Monday, January 24, 2005

 

மான்குரோவ் காடுகள்

வலைப்பதிவில் ராஜா அவர்கள் கடற்கரை முழுவதும் தடுப்பு சுவரெழுப்பும் திட்டத்தை விமர்சித்துள்ளார். அந்த பதிவிலிருந்து...

1. கடற்கரைகளில் மரங்களை அதிகம் வளர்ப்பதே சிறந்த வழி என்பதே அநேக நிபுணர்களின் யோசனையாக இருக்கிறது. நம் ஊரில் கூட மரங்களடர்ந்த பிச்சாவரம் போன்ற கடற்பகுதிகளில் சுனாமியின் பாதிப்பு அதிகமில்லை.

கடலோரக் குடியிருப்புகளை காலி செய்து கடலிலிருந்து சற்று தொலைவான பகுதிகளுக்கு மாற்றலாம். இப்போது சுவருக்கு செலவு செய்ய திட்டமிட்டிருக்கும் நிதியை, இடம்பெயரும் மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத் தர செலவிடலாம்.

முக்கியமாக, கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு கடல் மட்டத்தில்; அலைகளின் ஆர்பரிப்பில் தோன்றும் மாற்றங்களைக் கொண்டு சுனாமி அபாயத்தை எப்படி உணர்வது என்பதை தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மூலம் கற்றுத்தரலாம். சுனாமி அபாயத்தின்போது உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பதை அறிய செய்யலாம்.

2. அடுத்த அதிமுக்கிய நடவடிக்கை, உடனடியாக சுனாமி அபாய அறிவிப்பு மையங்களை ஏற்படுத்துவது. இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஏற்கெனவே இறங்கி விட்டது. இன்று கூட அதைப் பற்றிய முறையான அறிவிப்பு ஒன்றை அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.

அவர் பதிவில் பின்னூட்டமாய் கருத்து தெரிவிக்கையில் மாலன்....

கடலரிப்பை மட்டுப்படுத்த மரங்களளைப் பயன்படுத்துவது என்பது நீண்டகாலமாக இருந்துவரும் ஓர் அறிவியல் முயற்சி. அதிலும் ' மாங்குரோவ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரங்கள் அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அந்த மரங்களின் எளிய தமிழ்ப் பெயர் 'அலை ஆத்தி' அலைகளை ஆற்றுவது (காப்பியை ஆறுவது போல) அவற்றின் முக்கியப் பண்பு என்பதால் அந்தப் பெயர். அதன் இலக்கியப் பெயர் தில்லை.சிதம்பரத்திற்கு அருகில் இந்த மாங்குரோவ் காடுகள் அதிகம் இருந்தன. இப்போதும் பிச்சாவரம் எனப்படும் இடத்தில் இவற்றைப் பார்க்கலாம். கொள்ளிடம் இந்த இடத்தில்தான் கடலில் கலக்கிறது. இப்போது வீசிய ஆழிப்பேரலையில் பிச்சாவரம் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

காவிரி கடலில் கலக்கும் புகார் ஆழிப்பேரலையால் அழிவுற்ற பின் இந்தப் பகுதியில் அலையாத்திக் காடுகளளை வளர்க்கும் முயற்சி ஏற்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம்.

தாவர இயல் ரீதியாக அலை ஆத்திகளுக்கு இந்தக் குணம் உண்டா என்பதை சுந்தரவடிவேல் போன்ற உயிரியல் வல்லுநர்கள்தான் சொல்ல வேண்டும்

அன்புடன்மாலன்


இது தொடர்பாக பதிவுகளில் வெளியாகியுள்ள மேனகா காந்தியின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையை கீழே தருகிறேன்.


அடைக்கலமாகும் வேர்கள்!

கி. இளம்பரிதி


சுனாமி அலைகளால் உண்டான பேரழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்று பல தரப்பினரிடம் இருந்து பல சிந்தனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், தமிழகக் கரையோர நெடுகிலும் பெரிய செயற்கைச் சுவர் எழுப்ப முதலமைச்சர் 2500கோடி வேண்டினார் என்று வாசித்தேன் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சதுப்புநிலக் காடுகளையும், மணல் மேடுகளையும் அமைக்கும் குறைந்த செலவினாலான திட்டம் வகுக்கிறார் என்று பி.கே. பாலசந்திரன் என்ற இந்திய ஊடகவியலாளர் இந்தூஸ்தான் டைம்ஸில் எழுதியதையும் வாசித்தேன். சுனாமி அலைகளை தடுப்பதில் செயற்கை சுவர்களை தமிழகக் கடலோரம் முழுவதும் கட்டினால் இயற்கை எழிலிழந்து விடும் என்பதோடு, வளம் பெருகாது, நிலம் பெருகாது, பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை என்கின்றார் திருமதி. மேனகா காந்தி. அவருடைய ஆங்கிலக் கட்டுரையில் முத்தான சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

"சுனாமி அலைகள் தாக்கிய பிறகு, நமக்கு கிடைத்த அறிவியல் பாடம் ஒன்றே. மணல் மேடுகளை சமப்படுத்தப்பட்ட கரையோரங்களில், பவழப்பாறைகள் உடைத்தெரியப்பட்ட கரைகளில் சேதம் அதிகமாகப் பார்கிறோம். மாலத்தீவில் கரையோரச் சுவர்கள் உதவவில்லையே!. துணைக்கோள் காட்டும் படங்களைப் பாருங்கள்; எங்கெல்லாம் சதுப்புநிலக் காடுகளும், பவழப்பாறைகளும் அழிக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் இந்தியப்பூமியின் நிலப்பரப்பு குறைந்துள்ளது.. இயற்கை தரும் தடுப்புச் சுவர் சதுப்பு நிலக்காடுகள்"

"தமிழகத்தில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை பகரும் பாடத்தை கேட்போம்! இவை ஐந்து கிராமங்கள் கரைக்கு 500 மீட்டருக்கு அருகே உள்ளன. கரையோரம் முழுக்க சதுப்பு நிலக்காடுகள். அலைகள் வத்தாலும், துளி தண்ணீர் கூட கிராமங்களுக்குள்ளே வரவில்லை."

உலகப்புகழ் பெற்ற வேளாணறிவியலாளர் டாக்டர். சுவாமிநாதன், சதுப்புநிலக் காடுகள் பற்றி சொல்லுகிறார், "அடர்ந்த மான்குரோவ் காடுகள் தடுப்புச் சுவர்களென நின்று கரையோர கிராமங்களை காத்துள்ளது! ஒரு கேடயமாக சுனாமியை தன்னகத்தே ஏற்று, அலைகளின் சீற்றத்தைத் தணித்து, அங்கு வாழும் மக்களை காத்துள்ளது". கடலுக்கும், நிலத்துக்கும் இடையே விளையும் தாவரங்கள் தான், மாங்ரோவுகள். அவற்றின் வேர்கள், வண்டல்களை சேர்த்து, நீரோட்டத்தை மிதப்படுத்தி, கடலலைகளால் உண்டாகும் நில அரிப்பை தடுக்கின்றன. நாளடைவில், வேர்கள் சேர்க்கும் வண்டல்களால் கரையோரம் நீட்டப்பட்டு நிலப்பரப்பு கூடுகிறது.

வழிந்தோடும் நீரை உறுஞ்சி, மாங்ரோவ் காடுகள் நிலத்தை, சூராவளி, அலைகள் மற்றும் வெள்ளத்திலிருந்து காக்கின்றது. இந்தக்காடுகள் மாசுக்களை வடிகட்டி, நீரின் தரத்தை உயர்த்துகின்றன. தெளிந்த நீர் கடலுக்குள் ஓடுவதால் பவழப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிக்கிறது. மான்குரோவ் காடுகள் கடல் வாழ் உயிரினக்களுக்கு சத்தான உணவையும் தயாரிக்கின்றன. அலைகளால் இந்த உணவு ஆழி மட்டத்தில் உள்ள உயிரினக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மீனவனுக்கு மாங்குரோவ் இல்லயெனில், மீனும் இல்லை! எனவே, நாம் கடற்கரையோரங்களை நிலைப்படுத்தி, அரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். கடலையே நம்பி பிழைக்கும் மீனவர்களுக்கு மறுவாழ்வமைப்பதோடு, பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மாங்குரோவ் காடுகளை மீண்டும் நிறுவதால் இம்மூன்றையும் ஆற்ற முடியும். மாங்குரோவ் நாங்கே ஆண்டுகளில் காடுகளாகி விடும்.

பல அரசாங்கங்கள் மாங்குரோவ்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பல ஆயிரம் ஹெக்றேர் பரப்பில் மாங்குரோவுகளை மீட்டுருவாக்க குயூபா அரசு மாங்குரோவ் நடும் நிறுவனங்ளை பணியில் அமர்த்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு 3000 கிலோ மீ கரையோரத்தில் மாங்குரோவை மீட்டுருவாக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. ஜாவாத் தீவில் மீனவர்களுக்கு 4-5 ஹெட்றேர் நிலம் அரசு வழங்கி, 20 சதவீதம் மாங்குரோவ் நட, கட்டாயப்படுத்தி உள்ளது. மீனவர் குடிகளே பெரும்பாலும் பாதிக்கபட்டுள்ளதை காண்கின்றோம். மீன் வளம் குன்றி வரும் நிலையில், மறுபடியும் அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் தொழிலை ஆரம்பிப்பதை விட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் அவர்களை ஏன் பிற தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது? முதன்மையாக, மாங்குரோவ் நடுபவர்களாக மாற்றலாமே! இதன் மூலமாக அவர்களுக்கு முறையான நில உரிமையும் வழங்கப்படலாமே!

Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter