Friday, January 21, 2005

 

இனி. . . ?

மாலன்

(திசைகளில் மாலன் எழுதியது மீண்டும் இங்கே பதியப்படுகிறது.)

"அம்மாம் பெரிய அலை" நுனிக்காலில் உன்னி நின்று கையை தலைக்கு மேல் உயர்த்தி விவரிக்கிறாள் 11 வயது நாகப்பட்டினம் மீனா. ஆனாலும் அவளது மூன்றடி உயரம் சுனாமி அலைகளின் உயரத்தை எடுத்துச் சொல்லப் போதுமானதாக இல்லை. "அதோ அங்கனதான் கிளித்தட்டு ஆடிக்கினு இருந்தோம். அந்தாக்கல அம்மாம் பெரிய அலை. பயந்திட்டோ ம்.அல்லாரும் ஓஓஒடி வந்துட்டம். ஆனா எங்க வீடு போயிருச்சு. வூட்டிலிருந்த அம்மாவும் போயிட்டாங்க." மீனாவின் முகம் சடாரென்று இறுகிவிட்டது. அதன் பாவாடையை பிடித்தபடி ஒண்டிக் கொண்டிருக்கும் இன்னொரு குழந்தை "என் பொம்மையும் போயிருச்சு" என்கிறது நிலமையின் தீவிரம் தெரியாமல்.*இலங்கை முல்லைத் தீவில் அந்த வகுப்பறையில் 70 குழந்தைகள் படித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தன. சீறி வந்த ராட்சத அலைகள் சுவற்றைத் தகர்த்துக் கொண்டு உள்ள புகுந்தன. அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய குழந்தைகள் அங்கே இருந்த மாமரத்தில் தொற்றிக் கொண்டன. எல்லாக் குழந்தைகளாலும் மரமேற முடியவில்லை. வெள்ளம் வடிந்த பின் டீச்சர் "உள்ளார போய் பார்த்தாங்க. எல்லாம் செத்துப் போச்சு" என்றன குழந்தைகள் உதட்டைப் பிதுக்கியபடி.

சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தான். தாய்லாந்திலிருந்து சோமாலியாவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சுனாமியால் இறந்து விட்டதாகச் சொல்லும் யூனிசெஃப் அதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்கிறது. அகதி முகாம்களில் உள்ள 1 லட்சத்து 15ஆயிரம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

சுனாமி தாக்குதலில் குழந்தைகள் பல வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன:

இனி என்ன செய்யப் போகிறோம்?

குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளலாமா? அது அவர்களது துயரைக் குறைக்குமே என்று சிலர் எண்ணுகிறார்கள். இணையத்தில் இது குறித்த விவாதங்கள் நடந்தன. நல்ல எண்ணம்தான்.

ஆனால் தத்து எடுத்தல் என்பதற்குப் பின்னுள்ள சட்ட நடவடிக்கைகள், சம்பிரதாயங்கள் எளிதானவை அல்ல. அவற்றை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கோருவதும் சரியல்ல. ஏன்?

குழந்தைகளைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் செக்ஸ் தரகர்கள், ஓரினச் சேர்கையாளர்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அசாதரணமான சூழ்நிலைகளில் நிர்கதியாக விடப்படும் குழந்தைகளை சுலபமாகக் கவர்ந்து கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுகிறார்கள் என்பது ஓர் அதிர்ச்சி தரும் தகவல். இவர்களுக்கென்று வலைத் தளங்கள் உள்ளன. எங்கே 'நல்ல' குழந்தைகள் கிடைக்கும் என்ற தகவல்கள், அவற்றை எப்படி அணுகுவது என்ற ஆலோசனைக் குறிப்புகள் இந்த வலைத்தளங்களில் தரப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளைப் போல வந்து, அங்கிள்களாகவும் ஆண்டிகளாகவும் பழகி குழந்தைகளைக் கவர்ந்து போகிறவர்கள் உண்டு. சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளை இருகை நீட்டி அழைப்பவை.

இந்த பிள்ளை பிடிப்பவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற இப்போதுள்ள சட்ட ரீதியான ஆயுதம் இந்த தத்து எடுப்பதை நெறிப்படுத்தும் சட்டங்கள்தான். இவற்றை எளிமைப்படுத்துவது என்பது ஆபத்தின் வாசல்களைத் திறந்து விடுவதாக ஆக வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகளை பாலுறவிற்காக கவர்ந்து செல்லும் வக்கிரர்கள் தவிர, அவர்களை சிகப்பு விளக்கு பகுதியில் விற்பனை செய்பவர்கள், கொத்தடிமைகளாக விற்பவர்கள், பிச்சை எடுக்க, பிக்பாக்கெட் அடிக்கப் பழக்குகிறவர்கள், வீட்டு வேலைக்குப் பயன்படுத்துபவர்கள் என்று வேறு பல சமூகச் சீர்கேடுகளும் நமது சமூகத்தில் உண்டு.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நில நடுக்கம் காரணமாகப் பேரழிவை சந்தித்த குஜராத்தும், புயலை சந்தித்த ஒரிசாவும் தத்தெடுக்கும் விதிகளை கடுமையாக்கின. குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை கூட குஜராத்தை விட்டு வெளியே போகவில்லை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தத்து எடுத்தல் என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் தீர்வாக அமையாது. மாறாக அது Selective Discrimination ஆக மாற வாய்ப்புண்டு.

குழந்தைகளை ஒரு கலாசாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்து செல்லும்போது ஏற்படக் கூடிய மன ரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சுனாமிக் குழந்தைகளுக்கு அவரவர் பழகிய இடத்திலேயே, அவரவர் கலாச்சார சூழலிலேயே தீர்வு காண்பதுதான் சரியாக இருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1949ல் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ஹெர்மன் என்ற ஆஸ்திரிய நாட்டுக்காரர் sos என்ற கிராமங்களை உருவாக்கினார். இன்று உலகமெங்கும் 1600க்கும் மேற்பட்ட sos 'கிராமங்கள்' இருக்கின்றன. இந்தியாவில் 35 கிராமங்கள் இருக்கின்றன. சென்னையில் தாம்பரத்தில் ஒன்று இருக்கிறது.

ஒரு வீடு, வீட்டில் ஒரு 'அம்மா' சில 'அண்ணன்' 'தம்பி', 'அக்கா' 'தங்கைகள்' என்று இந்த 'கிராமங்களில்' வசிப்பார்கள். இது அநாதை ஆசிரமம் அல்ல. ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா ஒருவர் உண்டு. அவர் அந்தக் குழந்தையுடனே வசிப்பார். குடும்பங்களில் இருப்பதைப் போலவே வீட்டின் அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். இந்த அம்மாக்கள் பயிற்சி தரப்பட்டவர்கள்.

இந்த sos அமைப்பு இந்தியாவில் 13 அவசர உதவி முகாம்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு உதவி வருகிறது, இந்த முகாம்களில் 5600 குழந்தைகள் இருக்கிறார்கள். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இந்த முகாம்கள் இயங்கி வருகின்றன. உணவு உடை மருத்துவ வசதி இவற்றோடு கதை சொல்லுதல், பாட்டுக் கற்றுக் கொடுத்தல், விளையாடு, ஓவியம் என்று குழந்தைகளின் மனதைத் தேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்களிடம் உள்ள வசதிக்கு அதிக பட்சமாக இன்னும் 500 குழந்தைகள் வரைதான் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறார்கள். ஆறு மாத காலத்திற்கு இந்த அவசர முகாம்களை நடத்துவது, அதற்குள் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிப்பது, பின்னர் தேவைகளுக்குத் தக்க கிராமங்களை உருவாக்குவது என்ற திட்டத்தில் இருக்கிறார்கள்.

ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் குறைந்தது ஆறுமாதங்களுக்கு உதவக் கூடியவர்கள் ஒரு குழந்தையை தேர்ந்து ஆதரவளிக்கலாம். விவரங்களுக்கு

http://www.soschildrensvillages.org.uk/sos-children-charity/sponsor-a-child.htm

சுனாமிப் பேரலை மனித மனத்தின் தெய்வ அம்சங்களை வெளியே இழுத்து வந்திருக்கிறது. பல திசைகளிலிருந்தும் உதவிகள் குவிகின்றன. அதுவே கூட ஒரு பிரசினை. இது போன்ற உதவி நிதிகளை நிர்வகிப்பது, அவை தேவைப்படுகிறவர்களை சென்றடையுமாறு செயல்படுவது இவற்றிற்கு சரியான திட்டம், செயல் திறம் மிக்க அமைப்பு இவை தேவை. அது இல்லாத பட்சத்தில் இந்த உதவிகள் கடலில் பெய்த மழையாக ஆகி விடும். உதவி செய்ய விரும்புகிறவர்கள் இதைக் கவனத்தில் கொண்டு உதவிகளை அளிப்பது நல்லது.

இன்னொன்றையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு குழந்தைக்கு அளிக்கும் உதவி என்பது ஒரு நீண்டகால commitment. குறைந்தது பொதுவாக ஆறிலிருந்து 12 வருடம் ஒரு குழந்தைக்கு உதவி தேவைப்படும். ஏதோ இன்று மனதில் பொங்கும் அனுதாபத்தில் கைக்குக் கிடைத்ததைக் கொடுத்து விட்டு மறு ஆண்டே மறந்து போவது அந்தக் குழந்தையை நட்டாற்றில் விடுவதாகும். அது அடுத்த ஆண்டு வேறு யாரிடமாவது கையேந்தி நிற்க நேரிடும்.

உதவுங்கள். ஆனால் குழந்தைகளை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடாதீர்கள்.Comments:
மேலே தத்து குறித்த விவரங்களுக்கு இணையதள முகவரி தரப்பட்டுள்ளது. அதோடு கூடிய மின்னஞ்சல் முகவரி info@rgfindia.com . என்ன காரணமோ தெரியவில்லை, இதை Bளகர் ஒப்புகொள்ள மறுக்கிறது. அதனால் இங்கே தருகிறேன்.
 
வசந்த் & மாலன்,
1. ட்சுனாமி தாக்குதலில் அநாதையாக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளையும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை தத்து எடுத்துக் கொள்ளும் என சில வாரங்களுக்கு முன் செய்திப் பார்த்தேன். அது என்ன நிலையில் இருக்கிறது என விவரங்கள் தெரியுமா?

2. விவேக் ஒபராய், வேர்ல்டு விஷன் போன்றவர்கள்/அமைப்புகள், எப்படி ஒரு/பல கிராமத்தை/ங்களை தத்தெடுத்திகொண்டனர். அப்படி செய்யும்பட்சத்தில், என்ன செலவினங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். ஏதேனும் விவரங்களுக்கு எங்கு செல்வது?

3. இங்கே நீங்கள் முன்பு பதிந்திருந்ததுப் போல், ஏன் கூட்டாக (expesnes will be shared year after year between individuals) குழந்தைகளை தத்தெடுக்கவோ, ஆதரவளிக்கவோ கூடாது?
 
தத்து எடுத்துக் கொள்ளுதல் என்ற சொல் ஆதரவளித்தல் என்ற பொருளில் அண்மைக்காலமாக வழங்கப்பட்டுவருகிறது. சட்ட பூர்வமாகத் தத்தெடுத்தல் என்பது வேறு. சட்டபூர்வமாக தத்தெடுத்த்லுக்கான நடைமுறைகள் சற்று விரிவானவை. (அவற்றை திசைகள் இதழில் காணலாம்) சட்டபூர்வமான தத்து தத்தெடுப்பவருக்குக் குழந்தையின் மீது சட்ட பூர்வமான உரிமைகளை அளிக்கிறது. (குழந்தைக்கும்தான்). ஆனால் ஆதரவளிப்பது என்பதில் இது கிடையாது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளைத்தான் (எல்லோரையும் அல்ல) ' தத்து' எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை கல்விச் செலவு, மற்ற செலவுகளுக்கு ஒரு தொகை அளிப்பது என்றுதான் தனது வலைத் தளத்தில் தெரிவித்து உள்ளது. அதன் 29 டிசம்பர் செய்திக் குறிப்பு தத்து என்ற வார்த்தையை ஒற்றை மேற்கோளில்தான் குறிப்பிடுகிறது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அது சட்டரீதியான தத்தைப் பற்றி பேசவில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் தவிர இந்தியச் சட்டத்தில் நிறுவனங்கள் சட்ட ரீதியாகத் தத்து எடுத்துக் கொள்ள இடமில்லை.

இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளை முதலில் அடையாளம் காண வேண்டும். அது காலம் பிடிக்கும் பணி. ' காணமற் போனவர்களை' இறந்தவர் எனக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. இந்துத் திருமணச் சட்டப்படி ' காணமற் போன' ஒருவரின் மனைவி ஏழாண்டுகளுக்குப் பின்னர்தான் மறுமணம் செய்து கொள்ள முடியும். அதாவது அவர் அந்த ஏழாண்டு காலமும் விதவை அல்ல. கைவிடப்பட்டவர்.

விவேக் ஓபராயின் தத்தெடுத்தலும் ஆதரவளித்தல்தான். ஒரு கிராமம் இழந்த சொத்துக்களை (வீடுகள், பள்ளி போன்றவை) மறுபடியும் உருவாக்கித் தருவதில் அவர் கவனம் செலுத்துகிறார்.

ஆண்டுக்கொருவர் என்று முடிவெடுப்பது விவாதித்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.அல்லது எல்லோருமாக சேர்ந்து ரூ.75000 திரட்ட முடியும் என்றால் (ஒரு குழந்தைக்கு ஆயுள் முழுக்க ஆதரவளிக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளை கேட்கும் தொகை) ஒரு குழந்தையை ஆயுள் முழுக்க ' தத்து' எடுத்துக் கொள்ளலாம். (ஆதரவளிக்கலாம்)

அன்புடன்
மாலன்
 
தோழியர் வலைப்பதிவில் நான் எழுதிய " தத்து நான் என்ன செய்யப் போகிறேன்" http://womankind.yarl.net/archives/002596.html#more பின்னோட்டம் இட்ட திரு. பால்ராஜ்கீதா அவர்கள் சொன்னதுப் போல, இரு பிள்ளைகளுக்கு சட்டபூரவமாக இல்லாமல், ஒரு மாரல் சப்போர்ட்டாய்
மற்றும் பொருளாதார ரீதியாகவும் உதவலாம் என்று எங்கள் குடும்பத்தில் முடிவெடுத்துள்ளோம். நாளைமறு நாள் சென்னைக்கு எட்டுநாள் விஜயத்தில் இதைக் குறித்து முயற்சி எடுக்கலாம் என்று இருக்கிறேன்.பார்க்கலாம்!
உஷா
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter