Tuesday, July 12, 2005

 

புனிதப் பணியில் இணைத்துக் கொள்ளுங்கள்!

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை பெரும் முயற்சி எடுப்பது பற்றியும், அந்தப் புனிதப் பணி 'பாலம்' அமைப்பின் கலியாணசுந்தரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு இருப்பது பற்றியும் கடந்த 3.7.05-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழின் 'நம்பிக்கை மனிதர்கள்!' பகுதியில் எழுதியிருந்தார்கள்.

உலகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி நிறுவனங்கள் என்ன விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களுக்கு இதுவரை கிடைத்த உதவிகள் என்ன, தேவைப்படும் உதவிகள் என்ன... என்ற தகவல்களை 'பாலம்' கலியாணசுந்தரம் திரட்டி வருகிறார்.

இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் அவர் நாடுகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பள்ளிகள் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவலை அவருக்கு யாரும் அனுப்பி உதவலாம்.

முகவரி: எண்: 1, 4-வது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20.
தொலைபேசி: (044)24402524. செல் பேசி: 09840218847.
மின் அஞ்சல்: anbupaalam@gmail.com

'பாலம்' கலியாணசுந்தரம் பற்றி....

தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், கையில் இருக்கும் கடைசி பைசாவைக்கூட சமுதாய முன்னேற்றத்துக்காகச் செலவழிக்கும் குணம்... ‘என் னுடைய வளர்ப்புத் தந்தையாக உங்களை ஏற்றுக்கொள் கிறேன். என்னுடனேயே தங்கி ஓய்வெடுத்து, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்தபோது, ‘இப்போது எனது குறிக்கோள் ஓய்வு இல்லை, உழைப்பு’ என்று சொல்லி, அதை மென்மையாக மறுத்த பண்பு... உதவி கிடைக்காமல் தவிக்கும் மனிதனே இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம்... இதெல்லாம் சேர்ந்த மொத்த உருவம்தான் கலியாணசுந்தரம்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, இளம்வயதிலேயே சேவை உள்ளத்தோடு வளர ஆரம்பித்தவர், 1953-ம் ஆண்டு தன்னுடைய 14-வது வயதில் ‘பாலம்’ என்ற அமைப் பைத் துவங்கியிருக்கிறார். அது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து, இன்று ‘அன்புப் பாலமாக’ தழைத்து, சென்னை அடையாறில் இன்னொரு ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது!

சமீபகாலமாகத் தீவிரமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டிருக்கும் கலியாணசுந்தரம், எப்போதும் போல் சுறுசுறுப்பாக சமூகசேவையில் தீவிரம் காட்டிக் கொண்டு இருக்கிறார். தற்போது அவர் கையில் எடுத்திருப்பது, 'சுனாமி நிவாரணங்கள் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு கிடைத்திருக்கின்றன' என்ற ஆய்வு!

இதுபற்றிக் கேட்டபோது, தனக்கே உரிய மெலிதான குரலில் பேச ஆரம்பித்தார் கலியாணசுந்தரம்.

‘‘டிசம்பர் 26-ம் தேதி... பல நாடுளைச் சேர்ந்தவர்களுக்குப் பேரதிர்ச்சியை அளிக்கும் பொழுதாக விடிந்தது. பலரின் வாழ்க்கை திசைமாறியது. இந்த அவலக்குரல் கேட்டு உலகமே ஓடிவந்து உதவியது. இதுவரை அரசுகளும் மற்ற அமைப்புகளும் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் குழந்தை களுக்கு அந்தப் பணிகள் எந்த அளவுக்குப் போய் சேர்கிறது என்பது பற்றியும் அறிக்கை ஒன்றை தயார் செய்தோம்.
சென்ற மாதம் ஐ.நா. சபை சார்பாக பில் கிளின்ட்டன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இந்த அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங் களைச் சேர்ந்த 567 பள்ளிக்கூடங்கள், அதில் படித்த 2 லட்சத்து 69 ஆயிரத்து 500 மாணவர்கள், மற்றும் 30 ஆயிரம் குழந்தைகள் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களையும், இவர்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஒரு கோடி அமெரிக்க டாலர் - அதாவது, 45 கோடி ரூபாய் தேவைப்படும் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதைப் படித்த கிளின்ட்டன், எங்கள் முயற்சியைப் பாராட்டியதோடு, ‘இந்த அறிக்கையை ஐ.நா. சபை ஏற்றுக்கொள்ளும்’ என்றும் சொன்னார். கூடவே, ‘இதுபோன்ற அறிக்கையை சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பண்ணலாமே? அது, ஐ.நா.சபையின் பணிகளுக்கு உதவியாக இருக்குமே!’ என்று கேட்டுக்கொண்டார். ‘அது எவ்வளவு பெரிய பொறுப்பு’ என்று நாங்கள் படபடத்து நின்ற நேரத்தில் கிளின்ட்டனுடன் வந்திருந்த ஐ.நா. சபை பிரதிநிதி ஒருவர், ‘உலகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப் பட்ட மாணவர்கள், குழந்தைகள் பற்றிய அறிக்கையை உங்களால் தயார்செய்ய முடியும். அந்தப் பணியில் இறங்குங்கள்’ என்று சொல்ல... கிளின்ட்டனும், ‘உங்களால் நிச்சயம் சிறப்பாகச் செய்ய முடியும்!’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். அதோடு, அதற்கான அனுமதியையும் முறையாக எனக்கு வழங்கிச் சென்றார். இப்போது அதற்கான ஆயத்தப் பணிகளில்தான் இறங்கியிருக்கிறேன்!’’ என்ற கலியாணசுந்தரத்தின் குரலில் உற்சாகம் பீறிட்டது.

‘‘இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையை தயார் செய்து, அக்டோபரில் மீண்டும் இந்தியா வரும் கிளின்ட்டனிடம் கொடுக்க வேண்டும். கால அவகாசம் குறைவுதான் என்றாலும் ஓய்வில்லாத உழைப்பைத் தரும் மனவலிமையையும் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதத்தையும் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வழங்க வேண்டும்!’’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்.

உழைப்பின் அருமையை உணர முடிந்தது!


தகவல் நன்றி : ஜூனியர் விகடன்

நன்றி:மாயவரத்தான்.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter