Sunday, February 27, 2005

 

மனிதனின்

பயங்கள் சுனாமியை விட வலியவை !!

ந. உதயகுமார்

கடலோரச் சுற்றுலா விடுதிகளில் சுனாமி புகுந்து பேரழிவை ஏற்படுத்திய கோரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். சுனாமி வ்ந்து சென்று 60 நாட்கள் கடந்து விட்டன.

சுனாமியால் தாக்கப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில், "உலகின் வெப்பமண்டலத்தின் சுற்றுலாத் தளங்களின் சொர்க்கம்" என்று வர்ணிக்கப் படும், ·புகெட் தீவின் சில பகுதிகளுக்கு ஏற்பட்ட அழிவினை திரும்பத் திரும்ப காட்டினர். இதனால் உலக மக்களுக்கு ·புகெட் அழிந்து விட்டது என்ற எண்ணம் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறது.

உண்மையில், கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால். ·புகெட் தீவிற்கு ஏற்பட்ட அழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அனேக கடலோர விடுதிகள் திறக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகள் வரவிற்காகக் காத்திருக்கின்றன.

ஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காணவில்லை.

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், ·புகெட் கடற்கரைகளின் ஆளில்லாத அழகிய பரந்த மணல் பரப்பை மீண்டும் காணமுடிகிறது. கடல் நீரும் மாசு குறைந்து தெளிவாகக் காணப் படுகிறது. இவை நமக்குக் கிடைக்கும் பத்திரிக்கைச் செய்திகள்.

·புகெட் ஆபத்து மிகுந்த பகுதி என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகளிடம் நிலவுவதும், அனேக மக்கள் இறந்து போன ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது மனித நேயச் செயலாக இருக்காது என்ற தயக்கமும் சுற்றுலாப் பயணிகள் ·புகெட்டை புறக்கணிக்க முக்கிய காரணங்கள் என்று கருதப் படுகின்றன.

இப்பகுதி வாழ் மக்களில் 70 சதவிகிததிற்கும் அதிகம் பேர் சுற்றுலாவைச் சார்ந்த தொழில்களை மையமாகக் கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தனர். ஒவ்வோரு வருடமும், ஜனவரி, ·பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் ·புகெட் தீவில் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்திருக்கும்.

இந்த முறை சுற்றுலாப் பயணிகள் வரவு குறைந்து போனதால் ·புகெட் தீவிற்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு (கடந்த 60 நாட்களில் மட்டும்) இந்திய ரூபாய் மதிப்பில் 2200 கோடி என்று அளவிடப் பட்டிருக்கிறது. இது சுனாமி இப் பகுதியில் ஏற்படுத்திய அழிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது.

ஆகவே சுற்றுலாப் பயணிகள் இப் பகுதியை புறக்கணிப்பதால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் தாக்கம் சுனாமியை விடக் கடினமாயிருப்பதைக் காண முடிகிறது.

இப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளே இல்லாமல் இல்லை. வந்து போகும் வெகு சிலரில் ஒரு பிரிவினர், இப்பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்வையிட வருகின்றனர். ம்ற்றொரு பிரிவினர், "நாங்கள் இங்கு செலவு செய்யும் பணம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவும். ஆகவே இப்பகுதி மக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு சுற்றுலா வந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

யோசித்துப் பார்த்தால் இரண்டாம் பிரிவினர் கட்சியில் முடிந்தால் நாமும் சேர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப அவர்கள் சார்ந்துள்ள முறையான தொழில்கள் நலிவடையாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

அனைவரும் தங்கள் சொந்த பயங்களை சிறிது ஒதுக்கி வைத்து இத்தொழில்களைத் தேவையான போது தயக்கமில்லாமல் நாட வேண்டும்.
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter