Tuesday, January 18, 2005

 

திசைகளிலிருந்து...!

உதவிக்குப் போன ஓர் இளைஞனின் டைரிக் குறிப்புகள்

ரஜனி ராம்கி

(தனது வலைப்பதிவுகளில் எழுதியவற்றின் தொகுப்பாக திசைகளில் ரஜினி ராம்கி எழுதியது இங்கே பதியப்படுகிறது. ரோவ)

திங்கள் டிசம்பர் 27, 2004

தூக்கம் தொலைந்த இரவில் திரளாக ஓடிவரும் அலைதான் கண்முன் நிற்கிறது. இன்னமும் நம்பமுடியாத திகிலாகத்தான் இருக்கிறது. நிலநடுக்க பேச்சுக்கள் முடிந்து விஜய் டிவியில் மதன்ஸ் பார்வையில் லயித்திருந்தபோதுதான் வந்தது அந்த செய்தி.

சன் நியூஸ் பார்த்து கிளம்பி மந்தவெளி வழியாக பட்டினப்பாக்கம் அடைந்தபோது அலைகளின் கோரத்தாண்டவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. பிளாட்பாரமெங்கும் பெண்களும், குழந்தைகளும். கையில் மூட்டை முடிச்சுகளுடன் கண்ககளில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தபடி... ஓரே நாளில் சென்னை மக்களின் வாழ்க்கையை கடல் நீர் புரட்டிப் போட்டுவிட்டது.

பட்டினப்பாக்கம் அரசுக் குடியிருப்பில் மருந்துக்கு கூட ஆளில்லை. முழுங்காலில் பாதியளவு கூட தண்ணீர் இல்லை. ஆனாலும், ஆங்காங்கே மிதக்கும் குடங்களும், பிளாஸ்டிக் வாளிகளும் நிலைமையின் விபரீதத்தை சொல்லிவிடுகின்றன. குடியிருப்புகளைத் தாண்டி மீனவர்களின் குப்பத்தை வந்தடைவதற்குள் துணியால் மூடப்பட்ட இரண்டு பிணங்களை பார்க்க முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக கடல் சுருங்கியிருப்பது போல கரையிலிருந்து இருநூறு அடி தூரம் தள்ளி தனது வழக்கமான வேலையை செய்துகொண்டிருந்தது. நெருங்க ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் ராட்சஸ அலைகள் மேலேழும்பி துரத்த ஆரம்பிக்க பின்வாங்கி ஓடிவந்தேன். இதெல்லாம் ஓரிரு நிமிஷங்கள்தான். மிரட்டிவிட்டு போவதைப் போல திரும்பவும் இருநூறு அடி தள்ளி சாதுபோல நின்று கொண்டது.அப்போதும் கூட நிலைமையின் சீரியஸ்னஸ் புரியவில்லை. அழகழகான சங்குகள், கிளிஞ்சல்கள் கையில் கிடைத்ததால் மெரீனா கரையோரமாக கண்ணகி சிலை இருந்த இடம் வரை வாக் போய்விட்டு சந்தோம் சர்ச் வரும்போதுதான் கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் பகுதி தகவல்கள் கிடைத்தன.

செவ்வாய் டிசம்பர் 28, 2004

மேலையூர், திருவங்காடு உள்ளிட்ட பூம்புகாருக்கும் தரங்கம்பாடிக்கும் இடைப்பட்ட கடற்கரையோர கிராமங்களில் உணவு, உடையின்றி மக்கள் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை அன்பர்களிடமிருந்து பழைய துணிகளை சேகரித்துக்கொண்டு வியாழன் இரவு மயிலாடுதுறை செல்லலாம் என்றிருக்கிறேன்.

புதன் டிசம்பர் 29, 2004

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலிருக்கும் முகாம்களில் உணவு, உடை, மருந்துகள் போன்ற உதவிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடைகளைப் பொறுத்தவரையில் ஏராளமாகக் குவிவதால் மேற்கொண்டு சேகரிப்பது....தற்போதைக்கு அவசியமில்லை .

வெளிநாடுகளிலிருந்து இணைய நண்பர்கள் போன் மூலம் தங்களது அனுதாபங்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். நண்பர் பி.கே.சிவகுமாரின் உதவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க ஆயிரம் பெட்ஷீட்கள் இணைய நண்பர்கள் சார்பாக கரூரிலிருந்து பெறப்பட்டு பூம்புகார் மற்றும் தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கடற்கரையோர கிராமங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் இரண்டு நாட்களில் முழுமை பெற்றுவிடும்.

சீர்காழி பகுதியில் புதுக்குப்பம் என்ற கிராமத்தில் மீனவர் குப்பம் அழிந்ததால் 600 பேர் இறந்துவிட்டனர். பூம்புகாரை சுற்றியிருக்கும் மேலையூர், வாணகிரி போன்ற கிராமப்பகுதிகளிலும் வெகு சிலரே எஞ்சி இருக்கின்றனர். சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள கிழக்கு கடற்கரையோர கிராமத்தில் 500 மீட்டர் தொலைவிலிருக்கும் எல்லா இருப்பிடங்களும் அழிந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து சடலங்களையும் மீட்டுவிட முடியும் என்றே சம்பந்தப்பட்டவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தற்போது போதுமான உதவிகள் கிடைத்துவருகின்றன. இதே நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று நம்பலாம்.

எனவே, இணைய நண்பர்கள் நிதியுதவி செய்வதற்கு கால அவகாசம் நிறைய இருக்கிறது. பத்து நாட்களில் நிஜமான நிலை தெரிந்து விடும். அதற்கு பின்னர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிராமத்தை தத்தெடுத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

வெள்ளி, டிசம்பர் 31, 2004

சென்னையில் வந்த புது சுனாமி பரபரப்பினால் நேற்றிரவே மயிலாடுதுறை வந்துவிட்டேன். கிழக்கு கடற்கரையோரம் வழியாக செல்லும் பேருந்துகள் சுனாமி பயத்தால் தாம்பரம் வழியாக திருப்பிவிடப்பட்டிருந்தன. பாண்டிச்சேரி வரையிலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லாரி நிறுத்தப்பட்டு அதில் பழைய பொருட்களை மக்களிடம் சேகரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. கூடவே பயணித்த நபர் சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவராம். குடும்பம் காரைக்கால் பக்கத்தில் இருக்கிறதாம். இரண்டு இடங்களிலுமே சுனாமி அச்சுறுத்தல்கள் என்பதால் குடும்பத்தோடு இருப்பதே நல்லது என்று முடிவெடுத்து பஸ் ஏறிவிட்டார்.

பாண்டிச்சேரியில் கடற்கரையோரமாக இருந்த மக்கள், வீடுகளை பூட்டிவிட்டு நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். ஆக்ரோஷ அலைகள் எதுவுமில்லை என்றாலும் கடலில் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதாக பாண்டிச்சேரியில் எனக்கு செய்தி கிடைத்தபோது இரவு மணி ஒன்பது.

சுனாமி அச்சுறுத்தல்கள் இருந்தாலும் பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என வழியெங்கும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை என்பது தெரிந்தது. இன்று காலையில் மயிலாடுதுறையிலிருக்கும் இரண்டு முகாம்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தேன். வாசலில இரண்டு லாரிகள். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் தனியார் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட துணிமணிகள், அரிசி மூட்டைகள் உள்ளே கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டு மணிநேரத்திற்கொருமுறை இதுபோல ஏதாவது ஒரு லாரி வந்து இறங்குவதாக வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் குறிப்பிட்டார். முகாம்களில் அதிகமாக கூட்டமில்லை. காலை சாப்பாட்டிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குழந்தைகள் அன்பர்கள் கொண்டு வந்து கொடுத்த புடவைகளை உத்திரத்தில் கட்டி தொங்கவிட்டு அதில் ஏறி உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

சென்னைக்கு தொடர்புகொண்டு பாராவிடமும் பிரசன்னாவிடம் நிலைமையை தெரிவித்தேன். ஒருபக்கம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலிருந்து வந்த மாணவர்கள் குழு தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தனர். நேற்றுவரை டிஸ்போஸிபிள் சிரிஞ்சுகளுக்கு தட்டுப்பாடு இருந்ததாக தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகிலிருக்கும் முகாம்களில் இத்தகைய சிரிஞ்சுகள் இல்லாமல் ஓரே ஊசியை வெந்நீரில் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டிருந்ததாக கூட வந்த நண்பர் சொன்னார். (ஆனால், மாலையில் கிடைத்த தகவலின் படி இன்று காலையை மாநில அரசின் சுகாதாரத்துறை அனைத்து இடங்களிலிலும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு கிடைக்க வழி செய்திருந்தது)

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் படுத்து தூங்க சரியான பாய் இல்லை என்று தெரிவித்தார்கள். அவர்களில் சிலர் இன்று பாய்களும், போர்வைகளும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்கள். நண்பர்களிடம் பேசி நாளைக்குள் 50 பாய்கள் கிடைக்கும்படி ஆர்டர் கொடுத்திருக்கிறேன். மற்றபடி துணிமணிகள், சாப்பாடு போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை.

அங்கிருந்து கிளம்பி தேரழுந்தூர் பக்கமிருக்கும் இன்னொரு முகாமுக்கு சென்றபோது காலை மணி பத்து. முகாமில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சோகத்தினாலோ, அசதியினாலே உறங்கிக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு பற்றி பேச்சு எழுந்ததால் நண்பர்களோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று இங்கேயே தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பின்னர் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பூம்புகாரை நோக்கி பயணமானோம்.

பூம்புகார், மயிலாடுதுறையிலிருந்து கிழக்குபுறமாக சரியாக 24கிமீ தொலைவிலிருக்கிறது. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையும் சீர்காழி-காரைக்கால் சாலையும் சந்திக்குமிடம்தான் மேலையூர். மேலையூரில் சாலையோரத்திலேயே இருக்கும் சீனிவாச மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்கள் கிட்டதட்ட 300 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி. ஒரு பக்கம் உணவுப் பொட்டலங்கள், இன்னொரு பக்கம் புத்தம் புதிய பெட்ஷிட்கள் என்று ஏரியாவே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் ஒரு மூலையில் தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய துணிகள் பரப்பி வைக்கப்பட்டு பிள்ளைகள் அதன் மீதேறி விளையாடிக்கொண்டிருந்தனர். புதிதாக துணி கொண்டுவருபவர்களை அந்த இடத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்வதாக முகாமில் மக்கள் தொடர்பு வேலையிலிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டு பூம்புகாருக்கு கிளம்பினோம்.

ஊருக்குள் நுழைந்ததுமே வந்த கெட்ட துர்நாற்றம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்தவிட்டோ ம் என்பதை அறிவித்துவிட்டது. சுற்றுலாபயணிகளின் வருகையால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அருகிலிருந்த பூங்காவின் காம்பவுண்டுகள் எல்லாமே சிதைந்து நொறுங்கிப்போய் ரோட்டில் கிடந்தன. கடலிலிருந்து 700 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உள்ளே புகுந்திருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். உள்ளே புகுந்த கடல்நீரால் பூங்காவிலிருந்த செடி, கொடிகள் எல்லாமே பட்டுப்போய் பச்சை நிறங்களை இழந்திருப்பதை காண முடிந்தது. நிலநடுக்கம் வந்தால் வெட்டவெளியில் நிற்பது என்கிற விஷயம் இங்கே தலைகீழாக மாறியிருக்கிறது. மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டிடத்தில் தஞ்சமடைவதையே விரும்புகின்றனர்.

கடலோரத்திலிருந்த நீச்சல் குளத்திற்கு பலத்த சேதம். நீச்சல் குளத்திலிருந்து இடது புறமாக கிராமத்தினுள் நடந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இங்கே ஒரு தெரு இருந்தது என்று நண்பர் கைகாட்டிய இடத்தில் நான்கு ஓலைகளும் இரண்டு குடங்களும் மட்டுமே இருந்தன. சிமெண்ட் கொண்டு அரை அடி சைஸில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் கூட சுக்குநூறாக உடைந்து கிடந்திருந்தன. நிறைய மச்சு வீடுகள் திறந்தே கிடந்தன.

இங்கிருந்தும் ஒரு சடலத்தை எடுத்தோம் என்று நண்பர் சுட்டிக்காட்டிய இடத்தில் காய்ந்து போன நான்கு இட்லிகளும் இன்னும் பிரிக்கப்படாத சாம்பார் பாக்கெட்டும் கிடந்ததை மறக்க முடியாது.

அங்கிருந்து புதுக்குப்பம் என்கிற கிராமத்திற்கு நடந்தே சென்றோம். இருநூறு வீடுகள் இருந்த இடங்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்ட மாதிரி இருந்தன. இடம் முழுவதும் மஞ்சள் நிற மண்களை கறுப்பு நிற போர்வையால் மறைத்தது மாதிரி இருந்தது. 100 சதவீதம் சடலங்களை அகற்றி விட்டதாக சொன்னாலும் அதிகமான துர்நாற்றத்தினால் ஒரு அளவுக்கு மேல் கிராமத்தினுள் உள்ளே சென்று பார்க்கமுடியாது போய்விட்டது. திரும்பி வரும்போது இன்னொரு சின்ன கிராமம். பெயர் தெரியவில்லை. ஊர் முழுவதும் பிளீச்சிங் பவுடரை இறைத்துகொண்டிருந்தார்கள். இங்கேயும் தெரு முனையில் பழைய துணிமணிகள் மக்களின் உபயோகத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. எனக்கென்னவோ இதே நிலைமை தொடரும் பட்சத்தில் குவியும் பழைய துணிகளை அகற்றுவதிலும் பிரச்னை ஏற்படும் என்றே தோன்றுகிறது.

அங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் செலவழித்து பாதிக்கப்ட்ட மக்களை பார்த்து பேசிவிட்டு திரும்பவும் காரை நோக்கி நடக்கும்போது இன்னொரு காட்சியையும் பார்க்க முடிந்தது. திருப்பூரிலிருந்து வந்த நண்பர்கள் குழு ஒன்று பாலிதீன் பேக்கில் புத்தம் புதிய போர்வைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நான்கு பேர் நின்று வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பின்னர் அடுத்த அரைமணி நேரத்திற்கு யாருமே வாங்க வரவில்லை. உதவும் மனப்பான்மையோடு வெகுதொலைவிலிருந்து வந்தவர்களுக்கு இதெல்லாமே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.

அங்கிருந்து நாங்கள் போன இடம் நான் ஏற்கனவே பலமுறை போயிருந்த வாணகிரி கிராமம். பூம்புகாரிலிருந்து கடல்வழியாக இது மூன்று கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆனால், சாலை வழியாக சென்றால் 8 கிமீ தூரத்தை கடந்தாகவேண்டும். நவக்கிரக யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஊர் பிரபலம். இங்கிருந்து ஒரு கிமீ தூரத்தில்தான் கேது பகவானின் ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் இருக்கிறது. வாணகிரி கிராமத்தின் மற்ற பகுதிகளில் அதிகமான பாதிப்பில்லை. மீனவர்களின் குப்பத்திற்குதான் பாதிப்பு. இந்த கிராமத்தில் மட்டும் 60 பேர் இறந்து போனதாக தகவல். ஆனாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிகொண்டிருக்கிறார்கள். கடலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கும் வெட்டவெளியில் ஓலைக் குடிசைகளையும் துணிகளையும் வைத்து வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமத்தின் எந்த தெருவிற்கு போனாலும் ஏதாவதொரு தொண்டு நிறுவனம் ஏதாவதொரு உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தது. சேலம் பக்கத்திலிருந்து வந்திருந்த மெடிக்கல் டீம் தன்னுடைய பணிகளையெல்லாம் முடித்துவிட்டு கடல்கொந்தளிப்பு பற்றி மக்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

குப்பங்களின் உள்ளே சென்று நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குறை 300 வீடுகள் இருக்கும். பெரும்பாலானவர்கள் சிதைந்த வீடுகளின் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். முகாம் வாழ்க்கை அவர்களை சலிப்பில் தள்ளிவிட்டிருக்கக்கூடும். முகாமில் சாப்பிட்டுவிட்டு பகல் முழுவதும் இங்கேயே உட்கார்ந்துவிட்டு இரவு நேரத்தில்தான் முகாமுக்கு திரும்புகிறார்கள். முடிந்தளவுக்கு காமிராவால் படமெடுத்துக் கொண்டுவிட்டேன். எல்லாவற்றையும் அப்லோட் செய்ய இரண்டொரு நாட்கள் ஆகும்.

சாலையோரங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தார்கள். எப்படியும் இரண்டொரு நாட்களில் பகுதிக்கு மின்சாரம் வந்துவிடும் என்றார்கள். ஒரு வீட்டில் கடல் தண்ணீரில் ஊறிப்போன மூன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கையில் நான் எடுத்து பார்த்தும் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெண்மணிக்கு அழுகை தாங்கமுடியவில்லை. அவருடைய பையனின் பாடப்புத்தகம் என்று கூட இருந்த பெண்மணி சொன்னதும் தர்மசங்கடமாகிவிட்டது எனக்கு.

கடல் தண்ணீரே வாழ்க்கையாக இருந்தவர்களுக்கு இதெல்லாமே புதிதான எதிர்பாராத விஷயம்தான். மழை, புயல்களையெல்லாம் எதிர்கொண்டவர்களுக்கு இதுவொரு மோசமான அனுபவம். ராட்சத புயல் வந்திருந்தால் கூட அவர்களால் தப்பித்திருக்க முடியும். சிலரின் கருத்துக்கள் புதுவிதம்஡க இருந்தது. வந்தது கடல் தண்ணீர் மாதிரியே இல்லை. கருப்பு கலரில் சாக்கடைத்தண்ணீர் போல எங்கள் மீது பாய்ந்து வந்தது என்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதுபோலவே கடற்கரை முழுவதும் கருமணலாகவே காட்சியளிக்கிறது. சுனாமி அலைகள் வருவதற்கு முன்பாக படகுகள் ஓன்றையொன்று மோதிக்கொண்டதாக சொன்னார்கள். கரையில் தலைக்குப்புற கிடக்கும் படகுகள் எல்லாமே மரக்காணம், நாகப்பட்டினம் என வெவ்வேறு இடங்களிலிருந்து அடித்துவரப்பட்டவை.

கிளம்பும்போது மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் தனது சோக கதையை சொல்லிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் பேசினோம். மொழிதெரியாதவர்களெல்லாம் சாப்பாடும், துணிமணிகளும் கைநிறைய கொடுப்பதாக சொன்னார். பேச்சின் இடையே தன்னுடைய ஒரு பேரனும், மருமகளும் இறந்துவிட்டதாக சொன்னார். தான் மார்க்கெட்டுக்கு போனதால்தான் தன்னால் தப்பிக்க முடிந்தது என்றார். பாய், போர்வை வேண்டுமா என்று கேட்டதற்கு சிதைந்து போயிருந்த தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த போர்வையை காட்டி அது போதும் என்றார். கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது. அவர் வசிக்கும் தெருவில் எத்தனை பேர் இறந்தார்கள், எப்போது உதவி கிடைத்தது என்பதையெல்லாம் விவரமாக சொன்னார். உடம்பை பார்த்துக்கோ பாட்டின்னு சொல்லிவிட்டு கிளம்பும்போது அவர் சொன்ன வார்த்தைதான் என் கண்களில் கண்ணீரை முட்டிக்கொண்டு வரவழைத்துவிட்டது.

'சாப்பிட்டு போங்கய்யா....'

சனி, ஜனவரி 01, 2005

உணவு, உடை விஷயங்களை தவிர்த்து சின்ன சின்ன உதவிகளில் எல்லோரும் கவனமெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். கடைகளில் ஒரு ரூபாய்க்கு விற்கும் தேங்காய் எண்ணெய், ஐந்து ரூபாய் ரின் சோப், இரண்டு ரூபாய் ஹமாம் சோப் போன்றவற்றை வாங்கி மக்களுக்கு தர ஆரம்பித்துள்ளார்கள். உள்ளூரிலிருக்கும் முகாம்களுக்கு நானும் 50 தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ரூபாய் ஹமாம் சோப்களை வாங்கி கொடுத்திருக்கிறேன். சென்னையிலிருந்து பத்ரி தொடர்பு கொண்டார். பத்ரியின் மூலமாக குறைந்த விலையில் தேங்காய் எண்ணெய், குளியல் சோப்களை வாங்கிய எனது நண்பர் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்.

நண்பர் பி.கே.சிவகுமாரின் முயற்சியால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 1740 பெட்ஷீட்களுக்கான ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். இவற்றை கரூர் நகரத்துக்கு சென்று டெலிவரி எடுத்து வரவேண்டும். தற்போதைய சூழலில் புது துணிகள் குவிந்தாலும் முகாம்களில் அவற்றைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளும் வசதியில்லாததால் ஒரு வாரம் கழித்து விநியோகித்தால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே புதன்கிழமைக்கு பின்னர் டெலிவரி எடுப்பதாக கரூரிலிருக்கும் பி.கே.சிவகுமாரின் உறவினருக்கு தகவல் சொல்லிவிட்டேன். நாகையிலிருந்து வலைபதியும் நண்பர் அறுசுவை பாபுவும் அவரது பகுதிகளில் சில பெட்ஷிட்களை விநியோகிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உணவு, உடை தவிர மற்ற பொருட்களை வழங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று சில இடங்களில் தனியார் குழுக்களின் சார்பில் பூட்டுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் புதுப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. இருந்தாலும் தொடரும் சுனாமி பயத்தால் மீனவர்கள் தங்களது வழக்கமான இடங்களுக்கு சென்று சமைக்கும் அளவுக்கு மனதளவில் தயாராகவில்லை. சில இடங்களில் உணவு, உடைகளெல்லாம் வேண்டாம்; கட்டுமரங்கள் வாங்க உதவி செய்தாலே போதும் என்று உதவி கோரத் தொடங்கியிருக்கிறார்கள். உணவுகளைப் பொறுத்தவரையில் அசைவ உணவுகளை சாப்பிட்டு பழக்கப்பட்டு போனவர்களால் புளிசாதத்தையும் தயிர்சாதத்தையும் கிரகிக்க முடியவில்லை!

செவ்வாய்க் கிழமை ஜனவரி 4 2005கையில் ஜெப மாலை ஏந்தி கண் மூடி கிறிஸ்துவ சகோதரர்கள் சொல்லும் பிரார்த்தனை ஸ்லோகங்கள் அலைகளின் இரைச்சலில் காதில் விழுவில்லை.

ஆனால், பிரார்த்தனைக்கான காரணம் புரிகிறது. கடல் அலைகள் கரைத்தாலும் இன்னமும் கரையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயிலை பார்க்கும்போது பழைய ஞாபகமெல்லாம் வருகிறது. அனந்தமங்கலம் ஆஞ்சனேயரை தரிசித்துவிட்டுக் கடற்கரையோரமாகவே காலாற நடந்துதரங்கம்பாடி வரும்போது, தாகமெடுத்து உப்பு தண்ணீர் குடித்த அந்த மீனவர் குப்பம் இப்போது இல்லை.

ஆஜானுபாகுவாய் கடற்கரையோரமாய் உயர்ந்திருக்கும் பிரசித்தி பெற்ற தரங்கம்பாடி கோட்டையில் தற்போது எலி கூட இருக்க நினைக்காது என்று சொல்லலாம். வருஷக்கணக்காக புயலையும் மழையையும் பார்த்த சலித்த கோட்டைக்கு சுனாமியெல்லாம் சும்மா. சுனாமியின் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல அமைதியாகவே இருக்கிறது. கோட்டையை கட்டியவரின் கல்லறையாக சொல்லப்படும் அந்த நினைவுச்சின்னமும் கூட!

இந்த முறை டூவீலரிலேயே புறப்பட்டுவிட்டோ ம். காரைக்கால்பகுதியிலிருக்கும் மீனவர் குப்பங்களுக்குப் போய்வர டூவீலர்தான் செளகரியம்.பத்ரியின் மற்றும் எனது ரூம்மேட்டின் உதவியால் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த இரண்டாயிரம் சோப் மற்றும் இரண்டாயிரம் தேங்காய் எண்ணெய் சாஷேக்களை 300 எண்ணிக்கையில் தனித்தனியாக பிரித்து வண்டியில் ஏற்றிக்கொண்டோ ம். ஆக்கூரை தாண்டியதுமே நாகப்பட்டினத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த மீட்பு நடவடிக்கையினரின் வேனிலிருந்தவர்கள் சொல்லித்தான் ஏரியாவில் எண்ணெய், சோப் வகையறாக்களுக்கு தட்டுப்பாடு இருப்பது தெரிந்தது. சடலங்களை கையாள்பவர்களுக்கு தேவையாக இருக்குமென்று அவர்கள் சொன்னதன் பேரில் ஒரு முப்பது சாஷேக்களை தனியாக கட்டிக் கொடுத்துவிட்டோ ம்.

காரைக்கால் நெடுஞ்சாலைக்கு பக்கமாகவே இருக்கிறது அந்தத் தோரண வாயில். கடலிலிருந்து சரியாக அரை கி.மீ தூரத்திலிருக்கும் தோரண வாயிலில்தான் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டனவாம்.

கோட்டையை சுற்றிலும் ஏராளமான கிறிஸ்துவ கல்வி நிலையங்கள். ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள். அப்படியொரு பயிற்சி பள்ளியில்தான் தரங்கம்பாடி மீனவர்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். தரங்கம்பாடியை பொறுத்தவரை மீனவர் குப்பங்களின் எண்ணிக்கை குறைவுதான்.

முகாமுக்கு நான் போய் சேரும்போது யாரோ ஒரு முக்கியஸ்தர், சிஸ்டரிடம் உதவிகள் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். தேங்காய் எண்ணெயும், குளியல் சோப்பும் கொண்டு வந்திருப்பதை தெரிவித்ததுடன் நம்மை காத்திருக்கச் சொல்லிவிட்டு போனார். அரைமணி நேரம் கழித்து பாதிக்கப்பட்டப் மக்களுக்கு நமது கையாலேயே குளியல் சோப்புகளை கொடுக்கச் சொன்னவரை மறுத்துவிட்டு அவரையே கொடுக்க சொன்னோம். எஞ்சியிருந்த குளியல் சோப்புகளையும் இன்னொரு முறை விநியோகித்துவிட்டு வேறு ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதாகச் சொல்லி நமது செல் நம்பரையும் வாங்கி வைத்துக்கொண்டார்.

நாகை செல்லும் ரோட்டிலிருந்து இடது பக்கம் திரும்பி பொறையார் நோக்கி பயணம். கடலை நோக்கி மாலையை சுழற்றிப் போடும் ராஜீவ் காந்தியின் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மூட்டை மூட்டையாக... வேறென்ன.... உதவியாக வந்து குவிந்த பழைய துணிகள்தான். பொறையாரில் மட்டும் மூன்று அகதி முகாம்கள். எல்லா முகாமிலும் நாம் எடுத்துக்கொண்டு வந்த பொருட்களை வாங்க தயங்கினார்கள். அரசாங்க உத்தரவாம். தரங்கம்பாடியில் சனிக்கிழமையன்று கர்நாடகத்திலிருந்து வந்த உதவி வேனை சிலர் தங்களது பகுதிக்குக் கடத்திக் கொண்டு போய் சூறையாடிய சம்பவத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. தனியார் கொண்டு வரும் எந்தப் பொருட்களானாலும் ரெவின்யூ ஆபிஸ் மூலம் அரசாங்க கிடங்கிற்கு எடுத்துச் சென்று சகல விபரங்களையும் ஒரு ரெஜிஸ்தரின் எழுதிவிட்டு நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறார்கள். மயிலாடுதுறை பஞ்சாயத்து ஆபிஸில் வேலை பார்க்கும் நண்பரை தொலைபேசியில் உதவிக்கு அழைத்ததும் எத்தனை பேர் பொறையார் ஏரியாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற விபரம் நமக்கு கிடைத்துவிட்டது. அதற்கேற்றபடி கொண்டு வந்த பொருட்களை பிரித்து கொடுத்து பார்மலாட்டீஸ் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்பும்போதே மதியம் ஒன்றரை மணியாகிவிட்டது.

அங்கிருந்து சந்தரபாடி கிராமம். தரங்கம்பாடி, காரைக்கால் வட்டாரத்திலேயே அதிக பாதிப்புக்குள்ளான கிராமம். டூவீலரிலேயே கிராமத்துக்கு உள்ளே வரமுடியாத நிலை. வேன், கார் பற்றி கேட்கவே வேண்டாம்! ஊருக்கள் நுழைவதற்கு அரை மீட்டர் தூரத்திலேயே விளைச்சல் நிலத்தில் ஒரு படகு நிற்கிறது. சந்திரபாடி கிராமத்தின் அமைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடா, பாண்டிச்சேரியா என்று குழம்பும் அளவுக்கு நில அமைப்பு. காரைக்கால் எல்லையோரமாகவே பயணித்து தமிழ்நாட்டிற்கு வந்து, பின்னர் காரைக்கால் அதற்கு பின்னர் தமிழ்நாடு... ஒருவழியாகத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்பதை கிராமத்திலிருந்தவர்தான் உறுதிப்படுத்தினார். தீப்பெட்டியை நெருக்கமாக அடுக்கி வைத்த மாதிரி சின்ன சின்ன குடிசைகள், கடற்கரையிலிருந்து ஐம்பதே அடி தூரத்தில்!

நாம் போய்ச் சேருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் மூன்று சடலங்களைத் தோண்டி எடுத்தார்களாம். ஆங்காங்கே குப்பைகளை போட்டு எரித்துக்கொண்டிருந்தார்கள். கடலோரமாக ஓரிடத்தில் மட்டும் அதிகமான குப்பைகளை போட்டு எரித்துக் கொண்டிருந்தார்கள். 'குப்பையை எரிச்சா இவ்ளோ நாத்தமாடா வரும்'னு நண்பரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே கிராமத்து ஆசாமி குறுக்கிட்டார். 'அதெல்லாம் எடுத்த பொணமுங்க!

'ஊர் முழுவதும் மருந்து தெளித்து வைத்திருக்கிறார்கள். சந்திரபாடியின் பிரசிடெண்ட் சுறுசுறுப்பான இளைஞர். ஊருக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் பெரிய கும்பிடாக போட்டு வருவேற்கிறார். எங்கிருந்து வந்திருக்கிறோம் என்கிற விபரங்களையெல்லாம் கேட்டுவிட்டு அவரது செல் நம்பரையும் கொடுக்கிறார். நாம் கேட்பதற்குள்ளாகவே அவரே சொல்லிவிடுகிறார். 'இப்போதைக்கு எல்லாம் கிடைக்கிறது ஸார். பத்து பதினைஞ்ச நாள்கழிச்சுத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை' பெரும்பாலான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் ஊருக்குள் வந்து உட்கார்ந்திருப்பதையே விரும்புகிறார்கள். ஊருக்குள் வந்து உதவிகள் செய்பவர்களுக்காகவே சின்னக் கிடங்கு மாதிரி ஒரு ஸ்கூலை வைத்திருக்கிறார்கள். மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஒலு கோஷ்டியினர் புதுப் புடவைகளையும், புது பிளாஸ்டிக் குடங்களையும் மக்களுக்கு விநியோகித்துவிட்டு செயற்கையாக ஒரு போஸ் கொடுத்து அதை காமிராவால் கவர் செய்து கொண்டிருந்ததை பார்த்து வேடிக்கையாகவும் இருந்தது; வேதனையாகவும் இருந்தது.

அங்கிருந்து நான்கு கி.மீ தூரத்தில் காரைக்கால் பீச். கடற்கரைக்கு போவதற்கு காரைக்கால் - நாகை மெயின் ரோட்டிலிருந்து அரை கி.மீ பயணம் செய்ய வேண்டும். மெயின் ரோட்டிலிருந்து திரும்பும்போதே ஒரு பெரிய படகு தலைக்குப்புற கிடக்கிறது. தார் சாலையையும் ஒரு கை பார்த்து ரோட்டோ ரத்திலிருக்கும் கைப்பிடிச் சுவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டுத்தான் போயிருக்கிறது சுனாமி அலைகள். லைட் ?வுஸில் டூட்டி பார்த்துக்கொண்டிருந்த வாட்ச்மேன்தான் விபரமாக சொன்னார். காரைக்கால் பீச்சிலிருந்து மட்டும் இருபது சடலங்களை மீட்டிருக்கிறார்களாம். அவற்றில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் வந்தவர்களும் காராத்தே பயிற்சி பெற வந்த குட்டீஸ்களும்தான். இரண்டு பொடியன்களை காப்பாற்ற முயற்சி செய்து இரும்பு தூண் தடுத்ததால் தலையில் அடிப்பட்ட கராத்தே பயிற்சியாளர் தற்போது நாகை பொது மருத்துவமனையில்.

வெறிச்சோடி கிடக்கிறது காரைக்கால் பீச். இன்னமும் கடற்கரையோரமாக நடக்கத் தயங்கும் மக்களுக்கு மத்தியில் ஓரே ஒரு மாடு மட்டும் ஆடாமல், அசையாமல் படுத்துக்கிடக்கிறது. சுண்டல் ஸ்டால்களும், சர்பத் ஸ்டால்களும் சகட்டு மேனிக்கு நொறுங்கிக் கிடக்கின்றன. காரைக்கால் பீச்சில் யாரும் சங்குகளையும் கிளிஞ்சல்களையும் பார்க்க முடியாது. ஆனால், தற்போது ஏதோதோ வடிவங்களில் கிளிஞ்சல்கள் வாரிக்கிடக்கின்றன.கடற்கரையோரமாக புயல் எச்சரிக்கை மையம் பத்தடி உயர காம்பவுண்டு சுவருக்குள் பத்திரமாக இருக்கிறது. ஆனால், காம்பவுண்டு வளாகத்தினுள் ஒரு படகு ஒன்று தலைகுப்புற கிடப்பதை வைத்து தாக்கிய சுனாமி அலைகளின் உயரத்தை யூகிக்க முடிகிறது.

கையிலிருந்த 200 சோப்களை காரைக்கால் நகரத்திற்குள்ளேயே இருந்த முகாமில் சேர்ப்பித்தோம். கட்டுமரங்கள் கொடுத்தாலே போதும், நாங்கள் எப்படியாவது பிழைச்சுப்போம்னு நிறைய மீனவர்கள் சொல்வதை கேட்க முடிந்தது. ஆயிரம், இரண்டாயிரம் செலவு செய்து ஊர் விட்டு ஊர் வந்து உதவிகள் வழங்கிடும் தன்னார்வலர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் கிளாஸ் எடுத்தாகவேண்டும்.

நிறைய பேர் முகாம்களில் போடும் சாப்பாடு பிடிக்காமல் பக்கத்திலிருக்கும் மெஸ்களுக்கு போய் நான் வெஜ் ஐட்டங்களை ஒரு வெட்டு வெட்டுகிறார்கள். 'ஆயிரம் கஷ்டம் வந்தாலும் அலட்டிக்காம சாப்புடுறானே'ன்னு கூட வந்த நண்பர் பொருமித் தள்ளினார். 'உண்மையிலேயே பாதிக்கப்பட்டவனா இருந்தா சோறு, தண்ணி கூட உள்ளே போவாது...இவனெல்லாம் கருப்பா அலை வருதுன்னு சொன்னவுடனேயே காசு கிடைக்குமேன்னு ஓடி வந்து உட்கார்ந்துகிட்டவனுங்க'ன்னு இன்னொரு நண்பர் கமெண்ட் அடித்தார். எனக்குதான் ஒண்ணும் புரியலை!

தமிழக அரசின் நடவடிக்கைகளில் கடந்த மூன்று நாட்களாகவே அசுர வேகமிருப்பதை சம்பந்தப்பட்ட ஏரியாவிலிருப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அரசு இயந்திரத்தையெல்லாம் ஒழுங்குப்படுத்தி ஞாயிறு அன்றே களத்தில் இறங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தினந்தோறும் வரும் அதிரடி அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் அஸ்திரங்கள்தான். இந்த ஆடு புலி ஆட்டம், அறிவுப்பூர்வமாக அமைந்தால் தமிழ்நாட்டின் கஜானா காப்பாற்றப்படும். ஆனாலும் சுனாமி அலைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னைப் பொறுத்தவரையில் உதவி மனப்பான்மை தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது; அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கூட்டமும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் லயன்ஸ், ரோட்டரி கிளப், ஆர்.எஸ்.எஸ், கிறிஸ்துவ திருச்சபை படை தவிர வேறெந்த அரசியல் அமைப்பும் இல்லை. கழகங்களை காணவில்லை. சின்ன விஷயத்துக்கெல்லாம் கொடி பிடிக்கும் கம்யூனிஸ தோழர்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதியினர் இல்லையென்பதாலோ ஜாதிக்கட்சிகளும் களத்தில் இல்லை. கஷ்டம் என்று வந்தால் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், ரசிகர் மன்றங்களை நம்பாமல் இருப்பதுதான் நல்லது.

இரண்டு நாட்களாக எத்தனையோ பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போயிருந்தாலும் சந்திரபாடியை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. சுனாமி சோகத்தை அப்படியே முகத்தில் அறைவது மாதிரியான குப்பத்து காட்சிகள். வாழ்க்கையை தொலைத்த கிராமத்து மக்கள். உதவிகளை பெற்றுக்கொள்வதில் அவசரம் காட்டியோ வேறு ஏதாவது கிடைக்குமா என்கிற ஆர்வமோ இல்லாத இறுக்கமான முகங்கள். இரண்டு குழந்தைகளையும் மடியில் படுக்க வைத்துக்கொண்டு வழியும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் மனைவியை சுனாமிக்கு பலி கொடுத்த கணவன். எந்த தகப்பனுக்கும் நேரக்கூடாத சோகம். இப்போதைக்கு அவர்களுக்கு நாம் தர வேண்டியது உதவிகள் அல்ல; ஆறுதல்தான்.


Comments:
/// ஆயிரம், இரண்டாயிரம் செலவு செய்து ஊர் விட்டு ஊர் வந்து உதவிகள் வழங்கிடும் தன்னார்வலர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் கிளாஸ் எடுத்தாகவேண்டும் ///

அய்யா,

நீங்க கொடுக்கற ஆயிரம் ரெண்டாயிரத்துக்கே இவ்வளவு எதிர்பார்த்து கிளாஸ் எடுக்கற லெவலுக்கு யோசிக்கரீங்களே, உண்மையில கோடிக்கனக்குல கொடுக்கற மக்களும் அரசாங்கமும் எவ்வளவு எதிர்பார்க்கும்?.
 
தங்களின் எதிர்வினைக்கு நன்றி. எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. கொடுக்கிறோமே அதுதான் முக்கியம். நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கிக்கொண்டு நம்மை புகழ்ந்து தள்ளவேண்டும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் அன்பர்கள் தரும் உதவியை மனம் கோணாமல் வாங்கலாமே! எங்கிருந்தோ கர்நாடகாவிலிருந்தெல்லாம் வந்து அன்போடு உதவிசெய்பவர்களை அடுத்த முறையும் உதவி செய்ய தூண்டும் வகையில் அவர்கள் செயல்படவேண்டும் என்று நாம் நினைப்பது தவறா?!
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter