Thursday, January 20, 2005

 

வலைப்பதிவோரின் பங்கு

(திசைகளில் பத்ரி எழுதிய கட்டுரை மீண்டும் இங்கே பதிய படுகிறது.)

ஞாயிறு, 26 டிசம்பர் 2004. இந்தோனேஷியாவின் சுமத்ரா அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, கடலில் உருவான சுனாமி அலைகளால் ஆறு ஆசிய நாடுகளிலும், நான்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகப்பட்ட உயிரிழப்பு, பொருள் சேதம். இதுவரை கிடைத்த தகவல்கள்படி 1,50,000 பேர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர்; 50 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்த அசாதரண சூழ்நிலையில் வலைப்பதிவுகள் எனப்படும் Blogs ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றின. ஆங்கில வலைப்பதிவுகள் அளவிற்கு பெருமளவு எண்ணிக்கையில் தமிழ் வலைப்பூக்கள் இல்லை எனினும் அவை ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

வலைப்பதிவுகளின் பங்களிப்பினைக் கீழ்க்கண்ட வகையில் பார்க்கலாம்:

1. தகவல் சேகரிப்பு: ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முக்கியமான செய்தி ஊடகங்கள் செய்ய முடியாத அளவுக்கு வலைப்பதிவுகள் சிறு சிறு ஊர்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன. அந்த ஊர்களில் இழப்புகள், நிவராணப் பணிகளில் நிறை/குறைகள், உடனடித் தேவைகள், சில புகைப்படங்கள் என்று நுண்ணிய அளவில், சிறு பகுதியினைக் கூட படம் பிடித்துக் காட்டியுள்ளன.

சுனாமி அலையில் மூன்றாவது பேரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டது. இந்தியாவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஓரிடம் தமிழகம். தமிழகத்தில் பேரிழப்பு நாகை மாவட்டத்தில் மட்டும். தமிழகத்திலிருந்து வலைப்பதிக்கும் பெரும்பாலானோர் சென்னையில் வசிப்பவர்கள். அதிலும் பலர் ஆங்கிலத்தில் வலைப்பதிவுகளை வைத்திருப்பவர்கள். பாதிக்கப்பட்ட இடங்கள் என்று பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவுகள் இரண்டுதான் நேரடித் தகவல்களைத் தந்தது.

நாகையிலிருந்து எழுதும் பாபு, நிவாரணப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தியிருந்த போதிலும், இடையிடையே இரண்டு பதிவுகள் இட்டிருந்தார்:
சோகப்பட்டிணம்

நிவாரணப் பணிகள் மற்றும் உதவிகள்

சென்னையில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி பல்வேறு தமிழ், ஆங்கிலப் பதிவுகள் படங்களோடு எழுதின.

ரஜினி ராம்கி சென்னையில் வசிப்பவர் என்றாலும் மனது மாயவரத்தில். எனவே சென்னை நிலவரத்தை எழுதியபின்னர், மாயவரத்தைச் சுற்றியுள்ள தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளுக்குச் சென்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார்.தமிழகம் முழுதும் ஒவ்வோர் ஊரிலும் ஒன்றிரண்டு பேராவது வலைப்பதிவுகளை உருவாக்கினால், இதுபோன்ற பேரழிவுக் காலங்களில் சரியான தகவல்கள் பலருக்கும் போய்ச்சேர வசதியாக இருக்கும்.

சிங்கப்பூரிலிருந்து ஈழநாதன் தன் தளத்தில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதனை தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டிருந்தார்.

மயூரன் நிவாரணப்பணிகளுக்காக தான் திருகோணமலை செல்வதாகச் சொன்னார்.

2. தகவல் பரிமாற்றம்:

முதல் தகவல் அறிக்கைகள் போக, வலைபதிவுகளின் உதவியால் எந்தெந்த செய்தி நிறுவனங்கள் என்ன தகவல் தருகின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. எந்தத் தளங்களுக்குச் சென்று நிதியுதவி செய்யலாம், தற்போதைய உயிரிழப்பு நிலவரம் என்ன போன்ற விஷயங்களை பல்வேறு
வலைப்பதிவுகள் கொடுத்துள்ள சுட்டிகளின் மூலம் அறிய முடிந்தது.

3. நேரடி நிதியுதவி: வலைப்பதிவுகள் மூலம் என்னைப் போன்ற தனியாரால் பணத்தைச் சேகரிக்க முடிந்தது. அதன் மூலம் சில தேவையான பொருள்களை, தேவையான இடங்களுக்கு வாங்கி அனுப்ப முடிந்தது. மொத்த நிவாரணத்தில் மிகச்சிறிய தொகையே என்றாலும், வலைப்பதிவுகள் மூலம் இதுபோன்ற ஒரு விஷயத்தை நிகழ்த்த முடிந்ததே ஆச்சரியம் தரக்கூடியதொரு விஷயம்.

4. வலைப்பதிவுகளில் நிறைய விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தன. 1,50,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் அழியும்போது, 5 மில்லியன் மக்கள் வீடின்றித் திண்டாடும்போது அது பொதுமக்கள் மனதில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் இதைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் சில கருத்துகள் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்படும் விவாதங்கள், குழாயடிச் சண்டை போலத் தோன்றினாலும் வலைப்பதிவுகள் வளரும் போது ஏற்படும் வலிகள்தான் இவை.

தமிழ் வலைப்பதிவுகள் முதிர்ச்சி அடையும்போது ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், அதன்மூலம் அரசு இயந்திரத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தக்கூடிய அளவுக்கான அழுத்தத்தை உருவாக்குவதிலும் வெற்றி பெறும் எனலாம்.

Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter