Sunday, February 27, 2005

 

சுனாமியால் வரும் பின் விளைவுகள்!

ந. உதயகுமார்


சுனாமி செய்து விட்டுப் போன உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் காணச்சகிக்க முடியாமலும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.

கூர்ந்து பார்த்தால், சுனாமி சென்று விட்டபிறகும், நம் இந்தியப் பொருளாதாரத்திற்குச் சேதம் தொடர்கிறது.

இந்தியாவின் விவசாயப் பொருளாதார வளர்ச்சி சில வருடங்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசின் விவசாய மான்யக் கொள்கை, பொது வினியோகக் கொள்கையில் அரசு செய்த மாற்றங்கள், கடந்த சில வருடங்களாக நிலவிய வறட்சி நிலை, விவசாய சம்பந்தமான நம் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை காரணங்கள்.

விவசாயம், நம் பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கம்.

வந்து சென்ற சுனாமி பல விளைநிலங்களை உவர்நிலங்களாக மாற்றியதைச் சீர் செய்யப் பல காலம் பிடிக்கப் போகிறது.

மீன்பிடிக்கும் தொழில் மூலம் வரும் பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரத்தில் அடங்கும்.

சுனாமி பல மீனவர்களையும், அவர்தம் குடும்பங்களையும் அழித்து விட்டது. மிஞ்சியவர் பலரின் கட்டுமரங்களையும், படகுகளையும், வலைகளையும், அழித்து விட்டது அல்லது அடித்துச் சென்று விட்டது.

கடலை நண்பனாகவும், தாயாகவும் பார்த்த மீனவர்கள், இப்போது கடலுக்குள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. போதாதென்று, மக்களுக்கு மீன் உண்பதில் அச்சம் மிகுந்துள்ளது.

தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் மீன் தொழில் நசிந்து கிடக்கிறது.

இது நமது விவசாயப் பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கப் போவது உறுதி.

அரசு எவ்வளவு விரைவாகச் சீரமைப்புப் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்கிறதோ அவ்வளவு விரைவாக இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியும் சீரடையும்.

நமது பொருளாதாரம், சமீப காலங்களில் இத்தகைய சில இயற்கையின் தாக்குதல்களைத் தாங்கி இருக்கிறது. இதையும் தாங்கும்.

இவையிருக்க, சுனாமி தாக்கிய போது பல நாடுகள் உதவிக் கரம் நீட்டிய போது, நம் அரசு, "எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறியதோடல்லாமல், அண்டை தேசங்களுக்கு விரைந்து மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது. இந்தியனாகப் பெருமைப் படுகிறேன்.

*************************************************************************************

இந்தியா பல கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் மீன்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சுனாமிக்குப் பின், தென்னிந்தியாவில் கிழ்க்குக் கடலோரத்தில் இருந்த பல இறால் பண்ணைகள் அழிந்து விட்டன. இதனால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மீன் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பல்வேறு தொழில்களும் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. உடைந்த படகுகளைச் சீர் செய்வோர், அவ்வாறு சீர் செய்து கொடுக்க அனைத்தையும் இழந்து தவிக்கும் மீனவர்களிடம் பணம் வாங்க முடியவில்லை. மீன் தொழிலைச் சார்ந்திருந்த பனிக்கட்டித் தொழிற்சாலைகள் (ice factories) இயங்காமல் இருக்கின்றன. இவற்றில் வேலை செய்து வந்தவர்களின் ஜீவனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பல தொழிற்சாலைகள் ஒரு நாளைக்குப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனிக்கட்டிகளைச் செய்யும் திறன் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் ஏற்றுமதி நின்று போனதால், குளிர் பதன வசதி செய்யப் பட்ட கப்பல்களுக்கான தேவை குறைந்து விட்டது. பல கோடி ரூபாய் முதலீட்டில் இத்தகைய கப்பல்களைக் கட்டி அல்லது வாங்கி இயக்கும் நிறுவனங்கள், நஷ்டத்திலிருந்து தப்பிக்க வேறு சந்தைகளைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter