்க்கக்கூடிய நிலையிலிருப்பதாக நண்பரொருவர் குறிப்பிட்டார்.

ஆகவே சிறுவர்களைத் தற்காலிகமாகப் பராமரிப்பதற்காகவாவது சிறுவர் இல்லங்களை அமைக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
இதற்காக செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தை நாடுவதே எனக்குச் சரியான தெரிவாகப் படுகின்றது.

ஏற்கனவே யாழில் இருந்த செஞ்சோலை இல்லத்தின் கிளையொன்று எனது வீட்டிற்கு அருகிலிருந்தமையால் பெற்ற அனுபவத்தின் மூலம் அங்கு பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நூறுவீத உத்தரவாதம் உண்டு என நம்புகிறேன்.முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் செஞ்சோலையின் கிளைகள் உள்ளன,அவை தவிர விடுதலைப்புலிகளால் நேரடியாக நிர்வகிக்கப்படும் காந்தரூபன் அறிவுச்சோலை என்னும் அமைப்பும் உண்டு.
இவற்றின் கிளைகளை கிழக்கிலங்கையிலும் ஆரம்பிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுப்பதும் அப்படி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் முழுமூச்சுடன் உதவிகளைத் திரட்டி வழங்குவதுமே இப்போதைக்குச் செய்யவேண்டிய பணி.

செஞ்சோலையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை இதுவிடயமாக தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன்.இயலாத பட்சத்தில் உதவிப்பணிகளுக்காகப் போயிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் இவ்விடயத்தை செஞ்சோலை நிர்வாகத்தினருடன் பேசச்சொல்லிக் கேட்கவிருக்கிறேன்.தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் முழுமையான விபரங்களை அறியத் தருகிறேன் உங்கள் உதவிகளை புனர்வாழ்வுக்கழகம் ஊடாகவே மேற்கொள்ளலாம்

உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்
 

மீன் சாப்பிடலும் மீனவர் மறுவாழ்வும்

இம்முறை திருக்கோணமலை போயிருந்தபோது அங்கே பலத்த சேதமடைந்த மூதூர், கிண்ணியா பிரதேசங்களுக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.

மூதூரி படகுத்துறையடியை அண்மித்த ஒரு மிகச்சிறிய தீவு போன்ற பரப்பில் மட்டும் 300 இற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.
அதில் அறபு மத்ரசா ஒன்றில் பயின்றுகொண்டிருந்த சிறுவர்களும் அடக்கம்.

கிண்ணியாவில், தோணா பகுதியில் வைத்தியசாலை (கிண்ணியா பிரதான வைத்தியசாலை) முற்றாகவே சேதமடைந்திருக்கிறது.
அங்கே மொத்தம் அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனார்கள்.

பொதுவாகவே தாக்கப்பட்டவை எல்லாம் கரையோரப்பகுதிகள் என்பதால் மீனவர்கள்தான் அதிக சேதத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மீன்பிடி வள்ளங்களுக்கு காப்புறுதி எடுக்கவேண்டும் என்று கூட தெரியாத, தமிழ்நாட்டு, இலங்கை மீனவர்களும் இதிலடக்கம்.

மூதூர் கிண்ணியா பகுதியில் ஏதிலிகளாகியுள்ள ஏழை முஸ்லிம் மீனவர்களின் நிலை மிகப் பரிதாபகரமாகவுள்ளது.

அன்றாடம் கடலுக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலையில் வாழ்பவர்கள் அவர்கள்.

ஏழ்மை காரணமாகவே கரையோர மணலின் மேல் பாதுகாப்பற்ற குடியிருப்புக்களை அமைத்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏறபட்டுள்ளது.

சேதத்தின் அளவு மிகப்பெரிதாக இருப்பதற்கு, பாதுகாப்பற்ற கட்டட அமைப்புக்களே பிரதான காரணம்.

மறுவாழ்வு பற்றி பேசி, முனைப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில், மீனவர் மறுவாழ்வு பற்றிய எனது கவனிப்பு ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது இங்கே கொழும்பில் கடைகளில் மீன் இல்லை.

யாரும் மீன் சாப்பிடுவதில்லை.
கருவாடும் படிப்படியாக சமையறைகளை விட்டு அருகிவருகிறது.

கொழும்பில் இருக்கும் இந்த நிலை, இலங்கை பூராகவும் மீன்பிடித்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சியை தெளிவாகவே காண்பிக்கிறது.

மீனவர்களுக்கு மறுவாழ்வழித்தலை, அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் மட்டும் எத்தனை நாட்களுக்கு செய்துகொண்டிருப்பது?
மீனவர்கள் வாழ்க்கையை முன்னரைவிட சிறப்பான நிலைக்கு கொண்டுவருதலே ஆக்கபூர்வமான மறுவாழ்வளிப்பாக இருக்கும்.

மீன்பிடித்தொழில் இவ்வாறு வீழ்ச்சிகண்டிருக்கும் போது அவர்கள் வாழ்வு வழமைக்கு எப்படி திரும்பும்.

மீன் சாப்பிடக்கூடாது என்ற மனநிலை, மூட நம்பிக்கைகளை அடிப்டையாகக்கொண்டதாகவே எனக்குப் படுகிறது.
இது பற்றி இத்துறைசார் வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது.

மீன் சாப்பிடலாம இல்லையா?

இந்தக்கேள்விக்கு, பொதுவான உயிரியல் மருத்துவ, மீன்பிடியியல் விளக்கங்களை விட , கள ஆய்வு முடிவுகளே பெறுமதியான பதிலாக இரூக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை யாராவது செய்ய முன்வருவார்களானால் நல்லது,

மீன்பிடிப்பிரதேசம் ஒன்றில் உள்ள மீன்களை ஆய்வு செய்து, அதனை பொதுமக்கள் சாப்பிடலாமா இல்லையா என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பணி முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது,

இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமிடத்து ஊடகங்கள் நிச்சயமாக நல்ல ஒத்துழைப்பினைத்தரும்.

மீன்சாப்பிடலாம் என்ற முடிவு பெறபடுமிடத்து அதனை ஊடகங்கள் வாயிலாக பரப்புரைக்கலாம்.

மீனவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணிகளில் முதன்மையானதாக இதனைச் செய்வது ஆக்கபூவமானது. அவசரமானது.

இலங்கைக்குமட்டுமல,
சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து கரையோர நாடுகளுக்கும்.

Friday, January 14, 2005

 

கனடிய பிரதமர் வன்னிக்கு போக ..

(போன பதிவின் ஆன்மா இணையலோகத்தில் ஐக்கியமாகி விட்டதால் மீண்டும் இடுகிறேன், அருண் சொன்னபடி தலைப்பை கொஞ்சம் வெட்டி-ரோவ.)

கனடிய பிரதமர் வன்னிக்கு போக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த...

கனடிய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது அவர் வன்னிக்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா ? என பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கை அரசும் வேறு சிலரும் சேர்ந்து அவரின் பயணத்தை அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள்ளேயே முடித்து கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தமிழ் மக்களாகிய நாம் எங்கள் உறுதியான வெளிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கீழ் தருகின்ற இலக்கத்துக்கு உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு. அங்கு உங்கள் தொடர்பையும் உங்கள் கருத்தையும் உறுதி செய்ய இலக்கம் 1 க்கு உங்கள் வாக்கை இட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

இலக்கம் 1 அழுத்தினால் - போல்மாட்டின் வன்னிபகுதிகளுக்கு செல்லவேண்டும்.

இலக்கம் 2 அழுத்தினால் - வன்னி பகுதிகளுக்கு செல்ல வேண்டியதில்லை.

தொலைபேசி இலக்கம் : 416 - 260 4005

நன்றி : கவிதன்.

(மாற்றி அழுத்திவிடாதீர்கள். கவிதன் 1 க்கு அல்லது 2க்கு , என்று எழுதியிருந்ததை 1 க்கு என்று மாற்றியிருக்கிறேன். ரோஸாவசந்த்.)

Thursday, January 13, 2005

 

மயிலாடுதுறையிலிருந்து....

சென்னையிலிருந்து புறப்பட்டு நேராக கரூர் சென்று 1740 Blankets (jதரைவிரிப்பு/மெகா சால்வை) பெற்றுக்கொண்டு மாலை நான்கு மணிக்குதான் மயிலாடுதுறை வந்து சேர்ந்தேன். பயண அனுபவங்கள் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.



1740 Blankets வாங்க போன இடத்தில் இரண்டு மூட்டை அரிசியையும் அன்போடு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் சரிவர விநியோகிப்பது கஷ்டமான காரியம்தான் என்று நினைத்தேன். இங்கே வந்தபின்புதான் தெரிந்தது அது ரொம்ப... ரொம்ப....கஷ்டமான காரியம்!



இதுவரை 220 Blankets விநியோகம் செய்திருக்கிறேன். எஞ்சியவை எங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வாணகிரி, சின்னங்குடி கிராமத்து பஞ்சாயத்து தலைவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு எல்லாவற்றையும் முழுவதுமாக விநியோகிப்பதை விட கையிருப்பில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விநியோகம் செய்வதே நல்லது என்று நினைக்கிறேன்.

தனியார்கள் யாரும் நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்குவது தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவித நிவாரணப் பொருட்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பெறப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு சிவில் சப்ளை குடோன்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. சிவில் சப்ளை குடோன்களிலிருக்கும் நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு முறையாக விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், பிரச்னைகளுக்கு காரணமே தாலுகா ஆபிஸிலிருந்து சிவில் சப்ளை குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அரசாங்க வழிமுறைகளில்தான். சில பொருட்கள் தவற விடப்படுகின்றன; பல பொருட்கள் தாமதாக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இன்று மாலைக்குள் நான் பார்த்தவரையில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பியிருக்கிறது. சுனாமி நிவாரணம் என்கிற பேனர் கட்டி தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்தெல்லாம் வந்து கொண்டிருந்த லாரி, வேன்களின் சத்தம் குறைந்திருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களின் வேலைப்பளு எகிறியிருக்கிறது. பொங்கல் விடுமுறை என்பது பெயரளவுக்குத்தான்!

சீர்காழி பகுதியை சேர்ந்த கடலோரப் பகுதி கிராமங்களில் நித்தம் ஒரு போராட்டம் நடந்து வருவதாக செய்தி. முன்கோபத்துக்கு பெயர் போன தமிழக அரசை சோதிக்கும் வேலைகளில் சிலர் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்.

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை ஆங்காங்கே இருந்த சுனாமி நிவாரண முகாம்கள் கலைக்கப்பட்டுவிட்டன. பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் உடனடி நிவாரண தொகையான ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. ஆளுக்கு ஒரு லட்சம் அளிக்கும் வேலையும் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

கடற்கரையிலிருந்து நூறு மீட்டர் தள்ளி தார் துணிகளான தற்காலிக கூடாரங்கள் தனித்தனியாக கட்டப்பட்டு அங்கே பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஓலைக் குடிசைகளும் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூடங்கள் சொற்ப மாணவர்களை கொண்டு இயங்குகின்றன.

மீனவர்கள் மத்தியில் சகஜ வாழ்க்கை திரும்பி விட்டது. கட்டுமரங்கள் கைவசமுள்ள மீனவர்கள் மீன்பிடிப்பில் இறங்கிவிட்டனர். மீனவ குடும்பங்களுக்கு தினசரி அரிசி, பருப்பு போன்றவை சிவில் சப்ளை குடோனிலிருந்து இரண்டு நாளைக்கொரு முறை சப்ளை செய்யப்படுகின்றன.

சுனாமி பாதுகாப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை ஆரம்பமாகி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்கள் மத்தியில் ஆலோசனைகள் நடந்து வருவதாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். நேற்று மாலை கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த மாலன் ஸாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சுனாமி எச்சரிக்கை மையங்களின் அவசியம் பற்றி விரிவாக திசைகளில் எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தார். இவ்விஷயத்தில் அரசு கொஞ்சம் அவசரம் காட்டுவது நல்லது. தனியார் அமைப்புகளும் மீனவர்களுக்கு கட்டுமரம் வாங்குவது, பழைய துணி கொடுப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் இதுபோன்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, செயல்படுவது நல்லது என்பது அடியேனின் அபிப்பிராயம்.

மீனவ குடும்பங்களின் கைகளில் தேவைக்கதிகமான பணம் உள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் எளிதான வழிமுறையில் பணங்களை டெபாசிட் செய்வதற்கு இனியாவது ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம் இந்த 'கொசுறு'வாக கூட இருக்கலாம்!

கொசுறு - தமிழகத்தின் கடலோர கிராமங்களின் டாஸ்மாக் மையங்களில் எந்நாளும் இல்லாத வகையில் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை அதிகரித்திருப்பதாக ஒரு செய்தி.

- ஜெ. ரஜினி ராம்கி

Wednesday, January 12, 2005

 

யோசனைகளும் கருத்துகளும்:கார்த்திக்

1. நான் யோசித்த அளவு, மீனவர்கள் பாதிப்பு , அவர்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து அதிகம் வலைப்பதிவுகளிலோ
ஊடகங்களிலோ இல்லை. ஏன்? இதற்கு மீனவர்களுடன் ஆன தொடர்பு கொண்டவர்கள் யாரும் நமக்கு தெரியவில்லை. சென்னை மற்றும் பிற மீனவர்களின் வாழ்க்கை நிலை என்ன? யாருக்கேனும் ஏதேனும் தெரியுமா?

2. ரஜினிராம்கி சொன்னதில், கறி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். ஒரு வாரத்துக்கும் மேல் நிவாரண உணவு சாப்பிட்டு அலுத்திருப்பார்கள். இதற்காக வெல்லாம் மனம் வருத்தப்படாமல் இருக்க வேண்டுகிறேன். செய்யும் பணி மகத்தானது. எந்த குறிக்கோளையும் மனதில் கொண்டு செய்யாமல், மனிதத்தை முன் வைத்து செய்வது. ஆகவே அவரது பணிக்கு எனது வாழ்த்துகளும் யோசனைகளும் உண்டு. எங்கள் இணைய உற்சாகமூட்டல் எப்போதும் உண்டு.

3. மாலன் சொன்னதில், எளிதில் சாத்தியமுள்ள ஒன்று தபோவனத்தில் கணிணி அமைத்து தருவது(பின்னர், இணையம் அமைத்து தகவல்களை வெளியிடலாம் என்பது யோசிக்கலாம்). யாராவது வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலை கணினி கிடைத்தால் கொண்டு சென்று மாலனிடமோ/தபோவனத்திடமோ சேர்க்கலாம். நண்பர்கள் ஆகும் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.
முடிந்தால் குறைந்த விலை புதிய கணினி வாங்கலாம். முடியாத பட்சத்தில் உபயோகிக்கப்பட்ட நல்ல கணினி வாங்கித்தரலாம்.
மடி கணினி வாங்கினால் கொண்டு செல்லும் சிரமம் குறைவு.

4. பத்ரியிடம் கேட்கவேண்டியது. அமெரிக்க மேரிலாண்ட் TRO வை- தொடர்புகொண்டு ப்ரஷ்ஷர் செய்தால் மருந்துகள் பற்றி ஏதேனும் செய்ய முடியுமா தெரியவில்லை. முயன்று பார்த்து சொல்கிறேன். என்ன விவரம் எனக்கு தெரியவேண்டும் பத்ரி?

5. குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி ஒரு சராசரி NRI ஆக யோசித்தால் இப்படி தோன்றுகிறது. பலர் இதைவிட அதிகமாகவோ/குறைவாகவோ நினைத்தால் அதுப்பற்றி கலந்துரையாடி தெரிந்து கொள்ளலாம்.

1. சட்டப்பிரச்சினையை தூரத்தில்/வெளிநாட்டில் இருந்து கொண்டு கவனிப்பது முடியாத காரியம்.(அல்லது மிக கடினமானது)
2. தத்து எடுத்துக்கொள்வதில் தீவிரமாய் இருக்கும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தேவை.
3. யாராவது உள்ளூரில் பார்த்துக்கொள்ள ஆள்/அமைப்பு இருந்தால் தாரளமாக பண உதவி செய்ய முடியும்.
4. மாதத்துக்கு இவ்வளவு/ வருடத்துக்கு இவ்வளவு என்று பணத்தேவையை யாராவது வலைப்பதிவில்
(இந்த வலைப்பதிவில் இருந்தால் மிகவும் வசதியாய் இருக்கும்) சொல்வது அவசியம்.
அதைக் கொண்டு குறைந்த பட்சம், ஒரு வருடம் நான் அடுத்த வருடம் நீ என வலைப்பதிவர்களில் ஆர்வமிருப்பவர்கள்
செலவை எடுத்துக் கொள்ளலாம்.(உதாரணத்துக்கு சொல்லியிருக்கிறேன், 12 வருடம் கல்விக்கட்டணம் கட்ட நினைப்பவர்கள் தமது விருப்பபடி செய்யலாம்.)
1 வருடம் எனச் செய்ய நினைப்பவர்கள் பலர் சேர்ந்து சுற்று முறையில் செலவை பங்கெடுத்துக்கொள்ளலாம்.
இந்த உதவிப்பணங்களை பத்ரி போன்றவர்களிடம் கொடுத்து வைத்து பின்னர் அங்கே கட்டச் செய்யமுடியும்.


 

தத்தெடுக்க!

(தத்து எடுப்பது தொடர்பான பெயரிலியின் பதிவை முக்கியமானதாக பார்கிறேன். இதை ஒத்த குழப்பங்கள் எனக்கும் உண்டு. பெயரிலி எழுப்பியுள்ள ஐயங்கள் தீவிரமாய் விவாதிக்கபட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் மிகுந்த நிதானத்தையும் பொறுமையையும் மனதில் கொண்டு
செயல்பட வேண்டும் என்று நினனக்கிறேன்.

முக்கியமாய் "தத்தெடுத்தலுக்கும் முன்னதாக நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசரகாரியமாக குழந்தைகளின் உளநிலையை உலகோடு மீண்டும் ஒட்டிக்கொள்ள வைக்கும்வண்ணம் மீளமைவு செய்தலும் அப்படியான இடைக்காலத்திலே பொருளாதாரரீதியிலே அவர்களின் தேவைகளை நிறைவு செய்தலுமே மிகவும் முதன்மையாகின்றன. விரும்பினால், தத்து எடுத்துக்கொள்ள விரும்புகின்றவர்கள், தாம் தத்து எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ள குழந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திப் பேணிக்கொள்ளலாம்; அக்குழந்தைகள் தற்காலிகமாக வாழும் சூழ்நிலையிலே அதன் நிலையை மேம்படுத்த சிறிது காலத்துக்கு வசதிகளைப் பொருளாதார நிலையிலே (அக்குழந்தைகளைப் பாதுக்காக்கும் நிறுவனங்களூடாக) ஏற்படுத்த உதவலாம். காலப்போக்கிலே, குழந்தைகளை அவை ஏற்கனவே அறிந்த உணர்ந்த இரத்த உறவுகளிலே யாராவது தத்து எடுக்காத நிலையும் குழந்தைகள் உணர்வுநிலையிலும் தத்தெடுக்கவிரும்புவோரோடு பிணையுற்ற நிலையிலும் தத்துக்கொள்வது சிறப்பானதாகுமென்று படுகின்றது. " என்று சொல்வதை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

தகவல்ரீதியாய் தட்ஸ்டமில்.காமிலிருந்து கீழகண்டதை இங்கே பதிகிறேன் -ரோஸாவசந்த்.)

சுனாமியால் பாதிக்கப்பட்டு குடும்பத்தை இழந்து அநாதைகளாகி விட்ட குழந்தைகளைத் தத்து கொடுக்கும் பணியை தமிழக அரசின் சமூக நலத்துறை இன்னும் தொடங்கவில்லை.

இதற்கான அனுமதியை அரசு வழங்கியபின், தமிழகத்தில் தத்து கொடுப்பதற்காக அரசால் அங்கீகரிப்பட்ட 22 சமூக அமைப்புகள் மூலம் சுனாமியால் அநாதரவான குழந்தைகளைத் தத்தெடுக்க முடியும்.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு 12,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களது பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அநாதைகளாகியுள்ள.

இக் குழந்தைகளை அரசே தத்தெடுத்து வருகிறது. இக் குழந்தைகளுக்காக நாகை, கடலூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் காப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் முன் வந்தவண்ணம் உள்ளனர். தத்தெடுப்பது எப்படி, யாரை அணுக வேண்டும், முறைகள் என்ன என்ற கேள்விகளோடு பல இமெயில்கள் நமக்கு வந்தவண்ணம் உள்ளன.

தத்தெடுப்பது எப்படி என்பது குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குனர் மலர்விழியிடம் கேட்டபோது,

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்து கொடுப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் தத்து கொடுக்கலாம் என்ற முடிவை அரசு எடுக்கும்பட்சத்தில் அதை தமிழகத்தில் உள்ள 22 அமைப்புகள் மூலம் அரசு அமலாக்கும் என்றார்.

அவற்றின் விவரம்:

1.கில்டு ஆப் சர்வீஸ், 32, காஜா மேஜர் தெரு,
எழும்பூர், சென்னை8.
தொலைபேசி: 04428268565.
(இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

2. கர்ணப் பிரியாக் டிரஸ்ட், 7, ராஜகிருட்டிணா ராவ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை 18. தொலைபேசி: 04424355182. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

3. இன்ஸ்டிடியூட் ஆப் பிரான்சிஸ்கேன் மிஸ்ஸனரிஸ் ஆப் மேரி சொசைட்டி,
3, ஹோலி அப்போசல்ஸ் கான்வென்ட், பரங்கி மலை, சென்னை 16. தொலைபேசி: 04422345526 (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

4. கன்கார்ட் ஹவுஸ் ஆப் ஜீசஸ், சி 23, அண்ணா நகர் கிழக்கு, சென்னை 40. தொலைபேசி: 04426202498. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

5. கிறிஸ்ட் ஃபெய்த் ஹோம் பார் சில்ரன், 3/91, மேட்டு காலனி, மணப்பாக்கம், சென்னை16. தொலைபேசி: 0442520588. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

6. பாலமந்திர் காமராஜ் டிரஸ்ட், 126, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை17. தொலைபேசி: 04428267921. (இங்கு உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

7. மிஷனரிஸ் ஆப் சேரிட்டி, நிர்மலர் சிசு பவன், 79, வெஸ்ட் மாதா சர்ச் சாலை, ராயபுரம், சென்னை 13. தொலைபேசி: 04425956928. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

8. கலைச்செல்வி கருணாலயா சோசியல் வெல்பேர் சொசைட்டி, 3/பிபி1, மேற்கு முகப்பேர், சென்னை58. தொலைபேசி: 04426257779. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

9. மதராஸ் சோசியல் சர்வீஸ் கில்ட், 3/74, நெடுங்குன்றம், வண்டலூர், சென்னை98. தொலைபேசி: 04422378301. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

10. வாலண்டரி கோ ஆர்டினேட்டிங் ஏஜென்சி, 5, 3வது மெயின்ரோடு (மேற்கு), ஷெனாய் நகர், சென்னை 30. தொலைபேசி: 04426288677.

11.கிரேஸ் கென்னட் பவுண்டேஷன், 34, கென்னட் சாலை, மதுரை 1. தொலைபசி: 04522601767 (உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்).

12. பேமிலிஸ் பார் சில்ரன், 107, வள்ளலார் தெரு, போத்தனூர், கோவை. தொலைபேசி: 04222874235 (உள்நாட்டினர் வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்).

13. காங்கிரகேசன் ஆப் தி சிஸ்டர்ஸ் ஆப் தி கிரேஸ் ஆப் சேவ்நாட், தபால் பெட்டி எண் 395, பழைய குட்ஷெட் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2. தொலைபேசி: 04312700923.

14. செயின்ட் ஜோசப் சாரிட்டி இன்ஸ்டிடியூட், அடைக்கலபுரம், தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி: 04639245248. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

15. ஆனந்தா ஆசிரமம், தேன்கனிக்கோட்டை சாலை, எச்.சி.எப். போஸ்ட், மத்திகிரி, ஓசூர்635110. தொலைபேசி: 04344262324. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

16. கஸ்தூரிபா மருத்துவமனை, காந்திகிராமம், திண்டுக்கல்624302.
தொலைபேசி: 04512452328. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

17. கிளாரிட்டன் மெர்சி ஹோம், அழகு சிறை, பொன்மங்கலம் போஸ்ட், திருமங்கலம், மதுரை. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

நாகப்பட்டிணம்:

18. அவ்வை வில்லேஜ் வெல்பேர் சொசைட்டி, கீழ் வேளூர், நாகப்பட்டனம். தொலைபேசி: 043366275559. (இங்கு உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

19. திருநெல்வேலி சோஷியல் சர்வீஸ் சொசைட்டி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி: 04622578282. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

20. லைப்லைன் டிரஸ்ட், 8 இ, ரகுராம்காலனி, சேலம். தொலைபேசி: 04272317147. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

21. புவர் எக்கானமி அன்ட் சில்ரன் எஜுகேஷனல் சொசைட்டி, 70, 3வது தெரு, சிவாஜி காலனி, இடையர்பாளையம் போஸ்ட், கோவை. தொலைபேசி: 04222646225, 2405137. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

22. உமன் ஆர்கனைசேஷன் பார் ரூரல் டெவலப்மென்ட், பிபி எண்1, பாண்டமங்கலம் போஸ்ட், பி.வேலூர், நாமக்கல் மாவட்டம். குழந்தைகள் தத்தெடுப்புப் பிரிவு, 32, ஏ நார்த் தெரு, பொத்தனூர் போஸ்ட், பி.வேலூர், நாமக்கல் மாவட்டம். தொலைபேசி: 04268230960. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)


கடலூரில்:

கடலூர் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்து கொடுப்பு நிறுவனங்கள் எதுவும் இல்லை.

தத்தெடுக்க விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் மாவட்ட கலெக்டர் ககன்தீப் சிங்கை தொடர்பு கொள்ளலாம். 04142230999, 04142230651 tணி 54, 04142230666

தத்தெடுப்பதற்கான விதி¬முறைகள்:

யார் தத்தெடுக்கலாம்?

திருமணமான தம்பதியினர்.

தனி நபர்கள் (விதவைப் பெண்கள், திருமணமாகாதவர், சட்டப்படி விவாகரத்துப் பெற்றவர்கள்).

தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் ஒட்டு மொத்த வயது (கணவன், மனைவி) 85க்கு மிகாமலும், இதில் ஒருவரின் வயது 45க்கு மிகாமலும் இருக்க வேண்டும். (12 மாதத்திற்குள் உள்ள குழந்தையைத் தத்தெடுத்தால்).
தத்தெடுக்க விரும்பும் நபருக்கும், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையே 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.

தத்தெடுப்பதற்குத் தேவையான சான்றிதழ்கள்

1.தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் வயது சான்றிதழ்.

2.திருமணச் சான்றிதழ்.

3.வருமான சான்றிதழ்.

4.உடல் நலம் குறித்த மருத்துவச் சான்றிதழ்.

5.தம்பதியினர் சமீபத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட வண்ணப் புகைப்படம்.

6.சொத்து மற்றும் சேமிப்பு பற்றிய ஆவணங்கள்.

7.நன்கு அறிமுகமான 3 நபர்களிடமிருந்து கடிதங்கள்.

8.பெற்றோருக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கப் போகும் 2 நபர்களிடமிருந்து கடிதங்கள்.

மேலும், தத்தெடுப்பதில் தம்பதிகளுக்குள்ள ஆர்வம், கருத்து ஒற்றுமை, உடல் நலம் மற்றும் மன நலம், பொருளாதாரசமூகப் பின்னணி, குழந்தையை வளர்க்கும் திறன் ஆகியவை தத்துக் கொடுத்தலில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவோர் மேல் கூறப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொண்டு முதலில் விண்ணப்பம் தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தட்ஸ்டமில்.காம்

 

தத்து மேலே பட்டது

ரஜனி ராம்கி தத்தினைக் குறித்து எழுதியதன்பின்னே கடந்த இரு வாரங்களாக இதன்மேலே தோன்றியதை இங்கே குறிக்கிறேன். என்னை இரு கிழமைகளுக்கு முன்னாலே இது பற்றி எண்ண வைத்தவை, ஊழியலை வந்து இரு நாட்களுக்குப் பின்னால், இலங்கை சக்தி வானொலியினூடாக ஒருவர் பசறை என்னுமிடத்திருந்து தொலைபேசி, தனக்கு மூன்று வயதான ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் அதே வயதுடைய ஓர் ஆண்குழந்தையை இந்த நிர்க்கதியிலே தான் தத்து எடுக்க விரும்புவதாகவும் அப்படியான குழந்தையன்றைத்தேட, சக்தி வானொலி தனக்கு உதவமுடியுமா என்று கேட்டதும் மட்டக்கிளப்பு டச் பார் என்ற இடத்துக்குப் போன வத்தளையைச் சேர்ந்த இரு குழந்தைகளை ஒருவர் இந்த அலைநிகழ்வின் பின்னாலே, விற்றுவிட்டதாகவும் தேடித்தரும்படியும் அவர்களின் தாயார் கேட்டிருந்ததும்.

கடற்கோளினாலே பாதிக்கப்பட்டு, பெற்றோரினையோ அல்லது பாதுகாவலர்களையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பேசப்படுவது மிகவும் மகிழ்ச்சியினைத் தருகின்றது. இவர்களின் எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும் ஒரு நடைமுறைச்சாத்தியமாக, தத்து எடுப்பது முன் வைக்கப்பட்டிருக்கின்றது. தத்துக்கொள்ளுதல் என்பது சிறந்ததே என்றபோதுங்கூட, இந்தக்கடற்கோளினாலே பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாகத் (ஆறுமாத காலம் என்பதையும் அப்படியான காலவெல்லை என்றுதான் கருதுகின்றேன்) தத்தெடுத்தல் என்பதிலேயிருக்கும் சில நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைத் தத்தெடுக்க விரும்புகின்றவர்கள் கவனிக்கவேண்டுமென்று தோன்றுகின்றது. சட்டரீதியான சிக்கல்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.; அதனாலேயே, அண்மைய நிலவரத்தினை அவதானித்ததின் விளைவாகத் தோன்றிய நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைமட்டும் குறிக்கின்றேன். எம்மிலே பலருக்கு இந்த எண்ணங்கள் தோன்றியிருந்திருக்குமென்றாலும், அவற்றினை மேலே பேசுதல் குறித்து, இங்கே பொதுவிலே குறித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

உளநிலைச்சிக்கல்களை இரண்டு வகைகளாக இந்தச்சூழ்நிலையிலே அடக்கமுடியும்; ஒன்று, குறுகியகாலநோக்கிலே, குழந்தைகளின் உடனடிக்கால உளநிலையின் விளைவான சிக்கல்கள்; குழந்தைகளை குறைந்தபட்சம், திடீரென அநாதைகளான குழந்தைகளுக்கு அந்நிலையைச் சமித்துக்கொண்டு, உலகை எதிர்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். அதற்கு அதேபோன்ற சூழ்நிலையிலே, உளநிலையிலே இருக்கும் குழந்தைகளுடன் கூட இருப்பதே மிகவும் பொருத்தமானதாகும். 'தான் மட்டும் தனித்துப்போகவில்லை' என்ற உணர்வு ஏற்படவும் தன்னுட்சுருண்டுபோகாமல், சமுதாயத்துக்கு மீள வந்தடையவும் இப்படியான கூட்டுவாழ்க்கையும் கற்கையும் கொஞ்சக்காலத்துக்கேனும் கட்டாயமானதாகும். அடுத்ததாக, பாதிக்கப்பட்டு க் கொஞ்சக்காலத்துள்ளே (ஆறுமாதகாலமானாலுங்கூட) புதிதாக ஒரு குடும்பத்திலே போய் இணையும்போது, குழந்தை ஏற்கனவே நொந்திருக்கும் மனநிலையிலே புதியசூழலையும் எதிர்கொள்ளவேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகும் - குறிப்பாக, தத்தெடுத்துக்கொள்கின்றவர்களுக்கு ஏற்கனவே சொந்தக்குழந்தைகள் இருப்பின், அ·து மனவுறுதியினையும் கூடிவாழுதலையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனமுறிவினையே தான் இழந்த சொந்தப்பெற்றோரை நினைத்து ஏற்படுத்த உதவும். மேலும் கூடி இருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிலே சில உடனடியாகத் தத்தாக்கிப் போனால், ஏற்கனவே பாதுகாப்பு உணர்வு முற்றாகச் சேதமடைந்த உளநிலைப்பட்ட ஏனைய குழந்தைகள் தாழ்வுச்சிக்கலினாலே அழுந்தக்கூடிய அபாயங்கூட இருக்கலாம்.

மற்றது, நீண்டகாலப்போக்கிலே, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் தத்தெடுத்தவர்களும் எதிர்கொள்ளக்கூடிய உளச்சிக்கல்கள். தத்து எடுக்கவேண்டுமென்று நெடுங்காலமாக எண்ணி, அதற்கேற்ற வகையிலே தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டவர்கள் குறிப்பிட்ட அளவிலேயிருந்தாலுங்கூட, இன்றைய சூழ்நிலை அலையிலே அடித்துப்போகப்பட்டு மனம் நெகிழ்ந்து தத்து எடுத்துக்கொள்ள எண்ணுகின்றவர்களே பலர் என்று எனக்குத் தோன்றுகின்றது. இப்படியான இரண்டாவதுவகைப்பட்டவர்கள், கணத்தாக்கு உணர்ச்சியலை வடியச் சிறிதுகால அவகாசத்தினை எடுத்துக்கொண்டு, அதன்பின்னாலேயும் தாம் அப்படியான முடிவினை எடுப்பது சரியா என்று தம் முடிவினைத் தாமே உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அல்லது நீண்டகாலநோக்கிலே, இப்படியான தத்தெடுத்தல்கள் எவ்வகையிலும் சம்பந்தப்பட்ட இரு சாராருக்கும் நலம் பயக்காது. மேலும், குறிப்பாக, தமிழ்நாடு, இலங்கையைப் பொறுத்தமட்டிலே எனக்குப்படுவதென்னவென்றால், பால், மதம், மொழி, சாதி கடந்து தத்து எடுத்துக்கொள்ள முன்வரவேண்டும். அப்படி நிகழும் நேரத்திலே, அப்படியான தத்தினை சட்டம் ஏற்றுக்கொள்ளவும் தத்தெடுக்கின்றவர்கள்-தத்தெடுக்கப்படும் குழந்தைகள் இருவரும் நாளாந்த வாழ்க்கை நெருடாமல், இயல்பாக உணரும்வகையிலும் இருக்கவுங்கூடிய நிலை இருக்கவேண்டும். அப்படியான பரந்துபட்ட தத்து நிகழாத சந்தர்ப்பங்களிலே ஏதோவொரு வகையிலே சில குழந்தைகள் தங்களின் இழந்த பெற்றோரினது அடையாளங்கள் குறித்துத் தம் சுயம் மறுக்கப்படுகின்ற அவநிலையை உருவாக்குகின்றோமென்றாகின்றது.

நடைமுறைச்சிக்கல்களிலே, முக்கியமானதென்னவென்றால், நாம் இன்னமும் நிகழ்ந்தது என்னவென்று முழுமையாக அறிந்துகொள்ளாமல், பகுதியான அறிதலினையும் மீதிப்பகுதிக்குத் தெளிவின்மையையும் கொண்டிருப்பதனாலே ஏற்படுவது. குறிப்பாக, இலங்கையிலே இப்படியான நிலையைக் காண்கிறேன். குழந்தைகளுக்கு அவை அறிந்த உற்றார் உறவினர்கள், எதிர்காலத்திலே சட்டரீதியாக மட்டுமல்ல, இலகுவாக நம்பிக்கை கொள்ளக்கூடிய உணர்வுரீதியிலான பிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளக்கூடியவர்களாகலாம். அப்படியானவர்கள் குறித்த விபரங்களே சரிவர வந்தடையாத நிலை இருக்கின்றது. இப்படியாக ஏற்கனவே சேரக்கூடிய நம்பிக்கையான குழந்தைகளை அவசரப்பட்டுத் தத்து எடுத்துக்கொள்ள முயல்வது, நல்ல எண்ணத்தினைக் குறித்தாலுங்கூட, எதிர்காலத்திலே சட்டரீதியான, உளரீதியான கெடுதல்களை எவருக்குமே ஏற்படுத்திவிடக்கூடாது. தத்து எடுப்பவர்கள்கூட, சட்டம் ஒழுங்கினாலே தத்து எடுப்பதினை உறுதிசெய்துகொள்ளவேண்டும்; இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலே தத்து எடுத்துக்கொள்ளுதல், சட்டரீதியாக இப்படித்தான் வழிமுறை என்று வகுக்கப்பட்டிருக்கின்றபோதும், நடைமுறையிலே அப்படியாக பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே நடக்கின்றதா என்று தெரியவில்லை. இலங்கையிலே தற்காலிகமாக தத்தெடுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றதற்கும் தத்தெடுத்தலிலே உள்ள கோளாறுகளும் அதன்விளைவான குழந்தைகள் பண்டங்கள்போல கைகள் பரிமாறப்பட்டும் விற்கப்பட்டும் ஆகும் நிலை இருக்கின்றது. அப்படியான குழப்பகரமானதும் அபாயகரமானதுமான சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

அதனாலே, தத்தெடுத்தலிலே அவசரப்படலாமா என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால், குழந்தைகளைப் பொறுத்தமட்டிலே அவர்களின் நாளை பெற்றோருக்கு ஈடான நிரந்திரமான தீர்வொன்றினாலே நிச்சயப்படுத்தப்படவேண்டியதொன்றென்றாலுங்கூட, தத்தெடுத்தலுக்கும் முன்னதாக நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசரகாரியமாக குழந்தைகளின் உளநிலையை உலகோடு மீண்டும் ஒட்டிக்கொள்ள வைக்கும்வண்ணம் மீளமைவு செய்தலும் அப்படியான இடைக்காலத்திலே பொருளாதாரரீதியிலே அவர்களின் தேவைகளை நிறைவு செய்தலுமே மிகவும் முதன்மையாகின்றன. விரும்பினால், தத்து எடுத்துக்கொள்ளவிரும்புகின்றவர்கள், தாம் தத்து எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ள குழந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திப்பேணிக்கொள்ளலாம்; அக்குழந்தைகள் தற்காலிகமாக வாழும் சூழ்நிலையிலே அதன் நிலையை மேம்படுத்த சிறிது காலத்துக்கு வசதிகளைப் பொருளாதார நிலையிலே (அக்குழந்தைகளைப் பாதுக்காக்கும் நிறுவனங்களூடாக) ஏற்படுத்த உதவலாம். காலப்போக்கிலே, குழந்தைகளை அவை ஏற்கனவே அறிந்த உணர்ந்த இரத்த உறவுகளிலே யாராவது தத்து எடுக்காத நிலையும் குழந்தைகள் உணர்வுநிலையிலும் தத்தெடுக்கவிரும்புவோரோடு பிணையுற்ற நிலையிலும் தத்துக்கொள்வது சிறப்பானதாகுமென்று படுகின்றது.
 

குழந்தைகள் தத்து தொடர்பான சில தகவல்கள்.

(ரஜினி ராம்கியின் சென்ற பதிவை தொடர்ந்து, தத்து எடுப்பது தொடர்பாக, சாகரன் தனது வலைப்பதிவில் எழுதியது இங்கே மீண்டும் பதியபடுகிறது-- ரோஸாவசந்த்.)

ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள அரசே முன் வந்திருப்பதாக இணையத்தில் செய்தி.

முதல்வர், 'விருப்பமுள்ளவர்கள் தத்து எடுத்துக்கொள்ளலாம், சில விதிமுறைகளுக்குட்பட்டு.. விதிமுறைகள் தமிழக சோசியல் வெர்பேர் தளத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.' என்று சொன்னதாக பத்திரிக்கைச் செய்திகள்.

அந்தத் தளத்தில் சென்று பார்த்த போது.....

1) ஹோம் ரிப்போர்ட் - நம் வீட்டிற்கு ஒருவர் வந்துவிபரங்கள் கேட்டுச் செல்வார்.

2) நம் விருப்பப்படி, குழந்தையின் போட்டோ அனுப்பி வைக்கப்படும்.

3) பிடித்திருப்பின், நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்

4) பிடித்திருப்பின், மற்ற வேலைகள் செய்யப்படும்.

இவற்றிற்கெல்லாம் குறைந்தது 3 மாதங்களாவது எடுக்கும்..

விளக்கத்தின் நடுவில், சில விடயங்கள், ஹிந்து லா-வின் படி, அடாப்ட் செய்ய முடியும். முஸ்லீம் அல்லது கிருஸ்துவராக இருந்தால், கார்டியனாக முடியும். என்று இருந்தது. (இந்துவாக இருந்தாலும், கார்டியனாக இருப்பது எப்படி?)
என்.டி.டி.வி பேட்டியில், ஹிந்து லா-வின் படி, உங்களுக்கு ஆண்குழந்தை முன்னரே இருந்தால் பெண்ணும், பெண்குழந்தை முன்னரே இருந்தால் ஆண் குழந்தையுமே தத்து எடுக்க அனுமதிக்கப்படும் என்று ஒரு விபரம் சொல்லியிருந்தார்களாம். (இது போன்ற சட்டங்களைத் தெளிவாகச் சொல்லும் இணையதளம் உண்டா?)

கூடவே அண்ணா யுனிவர்சிடி ஆதரவற்ற குழந்தைகளின் விபரங்களுடன் ஒரு தளம் அமைத்திருப்பதாக ஒரு செய்தி மாலைமலரில்... ( ஆனால் அப்படி ஒரு தளம் எங்கிருக்கிறது?! :-( )

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்து எடுப்பது தொடர்பான விபரங்களுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று 'என்.டி.டி.வி' தகவல்.

குழந்தைகள் தத்து எடுப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு...

இணையதளம் : http://www.tn.gov.in/adoption/

நேரடித் தொடர்பிற்கு:
Director - Social Welfare
Directorate of Social Welfare
Old Engineering College Complex
Chepauk, Chennai -600 005
Ph:- +91-44-28545745,
+91-44-28545748,
+91-44-28545728

 

தத்தெடுப்பது சாத்தியமா?

சுனாமியால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக விட்ட குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து இணைய நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள். நடைமுறையில் தத்தெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பது உண்மைதான். இதுகுறித்து என்டிடிவி ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டிருந்தது. ஒரு சமூக சேவகி, இந்தியாவில் சாதாரணமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை பற்றி விளக்கமாக சொல்லியிருந்தார்.

தத்தெடுப்பவர் தனக்குரிய குழந்தையை தேர்வு செய்தவுடன் ஆறுமாதம் காலம் வரை காத்திருக்க வேண்டுமாம். இந்த ஆறுமாத காலத்திற்குள் தத்தெடுப்பவரின் ஆண்டு வருமானம், சொத்து போன்றவற்றை தாக்கல் செய்தாக வேண்டும். ஓரே சமயத்தில் ஓரு குழந்தை மட்டுமே தத்தெடுத்துக்கொள்ள அனுமதி. ஓன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளென்றால் வெவ்வேறு இடைவெளிகளில் தத்தெடுக்கலாம். அதுவும் ஓரே பாலினத்தை சேர்ந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

மயிலாடுதுறையில் நிவாரணப் பணியிலிருக்கும் எனது நண்பரை தொடர்பு கொண்டு கேட்டேன். மயிலாடுதுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது சீர்காழி வட்டம் பெருந்தோட்ம் பகுதி கடலோர பகுதிகளில் சிறப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நாகை மாவட்டத்தில் 54 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அவரது அலுவலகத்து குறிப்பு தெரிவிக்கிறதாம். இதில் மூன்று பெண் குழந்தைகள்.

நாகப்பட்டின மாவட்டத்து ஆதரவற்றோர் குழந்தைகளை வைத்து புதிதாக 'குழந்தை இல்லம்' உருவாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருக்கும் குழந்தைகளை தத்தெடுக்க நாகப்பட்டின மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலகத்தை அணுகியாக வேண்டும். இது நாகப்பட்டினம் கலெக்டர் ஆபிஸ் வளாகத்திலேயே அமைந்துள்ளது. இதன் பொறுப்பு அதிகாரி திருமதி. சூர்யகலா. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் - 253045.

பெரம்பலூரை சேர்ந்த நண்பர் ஒருவர் ஆண்குழந்தையை தத்தெடுக்க விண்ணபித்துள்ளார். அவரையும் தொடர்பு கொண்டு விசாரித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.

Tuesday, January 11, 2005

 

சிக்கல் குழந்தைகள் முகாம் இப்போதைய நிலை

தமிழக அரசு நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரில் ( புகழ் பெற்ற முருகன் தலம்; தில்லானா மோக்னாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சிக்கல் சண்முகசுந்தரம்) தமிழக அரசு சுனாமியில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக ஒரு முகாம் நடத்தி வருகிறது. அது குறித்து இன்று தினமணியில் வந்துள்ள செய்தியை கீழே தந்துள்ளேன். சுனாமிக் குழந்தைகளுக்கு உதவிகளைத் திட்டமிடும் போது இந்தத் தகவல்களைக் கருத்தில் கொள்ளலாம்.

மாலன்

தினமணி செய்தி:

சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆழ்நிலை தியானப் பயிற்சி

நாகப்பட்டினம், ஜன. 12: சுனாமி பேரலையால் பெற்றோர்களை இழந்து அனாதையான குழந்தைகளுக்கு ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அரசு சார்பில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 2 முதல் 18 வயது வரையிலான பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 37 பேர் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்கள். 10 பேர் பெற்றோரில் ஒருவரை இழந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சுனாமி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நற்பணியில் ஆன்மிக அமைப்புகளும், சமூகசேவை அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
தியானப் பயிற்சிக்குப் பிறகு பல குழந்தைகள் அதிர்ச்சியிலிருந்து தெளிவுபெற்றுள்ளனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதாக எண்ணியுள்ளனர்.
இந்த இல்லத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வந்துள்ளன. இங்குள்ள குழந்தைகளைத் தத்தெடுக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறு வயது குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தர ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். பெரிய குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


 

மாலனின் கருத்துக்களும், யோசனைகளும்!

(மாலன் அவர்கள் பின்னூட்டமாய் அருள் குமரனின் பதிவில் அளித்ததிலிருந்து இங்கே இடுகிறேன் - ரோஸாவசந்த்.)

அன்புள்ள நண்பர்களுக்கு,

மூன்று வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன:

1. உடனடித் தேவைகள்

2. நீண்டகாலத் தீர்வுகள்.

3. உளவியல் ஆறுதல்கள்

உணவு, மருந்துகள், சில தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற உடனடித் தேவைகள் விஷயத்தில் பல அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு அதிக நிதியும் உழைப்பும் காலமும் தேவையில்லை என்பதால் இதில் பலர் ஆர்வம் காட்டுவது இயல்பே.

மீனவர்கள் கடலுக்குத் திரும்ப தேவைப்படும் சாதனங்கள், (படகுகள், வலைகள், மோட்டர்கள்) பாதுகாப்பான வீடுகள், பழுது பட்ட கட்டுமான அமைப்புக்களை ( சாலைகள் போன்றவை) சீரமைத்தல் ஆகியவை நீண்டகாலத் தீர்வுகள். இதற்குப் பெரும் பணம் தேவை.

மூன்றாவது வகை உதவி உளவியில் ரீதியில் ஆன ஆறுதல்கள். பலர் குடும்ப உறுப்பினர்களை கண்ணெதிரே இழந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அனாதைகள் ஆகி உள்ளன. இந்த traumaவில் இருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது பெரும் பணி. இதை நாம் ஏதேனும் வழிகளில் செய்ய முற்படலாம்.

பல குழந்தைகளுக்கு பாடநூல்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதை சேகரித்து வழங்க முற்படலாம்.குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற இடத்தில் ராமகிருஷ்ண குடில் (தபோவனம்) என்ற அமைப்பு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் ஆதரவில் நடத்தப்படுவது. அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறைவிடம், உணவு, கல்வி, கைத் தொழில் ஒன்றில் பயிற்சி இவற்றை இலவசமாக அளிக்கிறார்கள். சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை ராமகிருஷ்ண குடிலில் சேர்க்க முயற்சிக்கலாம். ஒரு குழந்தைக்கு என்ன செலவாகிறது என்று கேட்டு, ஒரு சில குழந்தைகளை +2 வரை படிப்பதற்கான செலவை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை நான் சென்னையில் உள்ள ஓர் அமைப்பின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை + 2 வரை படிக்க, 12 ஆண்டுகள் உதவி செய்து வந்தேன். அதிகம் செலவாகவில்லை) அந்த தபோவனத்தில் ஒரு சிறிய கணினி மையம் அமைத்துக் கொடுத்து அந்த மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கலாம்.

அன்புடன்மாலன்

 

ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு குறித்து வேண்டுகோள்!

நண்பர்களே!

அனைவருக்கும் வணக்கம். ட்சுனாமி பேரழிவால் பாதிக்க பட்டவர்கள் மீட்பு பணி குறித்து விவாதிக்க இந்த பதிவை தொடங்கியுள்ளோம். இதை ஒரு கூட்டு முயற்சியாக கொண்டு செல்வதே எங்கள் எண்ணம். தமிழ் வலைப்பதிவுகளில் அவ்யப்போது மீட்பு பணிகள் குறித்து பல விஷயங்கள் எழுதபட்டுள்ளன. அவற்றை ஒரு முறையான வகையில் ஒழுங்கு செய்து, வாசகர்களின் பார்வைக்கு வைப்பதே இதன் நோக்கம். இதில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

என்ன வகையான கருத்துக்களை வேண்டுமானாலும் இங்கே எழுதலாம். அறிவிப்புகளை இடலாம். வேண்டுகோள்களை முன் வைக்கலாம். அவையனைத்திற்கும் ஏதாவது ஒரு விதத்தில் ட்சுனாமி மீட்பு பணிகளுடன் தொடர்பு இருத்தல் இன்றியமையாதது, என்பதை தவிர வேறு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எந்த வகையான அரசியல் பேசுவதையும் தவிர்க்கவேண்டும், என்று சொன்னாலும், மீட்பு பணிகள் மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்புள்ள அரசியலை பேசலாம். குறிப்பாய் சில உதவிகள், உரிய மக்களுக்கு போய் சேராததன் அரசியலை பேசலாம். வேறு ஒரு உதாரணமாய், அருள்குமரன் ஏற்பாடு செய்த அரட்டையில், மீனவர்கள் மீண்டும் கடற்கரையோரமாகவே குடிசைகள் அமைப்பது, சமூக சூழல் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாய் அது தவிர்க்க முடியாமல் போவது குறித்து பேசபட்டது. இது போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புள்ள சமூக அரசியலை பேசலாம். அப்படி செய்யும் போது பிரச்சனை எந்த விதத்திலும் திசை திரும்பி விடாத வண்ணம், அதன் அடிப்படை மீட்பு பணிகள் குறித்த கரிசனமாய் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டியது அவசியம்.

இது தொடர்பான பழைய பதிவுகளை, அதன் முக்கியத்துவம் சார்ந்து, அவ்யப்போது நான் (ரோ.வ.) இங்கே இடுவேன். ஆனால் பொதுவாய் மீட்புபணிகள் குறித்து பேச நான் தகுதியில்லாதவனாகவே இருக்கிறேன். பிரச்சனையோடு நேரடி தொடர்பில்லாதவனாய், எல்லாவற்றையும் செய்திகளாய் கேட்கும் நிலையிலேயே நான் இருக்கிறேன். ஆகையால் பிரச்சனையோடு எதாவது ஒரு வகையில் தொடர்புள்ள அனைவரும், தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுகொள்கிறேன்.

பங்களிக்க விரும்புபவர்கள், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும், பெயரையும் என் வலைப்பதிவிலோ, நரைனின் வலைப்பதிவிலோ அல்லது இங்கேயோ பின்னூட்டமாய் விட்டு செல்லவும். மின்னஞ்சலாய் rksvasanth@yahoo.com அல்லது narain@gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம். வலைபதிவதற்கான அழைப்பு, அல்லது கடவுசொல் கொடுக்கப்படும். பொதுவாய் இங்கே வலைப்பதிவிலோ அல்லது மற்ற இணைய பத்திரிகைகள் மூலம் அறிமுகமானவராக இருப்பது நல்லது. வலைபதிய விரும்பாதவர்கள், எழுத விரும்பும் விஷயத்தை என் முகவரிக்கு எழுதினாலும், அதை என்னால் பதிவு செய்ய முடியும்.

வாருங்கள் நண்பர்களே! இதை ஒரு கூட்டுமுயற்சியாய் கொண்டு செல்வோம். உங்களால் சாத்தியமான எல்லாவகை பங்களிப்பையும் தாருங்கள். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு பயன் இருக்கும். நன்றி!

அன்புள்ள ரோஸாவசந்த் மற்றும் நரைன்.



Monday, January 10, 2005

 

Started

இந்த பதிவு ட்சுனாமி மீட்புபணிகள் குறித்து விவாதிக்க!

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter