Saturday, January 15, 2005

 

இலங்கையில் சிறுவர் இல்லங்கள்

சுனாமி தாக்கிய பிரதேசங்களில் இப்போது இரண்டாம்,மூன்றாம் கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.இவ்வேளையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள்,unicef போன்றவை பேரலைத் தாக்குதலில் தாய் தந்தையரை இழந்த பல்லாயிரக்க்ணக்கான சிறுவர்கள் பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளன.அத்துடன் நின்றுவிடாமல் சிறுவர்களின் பாதுகாப்பு,கடத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல்,அவர்களது உரிமைகளைப் பேணல் ஆகியவற்றில் பொது அமைப்புகள் ஈடுபடுகின்றன.

மீட்புப்பணிகளுடன் கூடவே நாம் இழந்துவிட்ட ஒரு தலைமுறைச் சிறுவர்கள் பற்றியும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பற்றியும் வலைப்பதிவாளர்களும் பிரதிபலித்திருக்கிறார்கள்.
பெயரிலி மற்றும் ரோசாவசந்த் குறிப்பிட்டதைப் போன்று சிறுவர்களைத் தத்தெடுத்தலானது அவசர அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய பணியல்ல என்பதே எனது கருத்தும்.

சடுதியாக நடைபெற்ற சம்பவத்தின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறாத பிஞ்சுகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு வழிவகையாக தத்தெடுத்தல் அமையுமாயினும் அது அவர்களிடம் பெருமளவிலான உளத்தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.
முக்கியமாக வெளிநாட்டிலுள்ளவர்களின் தத்தெடுக்கும் குழந்தைகள் போய்ச்சேரும் போது வேரறுத்து மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட சிறு செடியின் நிலையிலேயே அவர்களும் இருப்பார்கள்.முற்றிலும் புது இடம் வேற்று மனிதர்கள் இவ்வாறான பல சூழ்நிலைகளால் தத்தெடுப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மனவேற்றுமைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உண்டு.

பெரியவர்களைப் போன்று இந்தா இதுதான் நான் உனக்குச் செய்யக்கூடிய உதவி என்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடமுடியாது அதே நேரம் விட்டுவிடவும் முடியாது.இதையே சாக்காக வைத்து தத்தெடுத்தல் என்ற பெயரில் சிறுவர்களை பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு விற்பதில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.மத அமைப்புகள் சிலவும் அனாதை இல்லங்கள் என்ற பெயரில் நாலைந்து பிள்ளைகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக தடுத்து வைத்து வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு கணக்குக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன.இவ்வாறு செய்த மதகுரு ஒருவர் கிழக்கிலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.பிள்ளைகள் ஏற்கனவே இயங்கி வந்த இல்லமொன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

இது நிலைமையின் தீவிரத்தையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.சிறுவர்களைப் பாதுக்காப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொருநாளும் சில பத்துச் சிறுவர்கள் கடத்தப்படவோ பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாகிக்கொண்டிருக்கக்கூடும்.

தத்தெடுத்தல் என்பது நீண்டகால அடிப்படையில்(ஆறுமாதமாக இருந்தால் கூட)திட்டமிடப்படவேண்டிய விடயம்.உள,பொருளாதார நிலைகளை வைத்தே தீர்மானிக்கப்படவேண்டிய விடயம்.ஆனால் உடனடியாகச் செய்யவேண்டிய உதவிகள் பல இருக்கின்றன.

நண்பர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிவிட்டதால் நான் இலங்கையைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.
கிழக்கிலங்கையில் ஏற்கனவே சில சிறுவர் இல்லங்கள் நம்பிக்கை தரும் விதத்தில் இயங்கி வந்துள்ளன.
விபுலானந்தா,கதிரொளி ஆகிய இல்லங்கள் மட்டக்களப்பிலும் அன்பு இல்லம் திருகோணமலையிலும் இயங்கி வருகின்றன.இவை தவிர சிறு சிறு இல்லங்கள் மத மைப்புகள் சார்ந்தும் ஊர்மக்களால் நடத்தப்படும் அமைப்புகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை காலமும் போரினால் தாய்தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் கடற்பேரலையானது ஆயிரக்கணக்கான சிறுவர்களை ஒரேயடியாக அனாதையாக்கிவிட்டுள்ளது.மட்டக்களப்பு அம்பாறையில் மட்டும் 500 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாய்தந்தையரை இழந்துள்ளார்கள் அதே போன்று முல்லைத்தீவிலும் 300 இற்கும் மேற்பட்டோர் தாய்தந்தையரை இழந்துள்ளனர்.

இந்த திடீர் எண்ணிக்கை அதிகரிப்பைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஏற்கனவே இருந்த இல்லங்களில் வலு இருப்பதாகத் தெரியவில்லை அதிகப்படியாக ஒவ்வொரு இல்லமும் பத்து அல்லது இருபது பேரையே புதிதாகச் சேர்க்கக்கூடிய நிலையிலிருப்பதாக நண்பரொருவர் குறிப்பிட்டார்.

ஆகவே சிறுவர்களைத் தற்காலிகமாகப் பராமரிப்பதற்காகவாவது சிறுவர் இல்லங்களை அமைக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
இதற்காக செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தை நாடுவதே எனக்குச் சரியான தெரிவாகப் படுகின்றது.

ஏற்கனவே யாழில் இருந்த செஞ்சோலை இல்லத்தின் கிளையொன்று எனது வீட்டிற்கு அருகிலிருந்தமையால் பெற்ற அனுபவத்தின் மூலம் அங்கு பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நூறுவீத உத்தரவாதம் உண்டு என நம்புகிறேன்.முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் செஞ்சோலையின் கிளைகள் உள்ளன,அவை தவிர விடுதலைப்புலிகளால் நேரடியாக நிர்வகிக்கப்படும் காந்தரூபன் அறிவுச்சோலை என்னும் அமைப்பும் உண்டு.
இவற்றின் கிளைகளை கிழக்கிலங்கையிலும் ஆரம்பிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுப்பதும் அப்படி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் முழுமூச்சுடன் உதவிகளைத் திரட்டி வழங்குவதுமே இப்போதைக்குச் செய்யவேண்டிய பணி.

செஞ்சோலையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை இதுவிடயமாக தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன்.இயலாத பட்சத்தில் உதவிப்பணிகளுக்காகப் போயிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் இவ்விடயத்தை செஞ்சோலை நிர்வாகத்தினருடன் பேசச்சொல்லிக் கேட்கவிருக்கிறேன்.தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் முழுமையான விபரங்களை அறியத் தருகிறேன் உங்கள் உதவிகளை புனர்வாழ்வுக்கழகம் ஊடாகவே மேற்கொள்ளலாம்

உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter