Sunday, February 13, 2005

 

சோகப்பட்டினம்

D. V. பாபு.

ஏனோ எழுதத் தோன்றுகின்றது. ஏதோ எழுதத் தூண்டுகின்றது. எழுதுவதின் நோக்கம் எனக்கேத் தெரியவில்லை. உலகின் ஒரு பகுதியையே ஒரு பெரும் சோகம் பேரலையாய் தாக்கிச் செல்ல, நான் வாழும் நாகை நகரும் பெரிதாய் காயம்பட்டது. 26 ஆம் தேதி காலை, 'சன்' செய்திகளில் சென்னையில் லேசான நிலநடுக்கம் என்ற செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, நகரில் மின்சாரம் தடைபட்டது.

வீதியெங்கும் கூக்குரல், மக்களின் ஓட்டம், வாகனங்களின் சத்தம் .. இப்படி நகரமே அல்லோகலப்பட்டது. என்னவென்று செய்தி அறிவதற்கே சில நிமிடங்கள் ஆயிற்று. எல்லோர் வாயும் உதிர்த்த இரண்டு வாக்கியங்கள் "கடல் பொங்கி ஊருக்குள் வருகின்றது.. ஓடுங்கள்..". எல்லோரும் எதிர் திசையில் ஓட, என் போன்ற சிலர் கடல் இருக்கும் திசை நோக்கிச் சென்றோம். என் வீட்டிற்கும் கடலுக்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.பாதி தூரம் சென்ற பின்புதான் மக்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர ஆரம்பித்தோம். தண்ணீர் மிக மெதுவாய் நகரின் முக்கிய வீதியில் மேலேறி வந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் முக்கால் பாகம் மூழ்கிய நிலையில் பல வாகனங்கள், பாதி மூழ்கிய நிலையில் பல கடைகள்.. விபரீதம் புரிந்து திரும்பிச் செல்ல எத்தனிக்கும்போதுதான், கடல் நீர் பின்னோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

சில காலங்களில் கடல் நீர் அதிகரித்து கரைகளை அரித்து மேல்நோக்கி வருவது சகஜம். இது சற்று அதிகமாக வந்துவிட்டது என்றுதான் எண்ணினோம். இதற்கும், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொஞ்சம் முன்னேறி பைக்கிலேயே தண்ணீரில் சென்ற நான், சாலையின் மறுமுனையில் பார்த்தது ஒரு பெரிய படகினை. படகு எப்படி இங்கு வந்தது என்ற ஒரு வினாடி யோசனையில், நடந்திருப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. எத்தனைக் கட்டிடங்களைத் தாண்டி அந்த படகு சாலையின் முனைக்கு வந்துள்ளது.. Day after tomorrow திரைப்படத்தில் நகரின் மத்திக்கு வரும் அந்த கப்பல் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் முன்னேறிச் செல்ல செல்ல நடந்திருக்கும் கொடுமையை உணரமுடிந்தது. சற்று நெருங்கி வந்த போது, முன்னால் சென்ற கூட்டம் அலறியபடி திரும்பி ஓடிவந்தது. சற்று தூரத்தில் ஒரு கட்டிடத்தின் மேல் ஆடும் படகினையும், தெறித்து விழும் தண்ணீரையும் பார்க்க முடிந்தது. அது இரண்டாவதாக வந்த, சற்று சிறிய அலையின் கைங்கர்யம். முன்னேறியக் கூட்டம் தலைத்தெறிக்கப் பின்னேறியது.

யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். இதற்குள் மூட்டை முடிச்சுகளுடன் பெரும் கூட்டம் நகரை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டது. இருந்தவர்கள் உதவ ஓடினோம். தேடினோம்.. அழைத்து வந்தோம்.. தூக்கி வந்தோம்.. இழுத்து வந்தோம்.. எல்லாமே நடந்தது. எடுத்துச் செல்வது உயிருள்ள உடலா, பிணமா என்பதை எல்லாம் ஆராய நேரம் இருக்கவில்லை. இதற்குள் நாகூர், சாமந்தன்பேட்டை, நம்பியார் நகர் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் உடல்கள் குவியத் தொடங்கிவிட்டன. பொது மருத்துவமனை திணறியது. கதறிய பெண்களின் ஒப்பாரியில் நடந்தவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒரே ஒரு அலை.. ஒரு நிமிடம்.. அனைத்தும் முடிந்து போனது.

அந்த விபரீதம் நடப்பதற்கு ஒரு நிமிடம் முன்பு யாரேனும் வந்து, ஒரு அலை அடித்து நீங்கள் அனைவரும் சாகப் போகின்றீர்கள் என்று சொல்லியிருந்தால், அந்த ஊரே கூடி வயிறு வலிக்கச் சிரித்து இருக்கும். கடலிலேயேப் பிறந்து கடலிலேயே வளர்ந்தவர்கள். காற்றின் வாசனையைக் கொண்டே கடலின் போக்கை உணரக்கூடியவர்கள். இவர்கள் வீட்டுக் குழந்தைகள் மீனுக்கே நீந்த கற்றுத் தருவார்கள். பெரும்பாலானோருக்கு தோழர்கள் அந்த அலைகள்தான். அவைகளுடன் கட்டிப் பிடித்து விளையாடுவதுதான் இவர்களின் பொழுதுபோக்கே.. அத்தனை பேரும் அந்த ஒரு நிமிடத்தில் ஏமாந்துதான் போனார்கள்...அதிகம் பாதிப்பிற்கு உள்ளானது கீச்சான் குப்பம், அக்கரைப்பேட்டை பகுதிகள். கீச்சான் குப்பத்தில் மிஞ்சி இருப்பது உடைந்து போன படகுகளும், நொறுங்கிப் போன வீடுகளும்தான். இத்தனை நாளும் எனது செல்வங்களைக் கொள்ளையடித்தீர்களே என்று கேட்டு, ஒரே நிமிடத்தில் வஞ்சம் தீர்த்துக் கொண்டு அமைதியாகிவிட்டது அந்தக் கடல்.

அதிகம் பலியானது சிறுபிள்ளைகள்தான். போராடக்கூட அதிக நேரம் இல்லாமல், அப்படியே முழுதாய் மூச்சடைத்து இறந்து போயிருந்தார்கள். உறவுகளைத் தங்கள் கண்முன்னே பறிகொடுத்த ஜனங்கள், கண்ணீர் வற்றிக் கதறிக் கொண்டு இருந்தனர்.

'அம்மா. தண்ணீ வருதும்மா' என்று, மொட்டை மாடியில் துணிக் காயவைத்துக் கொண்டிருந்த அம்மாவை கீழிருந்த எச்சரித்த ஏழு வயது சிறுமி அந்த தாயின் கண்முன்பே தண்ணீரில் மறைந்து போனாள்.

'அம்மா.. கடைக்குப் போகவேண்டுமா?' என்றகேட்ட எட்டு வயது மகனுக்கு இல்லை என்று பதிலுரைத்த தாய், 'புளி வேணும்னு சொன்னியே.. வாங்கித் தரேன்..' என்று விடாப்பிடியாய் கேட்டபோது, மகன் கேடபதின் நோக்கம் அறிந்து அவனைக் கடைக்கு அனுப்பினாள். எல்லாம் கடைக்குச் சென்றால் கிடைக்கும் அந்த ஒரு ரூபாய்க்காக.

"அப்படி எதை வாங்கி சாப்பிட ஆசை பட்ட என் ராசா. சாக்லேட்டா?.. நீ ஆசைபட்டதை வாங்கி சாப்பிட்டியா .. இல்லையான்னே தெரியலியே.."
மகனின் கடைசி ஆசை நிறைவேறியதா.. இல்லையா என்பது தெரியாமல் கதறி அழும் தாய்.

வேளாங்கன்னியில் பலியானதோ பெரும்பாலும் வெளியூர் மக்கள். மாலை நான்கு மணியளவிற்கு நான் அங்கு சென்றபோது எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். நாகைக்கும் வேளாங்கன்னிக்கும் இடைப்பட்ட 10 கிலோ மீட்டர் தூரமும் மனித வெள்ளம். கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. கரையோரம் முழுதும் பிணங்கள். தொலைந்த உறவுகளைத் தேடும் சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. மாதாவை வேண்டி எங்கள் பாவத்தை தொலைக்க வந்த நாங்கள் இப்போது குடும்பத்தைத் தொலைத்து நிற்கின்றோம் என்று கதறிக் கொண்டிருந்தனர்.

நாக்பூரில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த ஒரு குடும்பம், சிகிச்சை வெற்றிகரமாக முடியவே, மாதாவை வேண்டி காணிக்கை செலுத்திச் செல்லாம் என்று, காலைதான் வேளாங்கன்னி வந்தார்களாம். அவர்கள் செலுத்திய காணிக்கை ஐந்து உயிர்கள். குடும்பத்தில் எஞ்சியது ஒருவர் மட்டுமே. my wife, my first son medical student, my brother .. என்று சிதறிக் கிடந்த உடல்கள் ஒவ்வொன்றாய் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தார். அவரது இரண்டாவது மகனையும், தம்பியின் மனைவியையும் தேடிக் கொண்டிருந்தார். அடுத்த அலை வந்து இருக்கும் உடல்களையும் அடித்துச் செல்லும் முன், தயவுசெய்து எடுத்து ஓரிடத்தில் அடுக்கி வையுங்கள் என்று அவர் கைகூப்பிக் கெஞ்சியது மனதை என்னவோ செய்தது. எடுத்து வெளியேற்ற ஆட்கள் இல்லை. உடல்கள் கிடக்கும் இடமோ இடிபாடுகளுக்கு நடுவில். என்னுடன் உதவிக்கு வந்த இரண்டு வட இந்தியர்களையும் வைத்துக் கொண்டு அனைத்தையும் சற்று ஒதுக்குபுறமாய் கொண்டுவந்து சேர்த்தோம்.

கன்னியாக்குமரியில் இருந்து வந்திருந்த மற்றொரு குடும்பம், அதில் எஞ்சியது அண்ணன், தம்பி இருவர் மட்டுமே. கரையில் சற்று தள்ளி நின்று தங்களின் குடும்பத்தினர் கடலில் விளையாடுவதை, நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். அலையைப் பார்த்து இவர்கள் எச்சரித்தும் அவர்களால் கரை திரும்ப இயலாமல் போயிற்று. அலை வருவதை அறிந்து, அது வரும்முன் கையில் இருந்து விழுந்த கிளிஞ்சல்களைப் பொறுக்கிவிடவேண்டும் என்ற வேகத்தில், அலையைப் பார்த்தபடியே அவசரம் அவசரமாக கிளிஞ்சல்களை அள்ளிய எட்டு வயது சிறுமி, 'அக்கா, அலை பக்கத்துல வந்துடுச்சு' என்று அவசரப்படுத்திய ஐந்து வயது சிறுவன், அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்த தாய் அனைவரும் அடுத்த வினாடி காணாமல் போயினர்.நடந்தது மொத்தமே மிகவும் கொடுமையான சோகம்தான் என்றாலும், வேளாங்கன்னியில் நடந்துள்ள கொடூரம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. வெளியூர்களில் இருந்து இறப்பதற்காகவே இங்கு வந்தார்களோ என்று எண்ணத் தோன்றியது. ஒவ்வொரு தப்பித்தலுக்குப் பின்னணியிலும், ஒவ்வொரு சாவிற்குப் பின்னணியிலும் ஒரு நிமிடக் கதை ஒன்று உள்ளது.

இருட்டும் வரை இடிபாடுகளில் சிக்கியவர்கள், காயம்பட்டவர்கள், இறந்தவர்கள் என்று அள்ளிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தோம். இடையிடையே மணிக்கொரு முறை கிளப்பி விடப்பட்ட புரளிகள், மக்களில் பாதிப் பேரை ஊரைக் காலி செய்ய வைத்தது. உயிரை மட்டும் கொண்டு வந்தவர்களுக்கு புகலிடத்திற்கு ஏற்பாடுகள் செய்தோம். எங்கள் பெருமாள் கோயில் ஆயிரம் பேரை அரவணைத்துக் கொண்டது. பத்ரி அவ்வபோது தொடர்பு கொண்டு பாதிப்பு நிலவரம், தேவைகள் என்ன என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டார். பத்ரியின் தயவில் கோவிலில் தங்கி இருக்கும் ஆயிரம் பேருக்கும் ஒரு நாள் நல்ல உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நடந்து முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. முதல் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லை, ஓய்வும் இல்லை. மூன்றாம் நாளில் இருந்து ஒட்டுமொத்த உலகின் கவனமும் நாகையின் மேல் விழுந்தது. நாகையைச் சீரமைக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நான்கு திசைகளில் இருந்தும் அனைத்து விதமான உதவிகளும் வந்து குவிகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, இறந்து போன சொந்தங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மீண்டும் திருப்பித் தர முடியும் என்ற நம்பிக்கைத் தோன்றுகின்றது. எத்தனை நாட்களில் என்பதுதான் இப்போதைக்கு பதில் சொல்ல இயலாத கேள்வி.

நடுராத்திரியில் மொட்டை மாடியில் அமர்ந்து நான் ரசிக்கும் அந்த அலையின் சத்தம் இப்போது கர்ண கொடூரமாய் ஒலிக்கின்றது. இன்னொரு கொடுமை இது போன்று வேண்டாம் என்று அந்த இயற்கையை வேண்டிடுவோம்.
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter