Thursday, January 13, 2005

 

மயிலாடுதுறையிலிருந்து....

சென்னையிலிருந்து புறப்பட்டு நேராக கரூர் சென்று 1740 Blankets (jதரைவிரிப்பு/மெகா சால்வை) பெற்றுக்கொண்டு மாலை நான்கு மணிக்குதான் மயிலாடுதுறை வந்து சேர்ந்தேன். பயண அனுபவங்கள் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.



1740 Blankets வாங்க போன இடத்தில் இரண்டு மூட்டை அரிசியையும் அன்போடு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் சரிவர விநியோகிப்பது கஷ்டமான காரியம்தான் என்று நினைத்தேன். இங்கே வந்தபின்புதான் தெரிந்தது அது ரொம்ப... ரொம்ப....கஷ்டமான காரியம்!



இதுவரை 220 Blankets விநியோகம் செய்திருக்கிறேன். எஞ்சியவை எங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வாணகிரி, சின்னங்குடி கிராமத்து பஞ்சாயத்து தலைவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு எல்லாவற்றையும் முழுவதுமாக விநியோகிப்பதை விட கையிருப்பில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விநியோகம் செய்வதே நல்லது என்று நினைக்கிறேன்.

தனியார்கள் யாரும் நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்குவது தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவித நிவாரணப் பொருட்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பெறப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு சிவில் சப்ளை குடோன்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. சிவில் சப்ளை குடோன்களிலிருக்கும் நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு முறையாக விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், பிரச்னைகளுக்கு காரணமே தாலுகா ஆபிஸிலிருந்து சிவில் சப்ளை குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அரசாங்க வழிமுறைகளில்தான். சில பொருட்கள் தவற விடப்படுகின்றன; பல பொருட்கள் தாமதாக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இன்று மாலைக்குள் நான் பார்த்தவரையில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பியிருக்கிறது. சுனாமி நிவாரணம் என்கிற பேனர் கட்டி தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்தெல்லாம் வந்து கொண்டிருந்த லாரி, வேன்களின் சத்தம் குறைந்திருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களின் வேலைப்பளு எகிறியிருக்கிறது. பொங்கல் விடுமுறை என்பது பெயரளவுக்குத்தான்!

சீர்காழி பகுதியை சேர்ந்த கடலோரப் பகுதி கிராமங்களில் நித்தம் ஒரு போராட்டம் நடந்து வருவதாக செய்தி. முன்கோபத்துக்கு பெயர் போன தமிழக அரசை சோதிக்கும் வேலைகளில் சிலர் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்.

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை ஆங்காங்கே இருந்த சுனாமி நிவாரண முகாம்கள் கலைக்கப்பட்டுவிட்டன. பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் உடனடி நிவாரண தொகையான ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. ஆளுக்கு ஒரு லட்சம் அளிக்கும் வேலையும் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

கடற்கரையிலிருந்து நூறு மீட்டர் தள்ளி தார் துணிகளான தற்காலிக கூடாரங்கள் தனித்தனியாக கட்டப்பட்டு அங்கே பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஓலைக் குடிசைகளும் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூடங்கள் சொற்ப மாணவர்களை கொண்டு இயங்குகின்றன.

மீனவர்கள் மத்தியில் சகஜ வாழ்க்கை திரும்பி விட்டது. கட்டுமரங்கள் கைவசமுள்ள மீனவர்கள் மீன்பிடிப்பில் இறங்கிவிட்டனர். மீனவ குடும்பங்களுக்கு தினசரி அரிசி, பருப்பு போன்றவை சிவில் சப்ளை குடோனிலிருந்து இரண்டு நாளைக்கொரு முறை சப்ளை செய்யப்படுகின்றன.

சுனாமி பாதுகாப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை ஆரம்பமாகி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்கள் மத்தியில் ஆலோசனைகள் நடந்து வருவதாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். நேற்று மாலை கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த மாலன் ஸாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சுனாமி எச்சரிக்கை மையங்களின் அவசியம் பற்றி விரிவாக திசைகளில் எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தார். இவ்விஷயத்தில் அரசு கொஞ்சம் அவசரம் காட்டுவது நல்லது. தனியார் அமைப்புகளும் மீனவர்களுக்கு கட்டுமரம் வாங்குவது, பழைய துணி கொடுப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் இதுபோன்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, செயல்படுவது நல்லது என்பது அடியேனின் அபிப்பிராயம்.

மீனவ குடும்பங்களின் கைகளில் தேவைக்கதிகமான பணம் உள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் எளிதான வழிமுறையில் பணங்களை டெபாசிட் செய்வதற்கு இனியாவது ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம் இந்த 'கொசுறு'வாக கூட இருக்கலாம்!

கொசுறு - தமிழகத்தின் கடலோர கிராமங்களின் டாஸ்மாக் மையங்களில் எந்நாளும் இல்லாத வகையில் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை அதிகரித்திருப்பதாக ஒரு செய்தி.

- ஜெ. ரஜினி ராம்கி
Comments:
ரஜனி ராம்கியின் இந்தப்பதிவை வாசிக்கும்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. ஆகக்குறைந்தது அடிப்படை வசதிகளாவது பூர்த்திசெய்யப்பட்டிருக்கிறதே. இன்னும் நம்பிக்கையான செய்திகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வரவேண்டும்.
......
ஈழத்திலிருந்து இப்படி நம்பிக்கையான செய்திகள் விரைவில் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.
 
டாஸ்மாக் மையங்களில் ....

டாஸ்மாக் மையம் என்றால் என்ன..கூட்டுறவு பண்டகச்சாலையா..

வாசன்
 
நல்ல பதிவு ரஜினி. தொடருங்கள்!
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter