Sunday, February 13, 2005

 

நாகை நடப்புகள்

D. V. பாபு

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாகையின் நிலைக் குறித்து எழுத விரும்புகின்றேன். இடையில் எழுத நேரம் இல்லாமல் இல்லை. கிடைக்கும் நேரங்களில் மனநிலை அல்லது உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. ஒரு பத்தி எழுதுவதற்குள் அயற்சி வந்து தூங்கச் சென்றுவிடுவேன். எழுதாமைக்கு இன்னொரு காரணம், நான் எழுத நினைக்கும் நடப்புகளை எல்லாம் நண்பர் ரஜினி ராம்கி அவர்கள் எனக்கு முன்பே மிக அழகான நடையில், தெளிவாய் எழுதியிருப்பார். சுனாமித் தாக்குதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நிவாரணப் பணிகளுக்கான தீவிரப் பங்களிப்பில் இருந்து சற்று விலகி, என்னுடைய சொந்தப் பணிகளில் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். அதற்கு முன், ஒரு தற்காலிக முடிவுரையாக நாகையின் தற்போதைய நிலவரம், நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அரசியல் கூத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக எழுதியதைத் தொகுத்து இன்று வெளியிடுகின்றேன்.

தற்போதைய நிலவரம்

நாகை நகரை இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். பாதிக்கப்படாத பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஒரு சிலத் தொழில்கள் மந்தமாக இருக்கின்றன. மற்றவை பழைய நிலைக்குத் திரும்பி விட்டன. உணவுவிடுதி, டாஸ்மார்க் போன்றவற்றில் முன்புக்கு இப்போது வியாபாரம் அதிகமாகவே நடக்கின்றது. கடற்கரையை ஒட்டினப் பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் எல்லாம், நகரின் மத்தியப் பகுதியில் வீடு தேடி அலைந்து கொண்டு உள்ளனர். நிலமதிப்புகள் தற்போது எதிரிடையாக மாறிவிட்டது. மக்கள் மனதில் இன்னும் சுனாமி குறித்த பயம் நீங்கவில்லை. இது மறையச் சற்று நாளாகலாம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களில் 70 சதவீதத்திற்கு மேல் மீனவர்கள் அல்லது மீனவர்களைச் சார்ந்து தொழில் புரிபவர்கள். சொந்தங்கள், உறைவிடம், உடைமைகள், தொழில், மனோதைரியம் என்று இவர்கள் இழந்தவற்றைப் பட்டியலிடலாம். சொந்தங்களை இழந்தவர்களுக்கு அவற்றைத் திருப்பித் தருதல் சாத்தியமற்றது. அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் தொகை, மேலும் கொடுப்பதாக அறிவித்து உள்ள தொகை எல்லாம், மறைந்து போன உயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் அல்ல. வெறும் ஆறுதல்கள் அல்லது ஆறுதலுக்கான முயற்சிகள். உயிர் இழப்பு ஏற்பட்டுள்ள குடும்பங்கள் பலவும், இன்னமும் அந்த சோகத்தின் பிடியில் இருந்து மீளவில்லை. பலர் மனதைத் தேற்றிக் கொண்டு விட்டனர். ஒரு சிலர் நினைத்து நினைத்துக் கண்ணீர் விடுகின்றனர். ஆறுதல் வார்த்தைகள் இவர்களுக்கு மருந்தாக இல்லை. எரிகின்ற தீயிற்கு எண்ணெய் போல் சில சமயம் அவர்கள் உணர்கின்றார்கள். காலத்தால் மறத்தல் ஒன்றுதான் இதற்கு தீர்வு.

உடைமைகளை மட்டும் இழந்தவர்கள் விரைவிலேயே பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாகத் தோன்றுகிறது. வந்து குவியும் உதவிகள் இவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. இப்போது இவர்களின் கவனம் எல்லாம் நிவாரணம் பெறுவதில்தான். இதில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள், தில்லுமுல்லுகள். அதனைப் பற்றி இறுதியில் எழுதுகின்றேன். மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படவேண்டும். இதுதான் அங்குள்ளவர்களின் விருப்பம். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வந்துவிடுகின்றன. வருமானம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் இதனை நம்பி ஓட்டுவது என்பது இவர்கள் தரப்புக் கேள்வி. அரசு கொடுத்த 4000 ரூபாய் என்றோ சரியாகிவிட்டது. தொழிலுக்கு மீண்டும் திரும்பும் வரை மாதாமாதம் அரசு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு சிலர் கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். மற்றபடி சிறிய படகுகள், பெரிய படகுகள் என்று எதுவும் கடலுக்குச் செல்லவில்லை. நிறைய விசைப் படகுகள் முழுவதுமாய் உடைந்து போய்விட்டன. ஒரு சிலப் படகுகள் சரிசெய்து பயன்படுத்தும் நிலையில் இருந்தாலும் அவற்றைச் சரி செய்வதற்கான இடவசதி, ஆள் வசதி மற்றும் பொருள் வசதி இப்போது இவர்களிடம் இல்லை. நிறைய வங்கிகள் இவர்களுக்காக தளர்த்தப்பட்ட விதிகளுடன் கடன் கொடுக்கத் தயாராய் இருந்தாலும், அதை வாங்குவதில் நிறையப் பேருக்குத் தயக்கம். கடன் என்று இல்லாமல் இலவசமாக அரசோ அல்லது மற்ற தொண்டு நிறுவனங்களோ தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. படகுகள் கிடைக்கப்பெற்று இவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பச் சில காலம் ஆகும். அவர்களின் கணக்குப்படி ஆறு மாதத்திற்கு மேல் ஆகலாம். பெரிய விசைப்படகுகள் செய்ய நிறைய கால அவகாசம் தேவை. அதோடு மட்டுமன்றி அதற்கு தேவையான மரம் சாதாரண நாட்களிலேயே கிடைப்பது கடினம் என்கின்றார்கள். அத்தனை படகுகளை ஒரே நேரத்தில் செய்ய தேவையான மரங்கள், ஆட்கள், இடவசதி அனைத்தும் கிடைக்குமா என்பது இவர்களின் கேள்வி.

அந்தப்பகுதியைச் சேர்ந்த எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தங்களின் கவலையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். எல்லாம் கிடைத்தாலும் மீண்டும் இந்த இடத்தில் இருந்து கொண்டு மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவேண்டுமா என்பது இவர்கள் மனதில் உள்ளக் குழப்பம். முன்பே மீன்பிடித் தொழில் நல்ல லாபகரமாக இல்லை. ஒரு சில மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் மீன்கள் கிடைப்பது மிகவும் சிரமமாய்தான் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து இலங்கை எல்லைப் பகுதிக்கு சென்று மீன் பிடித்து வரும் சிலரால்தான் நிறைய சம்பாதிக்க முடிந்தது. சுனாமிக்குப் பின் மீன்கள் எல்லாம் இடம் மாறி, மிகவும் குறைந்துவிட்டதாய் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இவர்களை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலைக் காரணமாய் வைத்து வேறு தொழிலுக்கு மாறிவிடலாம் என்று உள்ளோம். வங்கிகள் கடன் தரத் தயாராய் உள்ளன. என்னத் தொழில் செய்யலாம் என்று சொல் என்று என்னிடம் ஆலோசனைக் கேட்டனர். பலருடன் ஆலோசித்து பதில் சொல்வதாய் கூறியிருக்கின்றேன். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

நிவாரணப் பணிகள்

இந்த ஒரு மாத காலத்தில், முதல் கட்டப் பணியான அடிப்படை மற்றும் அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குதல் சிறப்பாகவே நடந்துள்ளது. இரண்டாம் கட்டப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. பாதிக்கப்பட்டவர்கள் கோயில்கள் மற்றும் கல்யாண மண்டபங்களைக் காலி செய்து கொண்டு தங்களின் குடியிருப்புகளுக்கோ அல்லது தற்காலிக குடியிருப்புகளுக்கோ இடம் பெயர்ந்துள்ளனர். சில இடங்களில் தற்காலிக குடியிருப்பு கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இடம் இன்றி முன்பு இருந்த இடங்களிலேயே சிலர் தங்கி உள்ளனர். இன்னும் சிறிது நாட்களில் அவர்களும் இடம் பெயர்ந்து விடுவார்கள். கொஞ்சம் வசதி உள்ளவர்கள், தற்காலிகக் குடியிருப்பில் தங்கப் பிடிக்காமல், நகரில் வாடகை வீடு எடுத்துத் தங்கி உள்ளனர்.

தற்காலிகக் குடியிருப்புகள் என்று பெயர் சூட்டப்பட்டு விட்டாலும், அந்த தற்காலிகத்தின் கால அளவு குறைந்தது ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை. இன்னும் அதிகமானாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில், இதில் தங்குபவர்கள் ஒரு முழுக் கோடைக் காலத்தையும், ஒரு மழைக் காலத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு உகந்தவைகளாக இந்த குடியிருப்புகள் மாற்றப்பட வேண்டும். கழிப்பிடங்கள் போதாது. தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ள கழிப்பிட, குளியலறை மற்றும் குடிநீர் வசதிகள், மக்கள் இடம்பெயரும் வரை சிறப்பாய் பராமரிக்கப்பட வேண்டும். எங்களைப் போன்ற பல தொண்டு நிறுவனங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு தங்கும் மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை விடாது ஊட்டி வருகின்றது. கழிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்துதல், குப்பைகளைச் சேகரித்தல், சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம் போன்ற சில நல்ல விசயங்களை இவர்களுக்குக் கற்றுத் தர, ஒரே தரத்தில் உள்ள இந்தத் தற்காலிகக் குடியிருப்புகள் நல்ல வாய்ப்பாய் உள்ளது.

கடந்த சில தினங்களாக தற்காலிகக் குடியிருப்பு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் நிறைய சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது. இந்த குடியிருப்புகளில் தங்குபவர்களுக்கெல்லாம் அரசாங்கம் வீடு கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்படாத பலரும் இங்கே புகுந்துள்ளனர். கொஞ்சம் செலவு செய்தும் சிலர் வந்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வரும்போதெல்லாம் தவறாமல் ஆஜராகிவிடும் இவர்கள், மற்ற நேரங்களில் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்குச்(!) சென்றுவிடுகின்றனர்.

உளவியல் ஆலோசனை என்ற பெயரில் மதமாற்றப் பிரச்சாரங்கள் நடப்பதாய் ஒரு பிரச்சனை எழுப்பப்பட்டு, நல்லவேளையாக அது பெரிதாகும் முன் அணைக்கப்பட்டு விட்டது. குற்றச்சாட்டு எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. உண்மையோ, பொய்யோ.. இது போன்ற செய்திகள் பரப்பப்பட்டால், விபரீத விளைவுகள் ஏற்படலாம். உணர்ச்சிகரமான சூழலில் மனிதநேயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.

உளவியல் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குபவர்கள் பற்றி; தற்போது இதற்கென ஒரு பெரிய கூட்டமே கிளம்பி இருக்கின்றது. திறமையான உளவியல் பயிற்சியாளர்களில் இருந்து ஒரு மணி நேர பயிற்சி எடுத்துக் கொண்டு வந்துள்ளவர்கள் வரை பலரும் இதில் அடங்குவர். திறமையும் அனுபவமும் இல்லாத பலர், உளவியல் ஆலோசனை என்ற பெயரில், பாதிக்கப்பட்டவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு அல்லது பேசியே கொல்கின்றனர். ஆரம்ப நாட்களில் 'தேமே' என்று கேட்டுக் கொண்டிருந்த கூட்டம், இப்போது ஓடி மறைந்து கொள்கின்றது. எனது நட்புக் கூட்டங்கள் என்னிடம் புலம்பித் தள்ளினார்கள். "எங்களுக்கு சுனாமியே பரவாயில்லைங்கிற அளவுக்குப் பண்ணிட்டாங்கப்பா..". நான் அவர்களுக்கு விளையாட்டாய் அளித்த பதில், 'இதோட ஐடியாவே அதுதாம்ப்பா.. ஒரு கொடுமைய மறக்க அதைவிட பெரிய கொடுமைய அனுபவிக்க வைக்கிறது'.

உளவியல் ஆலோசனையில் அனுபவம் வாய்ந்த சிலக் குழுமங்கள், சிறப்பாய் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் பலருக்கும் இத்துறையில் நிறைந்த அனுபவமும், பயிற்சியும் இருந்தாலும், மொழிப்பிரச்சனை ஒரு தடையாகத்தான் இருக்கின்றது. அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராய் இல்லை. மொழி ஒரு பிரச்சனையே அல்ல என்கின்றனர். கூடியிருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் சிரிப்பது, தாங்கள் சொல்வதின் அர்த்தம் புரிந்துதான் என்று பலர் நினைக்கின்றனர். எது எப்படியோ, சிறுவ சிறுமியர் அனைத்தையும் ரசிக்கின்றனர். எல்லாத்தரப்பு உளவியல் ஆலோசனைக் குழுக்களும் சிறுவயதினரை சந்தோசப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பாராட்டலாம்.

நிவாரணக் கூத்துக்கள்

முதல் பத்து பதினைந்து நாட்கள் காணாமல் போயிருந்த இடைமட்ட மற்றும் அடிமட்ட அரசியல்வாதிகள் பலரும் சிறிது நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தலைத் தூக்க ஆரம்பித்தனர். தங்கள் பகுதி மக்களுக்காக நிவாரணம் பெற்றுத் தருவதில் இவர்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கின்றது. மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று அரசு அறிவித்த ரூபாய் 2000, 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆங்காங்கு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது. முதலில் சுனாமியால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு மட்டும் என்று அறிவித்து, நகரமன்ற உறுப்பினர்களின் வாயிலாக அதனைக் கொடுக்க ஆரம்பிக்க, கூடவே பிரச்சனைகளும் ஆரம்பமாயிற்று. பின்னர் அது நாகையில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் என்று அறிவிக்கப்பட்டு ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், ஒட்டுமொத்த நாகை மக்களுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டது. [எனக்கும் கிடைத்தது. அதை நான் என்ன செய்து இருப்பேன் என்பதனை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகின்றேன் :-) ]

இதனைத் தொடர்ந்து நாகைக்கு பக்கத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும், நாங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கிளம்ப, அரசாங்கம் புலி வாலைப் பிடித்த கதையாய் தடுமாறிக் கொண்டு இருந்தது. தினமும் குறைந்தது ஒரு சாலை மறியலாவது நாகையைச் சுற்றி உள்ள கிராமங்களில் நடந்து வந்தது. சில வாரங்களாக சார் ஆட்சியருக்கு இவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் வேலையே. உள்ளூர் தொலைக்காட்சியில் தினமும் எதாவது ஒரு பெண்மணி கையில் மைக்கைப் பிடித்து கொண்டு, 'பக்கத்து ஊருக்கு கொடுத்து இருக்காங்க, நாங்க மட்டும் என்ன இளிச்சவாயர்களா.. நாங்களும்தான் மனசால(?) நிறைய பாதிக்கப்பட்டு இருக்கோம் ..' என்ற ரீதியில் ஆவேசமாகப் பேசிக் கொண்டு இருப்பார். கடந்த சில நாட்களாய்த்தான் இவைகள் குறைந்துள்ளன.

கட்சி வேறுபாடு இன்றி அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் நிறைய பணம் பார்க்க வழிகள் செய்யப்பட்டுவிட்டன. நான் உத்தேசமாய் குற்றச்சாட்டுகளை வீசவில்லை. ஓரளவிற்கு உறுதியாய் தெரிந்தவற்றை மட்டுமே இங்கு எழுதுகின்றேன். எனக்குப் பழக்கமான ஒரு கிராம நிர்வாக அதிகாரி தனக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கிடைத்ததாக மிகவும் சலித்துக்கொண்டார். இந்த ஒரு மாதம் நான் உழைத்த உழைப்பிற்கு எனக்கு ஒரு லட்சம் கூட கொடுக்கலாம், அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றேன் என்று தன் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைத்தார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மிகச்சிறப்பாய் செயலாற்றி வருகின்றார்கள். மிகவும் திறமைசாலிகளைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுதான் அனைத்தையும் திட்டமிடுகின்றது. இருப்பினும் செயல்படுத்தும் வேலையில் இருப்பவர்கள் கீழ்மட்ட அதிகாரிகள்தான். ஒரு சிலர் நன்கு உழைத்தாலும், பலருக்கும் உழைப்பது என்பது புதிதாய் இருக்கின்றது. உயர் அதிகாரிகளுக்கு முன்பு பவ்யமாக தலையாட்டும் இவர்கள், அதிகாரிகள் நகர்ந்தவுடன் 'ஏன்தான் இங்கே வந்து மாட்டிக் கொண்டோம் என்று இருக்கு..' என்ற புலம்பலை ஆரம்பித்துவிடுகின்றனர். மறக்காமல் இன்னொன்றையும் புலம்புவார்கள். 'சுனாமி வந்ததுல அவங்களுக்கு ஒரு நாள்தான் கஷ்டம், அதுக்கப்புறம் ஆரம்பிச்ச எங்க கஷ்டம் ஒரு மாசமாகியும் இன்னும் விடலை'.

சுனாமிக்கு பின் நாகை மாவட்ட மக்களின் நாயகனாய் அந்தஸ்து பெற்றிருப்பவர் புதிய ஆட்சியரான திரு. ராதாகிருஷ்ணன். அவரது உழைப்பினையும், நிர்வாகத் திறனையும் அனைத்துத் தரப்புமே பாராட்டுகின்றது. யாரும் எளிதில் சென்று சந்திக்கும் எளிய மனிதராய் இருக்கின்றார். கிடைத்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில், இவர் மக்களை கையாளும் விதத்தைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஒரு மணி நேரம் அதிகம் உழைத்துவிட்டாலே, ஒரு மாதம் முழுதும் சொல்லிச் சொல்லி அலுத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு நடுவில் ஓய்வேயின்றி பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் இந்த உன்னதமான மனிதர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். அவரை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணம், உங்கள் வாழ்த்துக்களை அவரது மின்னஞ்சலுக்கு ( collector@nagai.tn.nic.in ) அனுப்பலாம். அவரது செல்பேசி எண்: 98424 22220.

நாங்கள்தான் (நாங்களும்) பாதிக்கப்பட்டவர்கள் என்று சுனாமிக்குச் சம்பந்தமே இல்லாத கூட்டங்கள் பலவும் நிவாரணங்களைப் பெற்று சென்றனர். சென்று கொண்டு இருக்கின்றனர். ஒரு திருமண மண்டபத்தின் காவல்காரர் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த பொருளும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெருமைப் பேசினார்.

தேவைக்கு அதிகமாய் வாங்கி வைத்துக் கொண்ட பொருட்களை எல்லாம், இப்போது குறைந்த விலைக்கு பலர் விற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு அவர்களே கூறிக் கொள்ளும் நியாயம், 'எல்லாரும் பொருளாகவே கொடுத்துட்டாங்க.. மற்றச் செலவுகளுக்கு பணத்துக்கு நாங்க எங்கே போவோம்..?'. ஆனால், இன்றும் எந்தப் புதியப் பொருள் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் ஒரு மீனவக் கிராமத்தில் அதிகப்படியான பாத்திரங்களை விற்று ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். கூடவே தற்காலிகக் குடியிருப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட பெரியப் பெரிய நாகத் தகடுகளும் விலை பேசி ஏற்றப்பட்டன. கடைநிலை ஊழியர்கள் எதிர்த்துக் கேட்க தைரியம் இன்றி ஒவ்வொரு மேலதிகாரிகளாய்த் தொடர்பு கொண்டு நிலைமையத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

சுனாமிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த, இறப்பு பதிவு செய்யப்படாதவர்கள் பலரையும் சுனாமியால் இறந்ததாய் காட்டி நிவாரணத் தொகைப் பெற்றக் கூத்தும் நடந்தேறியது. நகரின் மத்தியில் வசிக்கும் சிலர் கூட, மீன் வாங்கச் சென்ற போது இறந்து விட்டனர் என்று காண்பித்து பணம் பெற்று உள்ளனர். அதிகப்பட்சம் இவர்கள் செய்த வேலை 'காணவில்லை' என்ற ஒரு புகாரினைக் காவல் நிலையத்தில் பதிவு செய்தது மட்டுமே. இதற்கு 'கமிசன்' பெற்றுக் கொண்டு ஒரு கூட்டம் திறம்பட வேலைகளை முடித்துத் தந்துள்ளது.

இப்படி அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், சில தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என்று அனைத்து தரப்பும் செய்த, செய்து கொண்டிருக்கும் தவறுகள் மக்கள் எல்லோரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு வழி செய்துவிட்டது. நான் புதுச்சட்டை அணிந்து சென்றால், 'என்ன சுனாமி சட்டையா..?' என்ற நக்கலான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ['ஆமாம், இந்தா உனக்கொன்று' என்று கேட்பவர்களுக்கு ஒரு சட்டைக் கொடுக்கப்பட்டால் கேள்விகள் மறுபடியும் எழாது. நடக்கும் தில்லுமுல்லுகளை யாரும் கேட்ககூடாது என்ற எண்ணத்தில்தானோ என்னவோ, எல்லோருக்கும் நிவாரணம் என்று 2000 பணம் கொடுத்து, எல்லோர் வாயும் அடைக்கப்பட்டுள்ளது!]

இன்று நாகை எங்கும் பரவலாகக் ஒலிக்கும் பெருமூச்சு வார்த்தைகள் இவைதான் - 'சுனாமியால் அழிந்தவர்களை விட வாழ்ந்தவர்கள்தான் அதிகம்'.

என்ன உதவி செய்யலாம்..?

இறுதியாக.., இன்னும் நாங்கள் எந்த உதவியுமே செய்யவில்லை. என்ன உதவி செய்யலாம் என்று கேட்பவர்களுக்கு.

என்னுடைய முந்தைய பதிவுகளில், சிறிது காலம் சென்றபின் உதவி செய்ய யாரும் இருக்கமாட்டார்கள், அப்போது நாம் செய்யலாம் என்று கூறியிருந்தேன். அது வெள்ளம், புயல் போன்ற சிறிய அழிவுக்காலங்களில் நடந்தவற்றை மனதில் கொண்டு எழுதப்பட்ட என்னுடையக் கருத்து. அது மிகவும் தவறு என்று இப்போது தெரிகின்றது. நாளாக நாளாகத்தான் அதிக உதவிகள் வந்து குவிவது போல் ஒரு தோற்றம் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் தேவைப்படும் அனைத்தையுமே செய்துத்தர தயாராய் இருக்கின்றார்கள். ஏராளமான நிதியினை வைத்துக் கொண்டு பல அமைப்புகள் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று தடுமாறுவது நன்குத் தெரிகின்றது. நாம் யோசிப்பதற்கே முன்பே, அதனைச் செய்து முடித்துவிடும் வேகத்தில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆகவே, பெரிய அளவில் நிதி அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான புதியத் திட்டங்கள், திட்ட அறிக்கைகள் வைத்து இருப்போர் மாவட்ட ஆட்சியர் அவர்களை தொலைபேசியில் நேரிடையாகத் தொடர்பு கொண்டுத் தெரிவிக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களில் உங்களுக்குத் தேவையான தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும்.

நாகை சுனாமி பாதிப்பு விபரங்கள், நிவாரணப் பணிகள் குறித்த செய்திகள், தேவைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்கண்ட இணையத்தளங்களில் உங்களுக்குக் கிடைக்கும்.

http://www.tsunami2004-india.org

http://www.tn.gov.in/tsunami/default.htm

http://nagapattinam.nic.in

ஹாலந்து நாட்டு அமைப்பு ஒன்று எங்கள் அமைப்பின் மூலமாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்து எடுக்க விருப்பம் தெரிவித்தது. எங்களுக்கு கிராமம் கிடைக்கவில்லை. அனைத்துமே தத்து எடுக்கப்பட்டுவிட்டன. பந்திக்கு முந்துவது போல் இதற்கும் முந்தியிருக்கவேண்டும் போலிருக்கின்றது. ஆனால் இந்த 'தத்து' என்பதற்கு ஒவ்வொரு அமைப்புகளும் தரும் விளக்கம் வித்தியாசப்படுகின்றது. என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்னும் பேச்சளவிலேயே இருக்கும் திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும்போதுதான் உண்மைநிலைத் தெரியவரும்.

'இன்னும் ஒரு வருடத்தில் நாகையை எப்படி மாற்றிக் காண்பிக்கின்றேன்..பாருங்கள்..' என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் அன்று நமது முதல்வர் சவாலாகப் பேசிச் சென்றார். பல்வேறு அமைப்புகளும் இதையேத்தான் சொல்கின்றன. முற்றிலும் புதிய நாகை நகரை நாங்கள் நிர்மாணித்துத் தருகின்றோம் என்கின்றார்கள். ஒரு புதிய நகரையே தற்போதைய நகர எல்லைக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் அமைக்க திட்டங்கள் இருப்பதாக செய்திகள் கசிகின்றன. நல்லது நடந்தால் சரி. நமது எதிர்பார்ப்பும் இனி நல்லதாகவே இருக்கட்டும்.

பின்குறிப்பு: சுனாமியால் நான் பாதிக்கப்பட்டேனோ இல்லையோ.. என்னுடைய அறுசுவை இணையத்தளம்(www.arusuvai.com ) நிறையவே பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஒரு மாத காலத்திற்கும் மேல் எந்தவித புதிய சேர்க்கையும், மாற்றங்களும் இல்லாத காரணத்தால், 50 சதவீத வருகையாளர்களை இழந்துள்ளது. இதனைச் சரிச் செய்து, பழைய நிலைக்கு அல்ல, அதைவிடப் பன்மடங்கு சிறந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றேன். என்னுடைய இந்த வலைப்பதிவும் நாளை முதல் பழையபடி தினம் ஒரு சமையல் குறிப்பினைத் தாங்கி வரும். நானும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினால்தான் நாகை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது என்ற வாக்கியம் அர்த்தம் பெறும் ;-)
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter