Sunday, February 27, 2005

 

மீனவர்கள்

கடலுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்

ந. உதயகுமார்

தமிழக மீனவர்கள் கட்டு மரங்களிலும், சிறு படகுகளிலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்து விட்டனர்! இவர்கள் இப்போது ஐந்து முதல் ஆறு மைல் தொலைவு வரை கடலுக்குள் செல்கிறார்கள் என்று தெரிகிறது.

தற்போது கடலுக்குச் சென்று வரும் மீனவர்கள், குறைந்த தூரத்தில், வழக்கத்தை விட குறைந்த நேரத்தில், அதிக மீன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். கடலில் மீன் வளத்தை சுனாமி அதிகரித்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்!!

இந்த நம்பிக்கை தவறு என்று எனக்குத் தோன்றுகிறது.

சுனாமி, மீன் பிடிக்கும் திறனைப் பெருமளவு (திறமையான மீனவர்கள், கட்டுமரங்கள், படகுகள், மீன்வலைகள்) அழித்துவிட்ட நிலையில், வழக்கத்தை விடக் குறைவான மீனவர்களே கடலுக்குச் செல்ல முடிகிறது.
கடலுக்குச் செல்வதில் இன்னுமும் மீனவரிடம் நிலவும் பயமும் குறைவானோர் மீன் பிடிக்கச் செல்லும் மற்றோர் காரணம்.
சிதைந்து போன படகுகள், மற்றும் பொது மக்களுக்கு மீன் உண்பதில் இருக்கும் அச்சத்தால் சந்தையில் மீனுக்குத் தேவை குறைந்திருத்தல், போன்ற காரணங்களால் பெரிய படகுகள் இன்னும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இப்போது மீன்கள் இனவிருத்தி செய்யும் காலமாகையால், கடலில் மீன்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க இயற்கையாக வாய்ப்பிருக்கும்.

சுனாமிக்கு முன், மீன் கிடைக்கும் அளவிற்கு அதிகமான அளவில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்ததால், பல்ர் நீண்ட உழைப்பிற்கும் நேரச் செலவிற்கும் பின்னரும் வெறும் கையுடன் கரைக்குத் திரும்பும் நிலை இருந்தது. ஆகவே மீனவர்கள் வருமானமும் நிலையற்றதாக இருந்தது.


மேலே எடுத்துக் காட்டிய காரணங்களால், இப்போது மீன் பிடிப்பதில் போட்டி மற்றும் திறன் குறைந்திருப்பதும், மீன்கள் இனவிருத்திக் காலத்தாலும், மீனவர்களுக்கு அதிக மீன்கள் வழக்கத்தை விடக் குறைந்த நேரம் மற்றும் முயற்சியில் கிடைக்கிறது என்பது என் எண்ணம்.


ஆனால், மீனவருக்கு மீன் வளத்தை சுனாமி அதிகரித்து விட்டதாக ஏற்பட்டுள்ள நம்பிக்கை இடைக்காலத்தில் அவர்கள் உற்சாகத்தை அதிகப் படுத்தி அவர்களைத் தொழிலுக்குச் செல்ல ஊக்கப் படுத்தும். ஆகவே இந்த நம்பிக்கை நன்மைக்கே.


அதே நேரத்தில் மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. சுனாமி அழிவை மட்டும் விட்டுச் செல்லவில்லை. மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய ஒரு வாய்ப்பையும் அரசுக்கு விட்டுச் சென்றிருக்கிறது.


தெற்கு ஆசியாவில், சுனாமி நாசம் செய்த மீன் பிடிக்கும் மற்றும் மீன் வளர்க்கும் தொழிலில் இருந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 2200 கோடியைத் தாண்டும். 1,11,073 படகுகளும், 36,235 சீரமைக்க முடியாத படகு விசைகளும், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட வலை போன்ற மீன் பிடிக்கும் உபகரணங்களும், மீன் பிடி படகுகள் வந்து செல்லும் துறைமுகங்களுக்கு ஏற்பட்ட சேதங்களும், மீன் வளர்க்கும் பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதங்களும் இதில் அடங்கும். இத் தகவல்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, தன் கணக்கெடுப்பிற்குப் பின் நமக்கு அளித்திருக்கிறது.


இந்த அழிவுகளை அரசுகள் சீரமைக்கும் முயற்சிகளை எடுத்து வரும் நேரத்தில், மீன் பிடி மற்றும் வளர்க்கும் திறனை, தேவைக்கதிகமாகச் செல்லாமல் வரும் காலத்தில் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படிக் கட்டுப் படுத்துவதால், மீனவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். கடலில் மீன் வளமும் நிலையாக இருக்கும்.

அரசு செய்ய வேண்டியவை என்று எனக்குத் தோன்றியவை சில:

சீரமைப்புக்குச் செலவிடும் பணத்தால் ஏற்படப் போகும் திறன்களை மதிப்பிட்டு, தேவையைத் திட்டமிட்டு, தேவைக்கேற்பச் செலவு செய்தல்
மீன் தொழிலில் ஈடுபட்டு அனைத்தையும் இழந்த மீனவர்களில் சிலருக்கு மற்ற பணிகளைச் செய்ய (திறனுள்ள ஆட்கள் தேவையான தொழில்கள் பல இந்தியாவில் உள்ளன. உதாரணம்: சாரங் கட்டுதல், தண்ணீர் புகாத் தளம் அமைத்தல் போன்ற கட்டடப் பணிகள்) பயிற்சி அளித்தல்
கடலில் மீன் வளத்தை தேவைப் பட்ட நேரத்தில் அருதியிட்டுக் கூறும் திறமையை வளர்த்துக் கொள்ளுதல்.
மீன்களுக்கான தேவையை மீனவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள வகை செய்தல்
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter