Sunday, February 13, 2005

 

நிவாரணப் பணிகள் மற்றும் உதவிகள்

D. V. பாபு.

சம்பவம் நடந்த தினத்திலிருந்து நேற்று மதியம் வரை எனது கம்யூட்டரைத் தொடவில்லை. அதற்கு நேரமும் இல்லை. நேற்று மதியம் அரசாங்கம் கொடுத்த சுனாமி எச்சரிக்கை, வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிவாரணப் பணிகள் அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. மதியத்திற்கு மேல், ஊரில் இருந்த பாதி மக்களில் பாதி பேர் இருப்பவற்றை எடுத்துக் கொண்டு, ஊரை விட்டு வேறிடம் சென்று விட்டனர். இந்த முறை அரசு சொன்னது இரண்டு கிலோமீட்டர் வரை இந்த தாக்கம் இருக்கும் என்று. அது பலரின் காதுகளைக் கடந்து எட்டு கிலோமீட்டர் என்று முடிந்ததின் விளைவு, ஊருக்குப் பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். அனைத்து பணிகளையும் மாலை ஆறு மணி வரை நிறுத்தி வைக்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அறிவித்து விட்டார். எல்லோரும் திரும்பிவிட்டனர். தொண்டார்வலர்கள் நகரை விட்டுத் தள்ளி வேறு ஒரு ஊரில் இருப்பதாகத் தகவல்.

இதனால் நான்கு நாட்களுக்குப் பிறகு என்னுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதற்கும், எழுதுவதற்கும் சற்று நேரம் கிடைத்தது. நிறைய மின்னஞ்சல்கள் வந்து குவிந்து இருக்கின்றன. என்னிடம் இருந்து பதில் எதுவும் இல்லாத காரணத்தால் பலரும் கவலைப் பட்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் பதில் அனுப்ப முடிந்தது. நிவாரணப் பணிகள் குறித்தும், உதவி வழங்குவது குறித்தும் பலரும் என்னைக் கேட்டு இருந்தார்கள். அவர்களுக்காக இதனை எழுதுகின்றேன்.

பாதிக்கப்பட்ட தினத்திலிருந்து இரண்டு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். முதலில் சீரமைத்தல் பணி, இதில் உடல்களை அப்புறப்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்பு அளித்தல் அனைத்தும் அடங்கும். இரண்டாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவது.

நான் முதல் நான்கு நாட்கள் சீரமைத்தல் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதனால் மற்றொரு பணி எந்த முறையில் நடைபெற்று வருகின்றது என்பது தெரியாமலே இருந்தது. மேலோட்டமாக பார்க்கையில் அது சிறப்பாக நடைபெற்று கொண்டு வருவதாகவே தோன்றியது. நேற்றுதான் ஆட்சியரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. உதவிகள் முறையாக மக்களைச் சென்றடைய உதவுமாறு. அதன்பின் அந்த பணியில் கவனம் செலுத்தியபோது, குறைபாடுகள் சில இருப்பதும் தெரிய வந்தது. ஆனால், சில ஊடகங்கள் பெரிது படுத்தும் அளவிற்கு குறைபாடுகள் இல்லை.

உதவிகள் முறையாய் சென்றைடைய நேற்று அனைவரும் கூடி திட்டமிட்டோம். அதை செயல்படுத்திப் பார்க்கும் முன், மற்றொரு சுனாமி எச்சரிக்கை வந்து அனைவரும் வெளியாகிவிட்ட நிலையில், அது இயலாமல் போய்விட்டது. மீண்டும் இன்று பழையபடி எங்கள் பணிகளைத் தொடர்வோம்.

சில விசயங்களை மனதில் கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். அவர்கள் வசித்தது குடிசை வீடுகளில்தான் என்றாலும், நாள் ஒன்றுக்கு 500 ல் இருந்து 5000 வரை சம்பாதித்து கொண்டிருந்தவர்கள். செலவு செய்வதில் யாரும் அவர்களுக்கு இணையாக முடியாது. இன்று நாகையில் நல்லபடியாக பல தொழில்கள் நடக்கின்றது என்றால் அதற்குக் காரணம் மீனவர்கள்தான். எனக்கு நன்கு தெரியும். மீனவர்கள் படகு எடுக்காத காலங்களில் நாகையின் அனைத்துத் தொழில்களிலும் அதன் பாதிப்பு இருக்கும். அவர்களுக்குத் தெரியாத ஒரு பழக்கம் சேமித்து வைப்பது. கடந்த சில ஆண்டுகளில் பலர் இந்த நிலையில் இருந்து மாறி, நல்ல வீடு, பத்திரமான சேமிப்பு என்று இருந்தாலும், பெரும்பான்மையான மீனவர்கள் அதே நிலையில்தான் இருந்தார்கள். தன்மானம், தைரியம், ஒற்றுமை, முரட்டுத்தனம், தாழ்வு மனப்பான்மை என்று அனைத்துமே அவர்களுக்குச் சற்று அதிகம்தான். ஒரே நிமிடத்தில் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டவர்கள். உதவிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம், வேறு வழியில்லையே என்ற உண்மையின் தாக்கம், கையேந்தும் நிலை வந்துவிட்டதே என்று நொந்த நிலை.. இப்படி பல மனநிலைகளில் அவர்கள் தவிக்கின்றனர். இவற்றை எல்லாம் மனதில் கொண்டுதான் அவர்களுக்கு உதவவேண்டியுள்ளது. உதவி வழங்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

இந்த இடத்தில்தான் வெளியூரில் இருந்து வரும் தொண்டார்வலர்கள் பலரும் தவறு செய்வதை உணருகின்றேன். வாகனங்களில் இருந்தபடியே துணிகளை தூக்கி எறிதல், உணவுப் பொட்டலங்களை வீசுதல் போன்ற செயல்களைப் பரவலாக காணமுடிகின்றது. அதற்கும் ஒரு கூட்டம் அடித்துக் கொண்டு உள்ளது. நான் பார்த்த வரையில், அந்த கூட்டத்தில் இருக்கும் முக்கால்வாசிப் பேர் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.

பழையத் துணிகளும், உணவுப் பொட்டலங்களும் நகர் முழுதும் இறைந்து கிடக்கின்றன. 'ஒன்றும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றுதானே அவ்வளவு தூரத்தில் இருந்து இதனைக் கொண்டு வருகின்றோம்' என்று உதவி செய்பவர்களும் வருத்தப்படுகின்றனர்.

இதனை முறைப்படுத்தும் பணியில் இன்றிலிருந்து முழுமூச்சாய் இறங்கப் போகின்றோம். என்ன உதவித் தேவை என்று கேட்பவர்களுக்கு நான் கூறுவது இதனைத்தான். பழையத்துணிகள், உணவுப் பொட்டலங்களைத் தவிர்த்து விடுங்கள். என்னத்தான் இன்று ஒன்றுமே இல்லாத நிலைக்கு ஆளாகிவிட்டாலும், நான்கு நாட்களாய், மூன்று வேளையும் புளிய சாதம், எலும்மிச்சை சாதம் சாப்பிடுவது என்பது யாருக்குமே கஷ்டம்தான். அதற்காக அவர்களுக்கு கறி பிரியாணி செய்து போட முடியாது என்றாலும் சற்று மாறுதலான உணவுகளை வழங்கலாம். அதற்கான வழிகளை உண்டாக்கப் போகின்றோம்.

மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் ஏராளமாக வந்த வண்ணம் உள்ளன. ரெட் கிராஸ் போன்ற பெரிய அமைப்புகள் அதில் முழுமூச்சாய் செயல்படுகின்றன. அவற்றிற்கான தேவையும் இப்போது இல்லை (எனக்குத் தெரிந்தவரையில்). மற்றபடி, பாய், தலையணை, போர்வை, ஆடைகள், செருப்பு, சோப்பு, எண்ணெய் என்று அத்தியாவசியப் பொருட்களை அனுப்பலாம்.

அவற்றை அனுப்புபவர்கள் எங்களது எக்ஸ்னோரா, லயன்ஸ் அல்லது ரோட்டரி போன்ற சங்களின் வாயிலாகக் கொடுத்தல் நலம். அவற்றிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசு எந்த உதவியையும் செய்வதில்லை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் அனைத்தையும் செய்து வருகின்றன என்று ஊடகங்கள் செய்தி பரப்பியதின் விளைவு, இனி எக்ஸ்னோரா, லயன்ஸ், ரோட்டரி போன்ற நிறுவனங்கள் அவர்களாக யாருக்கும் எதையும் அனுப்பக் கூடாது என்றும், அரசாங்கம் சொல்லும் இடங்களுக்கு, கேட்பவற்றை மட்டும் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளாராம். அமைப்புகளின் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர்.

இது போன்ற அரசியல்களில் மாட்டிக்கொள்ளாமல், எதனைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் உண்மையாய் உழைக்க சிலர் இருக்கின்றோம். கண்டிப்பாய் நாங்கள் இவற்றை முறைபடுத்துவோம். என்னிடம் நிறைய பேர் தொடர்பு கொண்டு பணம் அனுப்புவதாக கூறினார்கள். பண உதவி செய்ய விரும்புவோர்க்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். சோகத்தின் தாக்கம் இருக்கும் நேரத்தில் பலரும் உதவிக்காக பல்வேறு அமைப்புகளின் மூலம் பணம் அனுப்பி விடுகின்றனர். அவை முறையாகத் தான் செலவிடப்படுகின்றன என்று நம்புவோம். எல்லாமே ஒரே நேரத்தில் குவிவதால் அவை முறையான செலவுகளாக இல்லாமல் போகச் சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. இரண்டு வாரம் பொறுத்திருங்கள், பழைய வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும் போது அவர்களுக்குத் தேவைகள் நிறையவே இருக்கும். அப்போது உதவுவதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. நாம் செய்யலாம். இது நம்மை வித்தியாசப்படுத்தி, தனித்துக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் மனநிறைவைத் தரவேண்டும் என்பதற்காக.
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter